Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைகேப்டனாக தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைத்த கதை தெரியும்.. காரணம்?

    கேப்டனாக தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைத்த கதை தெரியும்.. காரணம்?

    இந்திய கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியக்கும் கேப்டன்களில் ஒருவர், மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் உலகத்தை தவிர்த்து வெளியில் உள்ளவர்களுக்கும், பிடித்த கிரிக்கெட் வீரராக தோனி தற்போது வரை திகழ்ந்து வருகிறார். திறமையால் இவரை பலருக்கு பிடித்திருப்பது நிதர்சனமான உண்மை என்றாலும், அதைத் தாண்டியும் தோனியை பலருக்கும் பிடித்திருக்க காரணம், தோனியின் குணநலன்கள். 

    பொறுமை, முடிவெடுக்கும் தன்மை, அறிவுரை கூறும் தொனி, ஊக்கமாக இருப்பதும் மற்றவரை ஊக்கப்படுத்துவதும் என தோனியின் குணநலன்கள் தொடர்ந்து நீண்ட வண்ணம் உள்ளன. வெறுமனே பத்தோடு பதினொறாவது கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட தோனி, தனது திறமையினால் கிரிக்கெட் உலகின் தவிர்க்க முடியாத நபரானார். 

    dhoni

    கிரிக்கெட் வீரனாக அனைவராலும் அறியப்பட்ட தோனி, 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையில் கேப்டனாக களமிறங்கினார். ஒரு வீரன், தலைவனாக உருவெடுக்கும் சரித்திர மாற்றம் அந்த உலகக் கோப்பையில் நிகழ்ந்தது. சேவாக் என்ற ஒரு மூத்த வீரரை மட்டுமே வைத்துக்கொண்டு, தோனி உலகக் கோப்பையை வென்றார் என்பது சாதாரண விஷயமே இல்லை. அது ஒரு அசாதாரணம். 

    ஆனால், மகேந்திர சிங் தோனிக்கு  அசாதாரணம் என்பதே சாதாரணம்தான். அப்படியாகத்தான் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியின் கேப்டனும் நிகழ்த்தாத ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், தோனி. சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்பதுதான் அந்த சாதனை. 

    2007-ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைகள் தோனியின் இச்சாதனையில் அடங்கும். 

    msd

    சரி. எந்த ஒரு ஏணிக்கும் முதல்படிக்கட்டு என்பது இருக்கும். தோனி கேப்டனாக பறித்த வெற்றிக்கனிகளுக்கு முன், ‘தோனி வெற்றிக் கனியை பறிக்கும் வல்லமை படைத்தவர்’ என்ற கூற்றை பலர் முன்வைத்தனர். அதில் முக்கியமானவர் யாரென்றால், பிரபல கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். 

    கிரிக்கெட் சார்ந்து சச்சின் எது கூறினாலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அது முக்கியமானதுதான். அந்த வகையில், 2007-ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை அணியின் கேப்டன் குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினிடம் ஆலோசனை கேட்க, சச்சின் தோனியின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, தோனியின் பெயர் பரீசிலனைக்கு உள்ளாக்கப்பட்டு இறுதியில் கேப்டனுக்கு தேர்வானது. 

    பல வீரர்கள் இருக்கும்போது சச்சின் ஏன் தோனியின் பெயரை கூற வேண்டும்? சச்சினை கவரும் அளவிற்கு தோனி என்ன செய்தார்? இப்படியான கேள்விகள் 2007-ம் ஆண்டிலிருந்து இன்று 2022-ஆம் ஆண்டு வரை நீடித்தபடியேதான் இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு பல பதில்கள் கிடைத்தாலும், சச்சின் சொன்ன பதில்தானே ஏற்புடையதாக இருக்க முடியும். அப்படி என்ன சொன்னார் சச்சின்? 

    இந்திய அணியை டிராவிட் வழி நடத்திய சமயத்தில், சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோணியும் ஒன்றாக விளையாடினார்கள். அப்படி, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்துக்கொண்டிருக்கையில், சச்சினுக்கு கேப்டன் பதவி வழங்கபட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

    அப்போது, நம் அணியில் ஒரு நல்ல கேப்டன் இருக்கிறார், அவர் இன்னும் ஜூனியராக இருக்கிறார். அவரை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று தோனியை குறிப்பிட்டு சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். 

    dhoni

    இதற்கு காரணமாக சச்சின் தெரிவித்தது மிக முக்கியமானது. அதாவது, சச்சின் கிரிக்கெட் சார்ந்து பல உரையாடல்களை தோனியிடம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, இந்திய அணி பந்துவீசும் சமயத்தில் இருவருக்குமான முக்கிய உரையாடல்கள் என்பது அரங்கேறியுள்ளது. 

    தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, சச்சின் முதல் ஸ்லிப்பில் பல சமயம் ஃபீல்டிங் செய்துள்ளார். அப்போது, இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். இச்சமயத்தில், இக்கட்டான சூழல்கள் நேரும்போது, 

    ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என தோனியை நோக்கி சச்சின் கேட்பார். அந்நேரத்தில், தோனியிடம் இருந்து வரும் ஆலோசனையானது, சமநிலையோடும், முதிர்ச்சித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்துள்ளது. 

    அதோடு, சச்சினை பொறுத்தவரையில் சிறந்த கேப்டன்சி என்பது எதிரணியை விட ஒரு அடி முன்னே இருத்தல் ஆகும். எந்த நிலையிலும், தன் அணியை எதிரணியை விட ஒரு படி மேலே கொண்டுச்செல்லுதல் என்பது கேப்டனிடம் இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் ஒன்று. அதற்கு நிறைய பயிற்சியும், திட்டமிடலும் வேண்டும். இவைகள் தோனியிடம் இருப்பதாக சச்சின் நினைத்துள்ளார். கண்டுள்ளார். அதைத்தொடர்ந்தே இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைத்துள்ளார். 

    தோனி

    ஆனால், தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைக்கும்போது அவருக்கு தெரிந்திருக்காது, தனது நீண்ட நாள் கனவான ஒருநாள் உலகக் கோப்பை தோனியின் கேப்டன்சியில் விளையாடும்போது இந்தியாவிற்கு கிடைக்கும் என்று.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....