Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்.......?

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    எந்த ஒரு ஆர்ட் வடிவமும் அது உருவாக்கப்பட்ட காலத்தோடு நின்றுவிடுவதே இல்லை. கவிதை, கதை, ஓவியம், திரைப்படம், பாடல் என எவற்றை எடுத்துக்கொண்டாலும் அவைகள் காலத்தைக் கடந்து பயணிக்கக் கூடியவை. குறிப்பாக, பாடலை எடுத்துக்கொண்டால் அது காலத்தை எளிதாக கடந்து மக்களிடத்தில் நிலைத்துக்கொள்ளும். மக்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும்.

    1961 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படத்தின் பாடல், இன்றளவும், அதாவது 2022 ஆம் ஆண்டிலும், பலராலும் கேட்கப்பட்டும், பலராலும் பரிந்துரைக்கப்பட்டும், பலரையும் ஈர்த்துக்கொண்டும் இருக்கிறது.

    கிட்டத்தட்ட 61 வருடங்களுக்குப் பிறகும், ஒரு பாடலைக் கேட்டு மக்கள் உணர்ச்சிவசமாகிறார்கள். தங்களை அப்பாட்டினுள் பொருத்திப்பார்க்கிறார்கள். பல திரைப்படங்களில் தெரிந்தும் தெரியாமலும் இப்பாடலை இன்னமும் உபயோகிக்கிறார்கள்.

    ஏதுமற்ற மனிதர்களும் சரி, எல்லாமுற்ற மனிதர்களும் சரி அவ்வபோது இப்பாடலை ஒலிபரப்பி இளைப்பாறிக் கொள்கிறார்கள். தனது இணையை, உறவை, பிள்ளைகளை இளைப்பாற்ற பலர் இன்னமும் இப்பாடலை ஒலிபரப்புகிறார்கள். பலர் மீண்டும் மீண்டும் அப்பாடலை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால், ‘மலர்ந்தும் மலராத ….’ பாடல் அப்படியான ஒன்று.

    malarnthum malaratha

    சிவாஜிகணேசன், சாவித்ரி, ஜெமினி கணேசன் நடிப்பில் பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘மலர்ந்தும் மலராத’ பாடல். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பாசமலர் படத்திற்கு இசையமைத்திருப்பர். டி.எம் செளந்தரராஜன் மற்றும் சுசீலா அவர்களால் பாடப்பட, இப்பாடல் கேட்போரை மயக்க ஆரம்பித்தது. பலரின் முனுமுனுப்பிலும் இப்பாடல் ஒலிர ஆரம்பித்தது. 

    இசையாலும், குரல்களாலும் ஆரம்பத்தில் அனைவரும் ஈர்க்கப்பட அதன்பின்பு, கண்ணதாசனின் அற்புத வரிகளால் அனைவரும் கவர்ந்திழுக்கப்பட்டனர். இப்பாடலின் கவர்தல் 1961 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை நிகழ்ந்தேறி வருகிறது. 

    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி 

    நடந்த இளந் தென்றலே

    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு 

    பொலிந்த தமிழ் மன்றமே ..’

     

    என்று கண்ணதாசனின் வரிகள் ஒலிக்கப்பட எங்கிருந்தோ ஒரு தேற்றல் வந்து நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது. 

     

    துயரத்தின் வீரியங்கள் நம்மை அசைய விடாமல் ஈழுத்துப்பிடிக்க, இப்பாடல் நம்மை தென்றலோடு தாலாட்டச் செய்கிறது. துயரம் நீங்குமா? நீங்காதா? என்பது பொருட்டல்ல! இளைப்பாறலாய் இப்பாடல் இருப்பதுதான் பொருட்டு!

    61 வருடங்கள் கழித்தும் தற்போது எடுக்கப்படும் பல திரைப்படங்களிலும், மலர்ந்தும் மலராதா பாடல் இடம்பெற்றுவிடுகிறது. உதாரணமாக, ஜிகர்தண்டா, பேட்ட, ராக்கி, சாணிக்காயிதம் போன்ற திரைப்படங்களை நாம் சொல்லலாம். ஏன் இப்பாடலை தற்போதைய திரைப்படத்தில் வைக்கிறார்கள் என்று கேள்விகள் எழ? அதற்கான பதில்கள் கிடைத்தன. 

    திரைப்படத்தின் காலநிலையை பார்வையாளர்களிடத்தில் உணர்த்தவும், காட்சியின் சூழலை எளிதாக பார்வையாளர்களிடத்து கடத்தவும், கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தவும் இயக்குநர்கள் இம்மாதிரியான பழம்பெறும் பாடல்களைத்  தற்போதைய திரைப்படத்தில் உபயோகிக்கின்றனர். மலர்ந்தும் மலராத பாடல், அனைத்து விதமான மேற்கூறிய சூழலையும் கடத்த ஏதுவாக உள்ளதால் பல திரைப்படங்களிலும் இப்பாடல் இடம்பெற்று விடுகிறது. 

    collage

    பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு புயலை எதிர்க்கொள்வதற்கு முன், அமைதியாக அமர்ந்து இப்பாடலை கேட்டு இளைப்பாறுவார். பார்க்கும் நமக்கும் அந்த இளைப்பாறல் ஒட்டிக்கொள்ளும். 

    அதேப்போல சமீபத்தில் வெளிவந்த ராக்கி திரைப்படத்தில்,  முன்னணி கதாப்பாத்திரம் ராக்கி, தனது தங்கை மகளிடம் ‘மாமன், தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவேன்’ என்று இப்பாடலின் வரி ஒன்றை ஒரு வசனமாகவே பேசியிருப்பார். படத்தின் ஆரம்பத்தில் மலர்ந்தும் மலராத பாடலும் இடம்பெற்றிருக்கும்.

    சாணிக்காயிதம் திரைப்படத்தில் கொடூரமாக கொலைச்சம்பவத்தை முன்னணி கதாப்பாத்திரங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்க, பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும் விதம் வன்முறையை இலகுவாக்கி ரசனையை கூட்டியது என்றே சொல்லலாம். 

    ஜிகர்தண்டா திரைப்படத்தில் இக்கட்டான சூழலில் மலர்ந்தும் மலராத பாடல் ஒலிபரப்பாகும். அப்பாடல் அக்காட்சிக்கு இளைப்பாறல் தராதா என்ற ஏக்கம் பார்க்கும் போது நம்மிடத்தில் சிலருக்குத் தோன்றும். 

    இதுமட்டுமின்றி, இன்றும் பல கான்சர்ட்டுகளில் இப்பாடலை பாடுகின்றனர்; ரசிகர்கள் விருப்ப பாடலாக இப்பாடலை கேட்கின்றனர்; சமூக வலைதளங்களில் தொடர்ந்து இப்பாடலைப் பற்றிய பதிவுகளை பதிவிடுகின்றனர். எண்பதுகள் வரையில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, 90 மற்றும் 2000 ங்களில் பிறந்தவர்களில் பலரும் கூட, இப்பாடலை ரசிக்கின்றனர் என்பதுதான் வியப்பு. இவற்றிலிருந்து தெரிவது என்னவென்றால், மலர்ந்தும் மலராத பாடல் என்றைக்குமான இளைப்பாறல்! 

    மலர்ந்தும் மலராத பாதி மலர் போல 

    வளரும் விழி வண்ணமே

    வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 

    விளைந்த கலை அன்னமே..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....