Friday, March 15, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரை'வலிமையானவன் மட்டுமல்ல பலவீனமானவனும் கூட'- உறக்கச்சொன்ன விராட்கோலி..,பர்த்டே ஸ்பெஷல்!

    ‘வலிமையானவன் மட்டுமல்ல பலவீனமானவனும் கூட’- உறக்கச்சொன்ன விராட்கோலி..,பர்த்டே ஸ்பெஷல்!

    விராட்கோலி – இந்த பெயர் பல்வேறு இளைஞர்களின் ஊக்கத்திற்கு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்திய நாட்டில் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் யாதென்பதை உலகமே அறியும். அப்படியான இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், அவர்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்திற்கு அளவென்பதே இல்லை. கிரிக்கெட் ரசிகர்கள் பல வீரர்களை கொண்டாடியதை நாமும் கண்டுள்ளோம். கண்டுகொண்டே இருக்கிறோம். 

    ரசிகர்கள் விராட் கோலியை காணும் முறையென்பது வெறுமனே ஒரு வீரரை காணும் முறையல்ல, அது ஒரு ரோல்-மாடலை, தலைவனை காணும் முறையாகும். ஆதலால்தான், விராட் கோலி செய்யும் எந்த ஒரு சிறு செயலும் பெரிய அளிவில் பேசப்பட்டு விடுகிறது. 

    விராட் கோலியின் துடிதுடிப்பான விளையாட்டு, ஆக்ரோஷம், தன்னம்பிக்கை, செயல்திறன், முடிவெடுக்கும் தன்மை போன்றவைகள்தான் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. பல இளைஞர்கள் விராட் கோலியிடமிருந்து இதைத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

    ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது, அதுதான் மனரீதியான உண்மை. கடந்த இரு வருடங்களாக விராட் கோலி தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் திணறியதை ஓட்டுமொத்த கிரிக்கெட் உலகமே கண்டது. இதனால், பல்வேறு விமர்சனங்கள் அவர் முன் வைக்கப்பட்டன. கிரிக்கெட்டை விட்டு விலகிவிடுங்கள் என்ற பேச்செல்லாம் வலுத்தன. இருப்பினும், மனம் தளராமல் போராடிய விராட் கோலி தற்போது தனது ஃபார்மிற்குள் திரும்பினார். 

    தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஆடிய ருத்ரதாண்டவம் என்பது, இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யபட வைத்தது. ‘இதுதான்டா நான்’ என கண்ணீர் மல்க விராட் கோலி களத்தில் இருந்தார். விராட் கோலி ரசிகர்கள் அப்போது எமொஷனின் உச்சக்கட்டத்தில் இருந்தனர். 

    இரண்டு வருடங்களாக வீழ்ச்சியில் இருந்த விராட் கோலி தற்போது எழுச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறார். பள்ளத்தில் இருந்து மேட்டிற்கு வரும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் நேரும். அப்படியான பிரச்சினைகள் விராட் கோலிக்கும் மன அளவில் நேர்ந்தது. அப்போது விராட் கோலி பேசிய வார்த்தைகள் என்பது அவரின் வாழ்க்கை வரலாற்றில் மிக முக்கியமானவையாக மாறிவிட்டது. 

    எந்த ஒரு வீரனும் நான் தோற்றுக்கொண்டிருப்பதை ஒப்புக்கொள்ளமாட்டான். அப்படியே ஒப்புக்கொண்டாலும் சாக்குபோக்குகள் கூறி அதிலிருந்து தப்பிக்க முயலுவான், முடிந்தவரையில் நான் வலிமையானவன் மட்டுமே என்பதை நிறுவ முயலுவான். ஆனால், விராட் கோலி இதையெல்லாம் சுக்கு நூறாக உடைத்தார். 

    இதையும் படிங்க: இன்னும் ஆட்டமே ஆரம்பம் ஆகல… 9ம் தேதிக்கு மேல பாருங்க…? மழை குறித்து வெதர்மேன் அப்டேட்

    எழுச்சி மட்டுமல்ல வீழ்ச்சியும் இயல்பே என்பதை உரக்க தெரிவித்தார். நான் வலிமையானவன் மட்டுமே அல்ல பலவீனமானவனும் கூட என்று வெளியில் கூறினார். 

