Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசிறப்பு கட்டுரை'ஐபிஎல் வெறும் தொடக்கம்தான்..' ; அசுர வேகத்திற்கு தயாராகும் உம்ரான் மாலிக் எனும் புயல்!

  ‘ஐபிஎல் வெறும் தொடக்கம்தான்..’ ; அசுர வேகத்திற்கு தயாராகும் உம்ரான் மாலிக் எனும் புயல்!

  ஐபிஎல் போட்டியின் 50வது மேட்ச் மும்பையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் நடைபெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியின் போது, 20வது ஓவரினை வீச 22 வயதேயான ஒரு இளம் பௌலரைப் பந்து வீச அழைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன். அந்த ஒவரில் விக்கெட்டுகள் விழவில்லையெனினும், அதிக ரன்கள் அடிக்கப்பட்டிருந்தாலும் , 19.4வது ஒவரில் வீசப்பட்ட பந்து அதிக கவனத்தினைப் பெற்றது.

  ஏன் கவனம்?

  விக்கெட்டுகள் விழவில்லை, நான்கு ரன்களும், ஆறு ரன்களும் அடிக்கப் படுகின்றன. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட அந்த பந்து மட்டும் ஏன் அதிக கவனத்தினைப் பெற்றது என்ற கேள்வி எழவே செய்கிறது அல்லவா?? 

  அந்தக் கேள்விக்கான பதில் இதோ.. 19.4 ஆவது ஒவரில் வீசிய பந்து இந்த ஐபிஎல்-லில் வீசப்பட்ட பந்துகளிலேயே மிக வேகமானது என்ற சாதனைக்குச் சொந்தமானது தான் காரணம். 

  மணிக்கு 156.9 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து இன்று உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், பல ஜாம்பவான்களையும்  திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது (ஐபிஎல்லில் மிக வேகமான பந்து ஷான் டைட் என்னும் ஆஸ்திரேலிய வீரரால் போடப்பட்டது). இவ்வளவு வேகமான பந்தினை வீசிய அந்த 22 வயதே நிரம்பிய வீரரின் பெயர் உம்ரான் மாலிக்.. இந்த இளம் இந்திய வீரர் எப்படி இந்த சாதனைக்குச் சொந்தமானார்? அவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது? வாருங்கள் பார்ப்போம்.

  யார் இந்த உம்ரான் மாலிக்..

  2017 வரை கிரிக்கெட்டினைப் பற்றி முறையாகத் தெரியாத உம்ரானின் கிரிக்கெட் வாழ்க்கை, அவரது பந்து வீச்சின் வேகத்தினைப் போலவே விரைவாக வளர்ந்தது. 

  காஷ்மீரினைச் சொந்த மாநிலமாகக் கொண்ட உம்ரான் 1999ம் ஆண்டு ஸ்ரீநகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் ரஷீத் ஒரு பழக்கடையினை நடத்தி வருபவர்.

  ஒரு நாள் தனது உற்ற நண்பருடன் ஜம்முவிலுள்ள மவுலானா ஆசாத் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றிருந்தார் உம்ரான் மாலிக். அந்த மைதானத்தில் பணி புரியும் பயிற்சியாளரிடம் அறிமுகம் செய்து வைத்தார் அவரது நண்பர். உம்ரான் பந்து போடும் வேகத்தினைக் கண்ட பயிற்சியாளரும், அவரை தினமும் பயிற்சிக்கு வரும் படி கேட்டுக்கொண்டார்.

  தோலினால் செய்யப்பட்ட பந்தினில் பயிற்சி மேற்கொண்ட போதிலும், வேகம் குறையாமல் பந்து போடும் திறமை உம்ரானிடம் இருந்தது. ஆனால் பிரச்சனை அவரது நேர ஒழுக்கத்தில் இருந்தது. இது அவரது பயிற்சியாளருக்கு அதிருப்தியைக் கொடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. 

  “ஒரு வாரம் சரியாகப் பயிற்சிக்கு வரும் உம்ரான் அடுத்த நன்கு ஐந்து நாட்களுக்கு  பயிற்சிக்கு வருவதினைத் தவிர்த்தார். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. தன்னிடம் உள்ள திறமையினைப் பற்றி அப்போது உம்ரானுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நாள் அவனிடம் கூறினேன். ‘உம்ரான், நீ இந்தியாவுக்காக விளையாட முடியும்’ என்று. அதற்கு சிரித்தபடியே, ‘நீங்கள் உண்மையாகச் சொல்கிறீர்களா’ என்று கேட்ட உம்ரானை எந்த பதிலும் சொல்லாமல் ஒரு ஆழமான பார்வை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.”

  “அந்த தருணத்திற்குப் பிறகு உம்ரான் ஒரு நாளும் பயிற்சிக்கு வரத் தவறியதில்லை” என்று அந்த நினைவுகளைப் பற்றி பகிர்கிறார் உம்ரானின் பயிற்சியாளர் மன்ஹாஸ்.

  கிடைத்த வாய்ப்புகளும், வருங்காலத்திற்குரிய சமிக்கைகளும்..

  19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடச் சென்ற உம்ரானின் ஷூக்கள் கடனுக்கு வாங்கப் பட்டவை. ஒரு மேட்சில் மட்டுமே விளையாட உம்ரானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியும் தோல்வியில் முடிந்தது.

