Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்பலரையும் பயமுறுத்தியுள்ள கிரிப்டோ ; முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு மோசமான நிலையா?

    பலரையும் பயமுறுத்தியுள்ள கிரிப்டோ ; முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு மோசமான நிலையா?

    கடந்த சில மாதங்களாக கிரிப்டோ வர்த்தகமானது பெரும் சரிவினைச் சந்தித்து வருகின்றது. கிரிப்டோவின் புகழ்பெற்ற நாணயங்களான பிட்காயின், எத்திரீயம், பிஎன்பி போன்ற நாணயங்களும் பெரும் சரிவினை சந்தித்தன.

    இந்நிலையில், கிரிப்டோ வர்த்தகத்தில் முதல் 10 நாணயங்களில் ஒன்றாக கருதப்பட்ட லூனா என்கிற நாணயம் தனது முழு மதிப்பினையும் இழந்து பூஜ்ஜியத்தினை அடைந்துள்ள நிகழ்வு கிரிப்டோ வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    பிட்காயின் மற்றும் எத்திரியம்..

    கிரிப்டோ வர்த்தகத்தின் வரலாறு 2008ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு சடோஷி நகமோடோ என்கிற நபரால் உருவாக்கப்பட்ட பிட்காயின் தான் முதல் கிரிப்டோ நாணயமாகும். இந்த நாணயத்தினை உருவாக்கிய சடோஷி பற்றி எந்த ஒரு தகவல்களும் இன்று வரை தெரியாத நிலையிலேயே உள்ளது.

    கிரிப்டோ காயின், பிளாக் செயின் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப் பட்டது. அதிக பாதுகாப்புக்கு கொண்ட இந்த தொழில்நுட்பம், நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

    சடோஷியினால் உருவாக்கப்பட்ட இந்த பிட்காயின், பரிவர்த்தனைக்கு உதவியதே தவிர, குறிப்பிட்ட எந்த ஒரு நிஜ உலகிற்குத் தேவையான எந்த ஒரு பயன்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.

    இந்த குறையினைத் தீர்ப்பதற்காக, விடாலிக் பியூட்டெரின் என்பவரால் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எத்திரியம் என்ற நாணயம் உருவாக்கப்பட்டது. இந்த நாணயத்தின் வரவால் கிரிப்டோ காயின்களின் பயன்பாடு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அளவிற்கு வளர்ந்தது.

    நன்மைகள்..

    கிரிப்டோ காயின்கள் இடைத்தரகர்களில்லா வர்த்தகத்தினை மக்களுக்கு வழங்கியது. இதன் மூலம் பெருமளவிலான பணமானது சேமிக்கப்பட்டது. மேலும்  மையப்படுத்தப் பட்ட (centralised) வர்த்தகத்தினை நீக்கி பரவலாக்கப்பட்ட (decentralised) ஒரு வர்த்தக பயன்பாட்டினை அளித்தது. மேலும், பணப்பரிவர்த்தனைகளை அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு பொதுவான பரிவார்த்தனை முறையினை இந்த கிரிப்டோ வர்த்தகம் வழங்கியது.

    மேற்கூறிய காரணங்களால் கிரிப்டோ வர்த்தகமானது மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியினைப் பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  

    எத்திரியத்தின் தொழில்நுட்பத்தினைக் (ERC – 20) கொண்டு பல்வேறு விதமான காயின்கள் பல்வேறுவிதமான பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் கிரிப்டோ நாணயங்கள் நிஜ உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பெற்றுள்ள அளவிற்கு வளர்ந்துள்ளன.

    தீமைகள்..

    ஒரு தொழில்நுட்பமானது வேகமாக வளர்ந்து வருகிறதெனில், அது ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தப் படுவதை விட தேவையில்லாத விடயங்களுக்காக அதிகம் பயன்படுத்தப் படும் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அதற்கு கிரிப்டோ நாணயங்களும் விதிவிலக்கு அல்ல. 

    பல்வேறு விதமான பயன்பாட்டிற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அர்த்தமில்லாத, எந்த ஒரு பயனும் இல்லாத நாணயங்களும் உருவாக்கப் பட்டன.