    வீழ்ச்சி சமயத்தில் விராட் கோலி கூறியவற்றை இங்கே நினைவு கூர்வது அவசியம், அவர் கூறியதாவது; 

    மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவதை அசாதாரணமாக நான் கருதவில்லை. எப்படி உங்களால் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்க முடிகிறது என்று வெளியில் மட்டுமல்ல அணியிலும் கேட்பார்கள். அப்போதெல்லாம் ஒரு விஷயம் தான் சொல்வேன், எப்படியாவது என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும். 

    ஆக்ரோஷத்தன்மையை என்னால் இயல்பாகக் கொண்டு வர முடியவில்லை என்றால் முயற்சி செய்து வெளிப்படுத்துவேன். காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, இந்த நாள் என்ன தரப்போகிறது என்று தெரியவில்லை, எதைச் செய்தாலும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தான் செய்யவேண்டும் என எண்ணிக்கொள்வேன். 

    நான் எப்போதும் இப்படித்தான். உற்சாகத்துடன் எப்படி விளையாடுகிறீர்கள் என்று கேட்பார்கள். எனக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். ஒவ்வொரு பந்திலும் பங்களிப்பதற்கு நிறைய உள்ளது. ஆடுகளத்தில் என்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவேன்.

    மேலும், நான் மன அழுத்தத்தில் இருந்ததை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை. கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக என்னுடைய பேட்டை ஒரு மாதமாகத் தொடவில்லை. சமீபத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கொஞ்சம் போலியாக வெளிப்படுத்துவதாக உணர்ந்தேன். இல்லை, நீ தீவிரமாகத்தான் விளையாடுகிறாய் என எனக்கு நானே நம்பவைக்க முயன்றேன். ஆனால் இயக்கத்தை நிறுத்தும்படி என்னுடைய உடல் கூறியது. 

    சிறிது ஓய்வெடுத்து இச்சூழலில் இருந்து வெளியே வா என என்னுடைய மூளை சொன்னது. இப்படி உணர்வது இயல்பானது. ஆனால் தயக்கம் இருப்பதால் இதைப் பற்றி நாம் பேச மாட்டோம். மனதளவில் பலவீனமாக நம்மைக் காட்டிக்கொள்ள மாட்டோம். பலமுள்ளவனாக நடிப்பது நம்முடைய பலவீனத்தை ஒப்புக்கொள்வதை விடவும் மோசமானது.

    மனதளவில் பலமானவனாக நான் பார்க்கப்படுகிறேன். அது சரிதான், ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை நாம் அறிய வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இந்த காலக்கட்டம் நான் உணர மறுத்த பல பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தது.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். இவரின் இந்த உண்மை வார்த்தைகள் இளைஞர்கள் மத்தியில் மீப்பெறும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இதைச்சார்ந்த கூற்றுகள் வெளியில் தெரியவில்லை என்றாலும் அது நிகழ்ந்துள்ளது என்பதுதான் உண்மை. 

    பெரும்பாலும், இளைஞர்கள் தங்களை வலிமையானவர்களாக முன்னிறுத்திக்க கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களுக்குள் இருக்கும் பலவீனத்தை அறிந்து அதை பலமாக மாற்ற மறுக்கிறார்கள். மனப்பிரச்சினைகளை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இருக்கிறார்கள். இப்படியான சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் பின்பற்றும் ஒரு வீரன், ‘பலமுள்ளவனாக நடிப்பது நம்முடைய பலவீனத்தை ஒப்புக்கொள்வதை விடவும் மோசமானது’ என தெரிவித்துள்ளது எவ்வளவு புரட்சிகரமானது. 

    விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்களும், தங்களின் பலவீனத்தை அறிந்து ஒப்புக்கொண்டு, அதை பலமாக மாற்ற முயலுவார்கள் என்று நம்புவோம். தனது மன அழுத்தத்தை வெளிப்படையாக ஓப்புக்கொண்டு, மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் என்பதை மீண்டும் நிரூபனம் செய்த விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். 

    தினவாசல் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விராட் கோலி!

    இதையும் படிங்க: இது ‘திராவிட மாடல்’இல்ல, ‘துரோக மாடல்’! ஆவின் பால் விலை உயர்வால் ஓபிஎஸ் ஆவேசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....