  23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நிராகரிக்கப் பட்ட உம்ரான். 2019-20ம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீர், அசாம் பங்கேற்கும் போட்டியின் வலை பயிற்சியின் போது, அசாம் அணியின் பயிற்சியாளராய் இருந்த அஜய் ரத்ரா வலை பயிற்சிக்காக சில பந்து வீசும் வீரர்களை கேட்டார். நீங்கள் யூகித்திருப்பது மிகச்சரி..  உம்ரான் மாலிக் பந்து வீச முன் வந்தார்.

  நான்கு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில், உம்ரான் மாலிக்கினை பந்து வீசவேண்டாம் என்று ரத்ரா கேட்டுக்கொண்டார். அவரது பந்து வீச்சு அணியில் உள்ள நல்ல பேட்ஸ்மேன்களை காயப்பத்திவிடும் என்று அவர் பயந்ததே அதற்கு காரணம்!! ரத்ரா, உம்ரானின் பந்துவீச்சினால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பதனை இந்த இடத்தில் கூறியாக வேண்டும். 

  உம்ரான் காஷ்மீருக்காக விளையாடாமல் போனது ரத்ராவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஜம்மு காஷ்மீர் அணியிடம் கோரிக்கை விடுக்கவும் அவர் தவறவில்லை.

  மூன்று முதல் தர ஆட்டங்களை மட்டுமே விளையாடி இருந்த உம்ரான் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார். அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் அவரிடம் சிறந்த வேகமிருந்தது. அந்த வேகத்தில் அனுபவம்  இல்லாமலிருந்தாலும், சிறப்பான வருங்காலத்திற்குரிய சமிக்கைகள் இருந்தன.

  இந்நிலையில், 2021ம் ஆண்டு உம்ரான் மாலிக்கினை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு உண்மையில் அவருக்கு அதிஷ்டமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். 

  கொரோனா காரணமாக போட்டியிலிருந்து விலகிய நடராஜனுக்கு பதிலாக உம்ரானுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கிலோமீட்டர் வேகத்தில் அவர் வீசிய பந்து, அந்த ஐபிஎல்லில் வீசப்பட்ட இரண்டாவது வேகமான பந்தாக இருந்தது.

  “இந்த மாதிரி திறமையுள்ளவர்களைப் பார்க்கும் போது அவர்களின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் திறமையினை அதிகரிக்க ஆவண செய்யவேண்டும்” என்று விராட் கோஹ்லி அப்போட்டியின் முடிவில் கூறியிருந்தார்.

  அந்த வருடத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கான வலை பந்து வீச்சாளராக உம்ரான் தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்காக சன்ரைசர்ஸ் அணியினரால் அவர் தக்க வைக்கப் பட்டார். இந்த வருடத்தின் ஐபிஎல்லில் மிக வேகமான பந்தினையும் அவர் வீசியுள்ளார்.

  11 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உம்ரன் மாலிக், குஜராத் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

  கடவுள் ஆசைப்படுகிறார்..

  சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருக்கும் டேல் ஸ்டெய்னிடம் உம்ரான் மாலிக் பற்றி கேட்ட பொழுது, ‘அவரின் பந்து வீசும் வேகம் ஆச்சர்யமாய் உள்ளது. அவர் வீசும் பந்துகளில் 90 சதவீதம் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் உள்ளது. இந்த அளவிற்கு வேகமாய் பந்து வீசும் வீரரை எந்த நாடும் தனது அணியில் சேர்த்துக்கொள்ளும்.’ என்று கூறியுள்ளார்.

  ‘உம்ரான் மாலிக் சர்வதேச போட்டிகள் விளையாடுவதற்கு தகுதியானவர். இந்தியா அவரது வேகத்தினை எப்படி பயன் படுத்திக்கொள்ளப்போகிறது என்பது மட்டுமே நம் முன்னே உள்ள கேள்வி’ என்றும் அவர் கூறியுள்ளார்.

  “கடவுள் ஆசைப்படுகிறார், ஒரு நாள் கண்டிப்பாக 155 கிலோமீட்டர் என்கிற இலக்கினைக் கட்டாயம் அடைவேன்” என்று உம்ரான்  கூறியிருந்தார். இப்பொழுது அந்த இலக்கினைத் தனது வழக்கமான வேகமாக மாற்றியுள்ளார்.

  பெற்றோர்களுக்கான பரிசு..

  ‘உம்ரானுக்கு வாழ்த்துக்கள்’ என்று கடைக்கு பழங்கள் வாங்க வருபவர்கள் கூறுவதனைப் பெருமிதத்தோடு பகிரும் உம்ரானின் தந்தை, “ஒவ்வொரு பெற்றோருக்கும் தனது மகன்/மகள் அவர்களுக்கு விருப்பான துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கச் செய்யும். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. உம்ரான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறான். அவனுக்கு கிரிக்கெட் விளையாட மிகவும் பிடிக்கும்” என்று கூறுகிறார்.

  பல காலமாக அப்துல் ரஷீத் வைத்துக்கொண்டிருக்கின்ற கடை தற்பொழுது ‘உம்ரான் அப்பாவின் கடை’என்று அழைக்கப் படுவது, அவரது பெற்றோருக்கு உம்ரானால் கொடுத்த பரிசு என்று கூறுவது மிகவும் பொருத்தமான ஒன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  கனவுகளுக்கும் கதைகளுக்கும் சிறு வித்தியாசம் தான்.. கதைகளின்றி கனவுகள் வருவதில்லை, கனவுகளின்றி கதைகள் உருவாவதில்லை. கனவு காணுங்கள்.. உங்கள் கனவுகளை நோக்கிச் சென்ற கதைகளை பின்வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்லுங்கள்.

  அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் இதுவா? புகைப்படத்திற்கு பின் உள்ள கதை இதுதானா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....