    புகழ்பெற்ற மீம்ஸ்களை மையமாகக் கொண்டும், நாடகங்களை மையமாகக் கொண்டும் கிரிப்டோ வர்த்தகத்தில் நிறைய நாணயங்கள் வரத்தொடங்கின.இவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினைப் பெற்றதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

    ஆரம்பத்தில் அதிக அளவு ஆதாயத்தினைக் கொடுத்தாலும், அதை விட அதிக அளவு நட்டத்தினையும் கொடுத்தது. மேலும் அதிக அளவு பரிவர்த்தனை நடைபெறுவதால் எந்த ஒரு சிறு காரணமும் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையினை மாற்றும் நிலையும் இருந்தது. இதனால் தனி மனிதர்கள் பலரும் இந்தச் சந்தையின் நிலையினை மாற்றிக் கொண்டிருந்தனர்.

    பங்குச் சந்தையினைப்போலல்லாமல், 24 மணிநேரமும் இந்த இந்த கிரிப்டோ வர்த்தகமானது இயங்கிக்கொண்டிருப்பதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது.

    இவ்வளவு சாதக பாதகங்கள் உள்ள இந்த வர்த்தகம் பல முறை அதல பாதாளத்திற்கும், அதீத ஏற்றத்தினையும் கண்டுள்ளது. பல நாணயங்கள் ஒட்டுமொத்தமாக சந்தையினை விட்டு வெளியில் சென்றும் இருக்கின்றன.

    லூனாவின் வீழ்ச்சி..

    இந்த நிலையில், கடந்த மே மாதம் 6ம் தேதியன்று லூனா என்ற கிரிப்டோ நாணயம் தனது சரிவினைச் சந்திக்கத் தொடங்கியது. ஆறு நாட்களாக தொடர்ந்து சரிந்த நிலையில், மே 12ம் தேதி தனது ஒட்டுமொத்த மதிப்பினையும் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியது.

    லூனா ஒரு நிலையான நாணயமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்று அந்த நாணயம், கிரிப்டோ சந்தையினை விட்டே வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டதினால், அதில் முதலீடு செய்திருந்த பல மக்களும் தங்களது முதலீட்டுத் தொகை முழுவதினையும் இழந்துள்ளனர். இந்த நாணயம் அதிக பட்சமாக 10,000 ரூபாய் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நிலையான கிரிப்டோ நாணயம் இந்த அளவிற்கு சரிந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தங்களது முதலீட்டினை இழந்தவர்களின் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் வரை சென்றுள்ளனர். சிலர் ஒரே நாளில் தங்களது வாழ்க்கையினை இழந்துள்ளனர். இந்த நாணயத்தின் தொழில்நுட்ப வல்லுனராகிய டூ க்வோனிடமிருந்து இதுவரை எந்த தகவல்களும் இல்லை.

    இன்று லூனாவின் மதிப்பே ஒரு ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. பல லட்சங்கள் முதலீடு செய்திருந்த ஒரு நபரின் கண் முன்னே அவரது ஒட்டு மொத்த முதலீடும் மாயமாய் மறைவது உண்மையில் மிகவும் வருத்தமான விடயமே. 

    என்ன செய்ய வேண்டும்..

    கிரிப்டோ சந்தைகள் முறையான ஆய்வுக்குரியவை. இங்கு அதிர்ஷ்டம் ஒரு முறை அடித்தாலும் அடுத்த முறை மொத்த முதலீடும் பறி போகும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே கிரிப்டோ பத்திய அடிப்படை அறிவினைக் கற்றுக் கொண்டு அதனுள் நுழைவது சிறந்தது என்பதே பல வல்லுனர்களின் கருத்து. ஆனாலும் இது போல ஏற்படும் எதிர்பாரா பேரிழப்புகளுக்கு எந்த வித பதில்களும் இல்லை என்பதே உண்மை.

    இனிமேல் இதற்கும் பான் கார்டு அவசியமாம்; அறிவிப்பை வெளியிட்டது வரிகள் வாரியம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....