Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்யார் இந்த மதுரை வீரன்; ஏன் பலராலும் இவன் போற்றப்படுகிறான் - வீரனின் அசாத்தியத்தை அறிந்து...

    யார் இந்த மதுரை வீரன்; ஏன் பலராலும் இவன் போற்றப்படுகிறான் – வீரனின் அசாத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்!

    மதுரை வீரன் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சன்னதி காணப்படுகிறது. மதுரைவீரன் தனித்தும், அல்லது அவருடைய இரு மனைவியருடனும் வணங்கப்படுகிறார்.

    மதுரைவீரன் ஒரு உண்மையான கதாபாத்திரம் இவர் வீரத்திற்கும் காதலுக்கும் அடையாளமாக இருக்கிறார்.

    தோற்றம் :

    மதுரை வீரன் சிலை, வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அரிவாளுடனும் முறுக்கிய மீசையுடனும் கம்பீரமாக இவர் காட்சியளிக்கின்றார்.

    வழிபடும் முறை:

    மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரை வீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர்.

    மதுரை வீரன் வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், பாலி, இலங்கை, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிப்பாடு என்று கூறுவதை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

    உண்மையில் சிவன், ஏசு, புத்தன், முருகன், ராமன், கிருஷ்ணனை போல் மக்களை காக்க நீதி, சத்தியம் மற்றும் தர்மம் ஆகியவற்றை மண்ணில் நிலை நாட்ட அவதரித்த ஒரு தெய்வப் பிறவிதான் மதுரைவீரன் என்று கருதுகின்றனர்.

    மதுரை வீரன் வழிபாடு என்பது முறையான சைவ வழிபாடாகும். அவர் ஒரு காவலர் என்ற ஒரு காரணத்தினால் ஆதியில் பாமர மக்கள் அவரையும் காவல் தெய்வங்களில் ஒன்றாக இணைத்து அசைவ பூஜை முறைகளை நிறைவேற்றினர்.

    இவர் தன் வாழ்நாளில் சாதி எதிர்ப்பையும் தன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டு போராடி இருந்ததால், அவர் மறைந்தப் பின் அன்னை மதுரை மீனாட்சியின் ஆணையையும் மீறி ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தினுள் வீரனுக்கு சிலை வைப்பதை தவிர்த்து மாறாக அவர் காவல் இனத்தவர் தெய்வம் என்றும் ஒதுக்கி விட்டனர்.

    உண்மையில் அவருக்கும் காவல் தெய்வங்களான முனிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கருமுனி, செம்முனி, வால்முனி, ஜடாமுனி, கும்பமுனி, கங்கை முனி, நாதமுனி, மச்சமுனி, சிவமுனி, தவமுனி என இன்னும் பல முனிகள் இருப்பினும் மதுரைவீரன் என்று பெயர் வகையில் மாறுபட்டு நிற்பதிலேயே கண்டுக்கொள்ள இயலும்.

    ஒன்றும் அறியாத பாமரமக்கள் அவர் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததை கருத்தில் கொண்டு அவரையும் மற்ற காவல் தெய்வங்களோடு ஒருவராக்கி விட்டனர். எனவேதான் அவர் காவல் தெய்வமானார்.

    இன்னும் சொல்லப்போனால் வரலாறு கொண்ட காவல் சரித்திர நாயகர்கள் என்றால் அது மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பன் மட்டும்தான். ஆனால் தொடக்க புள்ளியில் இருந்தே காவல் தெய்வங்கள் அனைவரையும் மக்கள் ஒரே கோட்டின் கீழ் நிறுத்தி சகோதரர்களாக வரிசை படுத்தி வணங்கினர்.

    நாளடைவில் காவல் தெய்வ சக்திகள் யாவும் ஒரே சக்தியாய் வடிவம் பெற்றதை ஆன்மிகவாதிகள் ஒப்பு கொள்கின்றனர். எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது.

    இல்ல வழிபாடு:

    உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு.

    நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம்.

    சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை மட்டுமே.

    பூஜைக்கு முன் நமக்குள் இருந்த மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு “என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும்.

    மதுரை வீரன் மந்திரம்:

    பூஜையின் போது ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்தல் வேண்டும். நேரே வந்த ஆண்டவனிடத்தில் நாம் எப்படி பேசுவோம், என்னென்ன கேட்போம், எப்படி அடிப்பணிவோம் அதையெல்லாம் அங்கே அன்பாக செய்ய வேண்டும். பூஜையின் இடையிடையே ஆத்மார்த்தமான பாடல்கள் பாடி பஜனை செய்தல் மிக சிறப்பாகும்.

    இரு கரங்களையும் மேல் உயர்த்தி பக்தி பரவசத்தோடு உடலை அங்கும் இங்கும் அசைத்தவாறு அல்லது ஆடியப்படி “வீராயநம ஓம் வீராய நமஹா வீராயநம ஓம் நமசிவாய” என்று கோஷமிடலாம்.

    எம்பெருமானே, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்று பிரார்த்திக்க வேண்டும். வேளைக்கு செல்லும் பொழுதும் சரி வரும் பொழுதும் சரி ஸ்ரீவீரரின் நாமத்தை “ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய நமோ நமஹா” என்று எண்ணுதல் சிறப்பு.

    மதுரை வீரன் வரலாறு:

    உண்மையில் மதுரை வீரன் கதை பெரிது. ஆனால், படிப்பதற்கு மிக சுவாரசியமானது.

    வாரணவாசி பாளையம் ராணிக்கு குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்கோ குழந்தையைப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.

    காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன்.

    ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.

    திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர்.

    கூடவே, தனது தளபதியாக்கி திருமலை மன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார். திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப் பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன்.

    அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார்.

    மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான். பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான்.

    பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.

    திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.

    மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள், வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.

    அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

    மதுரை வீரன் திரைப்படம்:

    மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

    மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம்.ஜி.ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அருமையாக அமைக்கப்பட்டிருந்தது.

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....