Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைமனிதர்களால் இந்த உலகினை விட்டுச் சென்ற ஒரு பறவை இனத்தின் கதை..

    மனிதர்களால் இந்த உலகினை விட்டுச் சென்ற ஒரு பறவை இனத்தின் கதை..

    காலநிலைகளுக்கு ஏற்ப ஒரு உயிரினமானது தன்னை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். உருவில் பெரிய விலங்குகளிலிருந்து கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய உயிரினம் வரை மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது உயிர்வாழ்வதற்குரிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் பண்புகளையே பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

    இந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினை நமக்கு அளித்த சார்லஸ் டார்வின் கூறிய வார்த்தை ஒன்று மிகவும் பிரபலமானது. ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் (survival of the fittest) என்பது தான் அது. இவ்வாறு தங்களை மாற்றிக்கொள்ளும் விலங்குகளே கால வெள்ளத்தின் சூழலில் சிக்கி சின்னாபின்னமான தருணங்கள் பல வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.

    இந்நிலையில், எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாமல், எதிரிகளும் இல்லாமல், யாரும் கண்டறியாத ஒரு இடத்தில் பயத்தினைப் பற்றி கவலைப் படாத ஒரு உயிரினத்தினை மனிதர்கள் கண்டறிந்தால் என்னவாகும்?!

    இது ஏதோ ஒரு திரைப்படத்திற்கான மையக்கருத்து போல உங்களுக்குத் தோன்றலாம். ‘அது எப்படி? எந்த ஊண் உண்ணிகளும் இல்லாத இடத்தில் ஒரு உயிரினம் வாழ முடியும்? அப்படியே இருந்தாலும், மனிதர்களைப் பார்த்ததும் அவைகள் ஓடி ஒளிந்து கொள்ளதா?’ என்ற கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். தவறில்லை.., 

    ஆனால், இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்துள்ளது. 17ம் நூற்றாண்டு காலத்தில் ஒரு உயிரினம் இந்த உலகத்தில் இருந்த இடமே தெரியாமல் அழிந்துப் போயுள்ளது. உணவிற்காக மனிதர்கள் ஆடிய வேட்டையில் சிக்குண்ட அந்த உயிரினத்தில் ஒன்று கூட தப்பவில்லை.

    அந்த உயிரினத்தின் பெயர் என்ன? எப்படி மனிதர்களின் கைகளில் சிக்குண்டு அழிந்தது? இந்த வரலாற்றினை அறிய சரித்திரத்தின் சில பக்கங்களில் மூழ்குவோம் வாருங்கள்..

    டோடோ என்னும் பறவையின் கதை..

    மடகாஸ்கர் தீவிற்கு கிழக்கில் உள்ளது மொரிஷியஸ் தீவுகள். 2040 சதுர கிலோமீட்டர் அளவுள்ள இந்த தீவுகள் இந்திய பெருங்கடலில் உள்ளது.

    கிபி 975ம் ஆண்டு இந்த தீவுகள் முதன் முதலாக அரேபிய கடலோடிகளால் கண்டறியப்பட்டது. அவர்கள் கண்டறிந்த போது இந்த தீவுகளில் மனிதர்கள் வாழ்ந்தற்கான அடையாளம் இல்லை. இந்த தீவுகளை அவர்கள் ‘தினா அரோபி’ என்று அழைத்துள்ளனர்.

    இதற்குப் பிறகு 1507ம் ஆண்டு போர்த்துகீசிய கடலோடிகளின் கண்களில் இந்த தீவு தென்படுகிறது. இந்த தீவுகளின் மீது சிறிதளவு ஆர்வத்தினைக் கொண்ட அவர்கள் தாற்கலிகமான தாங்கும் இடமாக அந்த தீவுகளை மாற்றுகின்றனர்.

    கிட்டத்தட்ட 120 வருடங்கள் அங்கு அந்த தீவுகளை தங்களது இருப்பிடமாய்க் கொண்டிருந்த அவர்கள் 1710ம் ஆண்டில் அந்த தீவுகளை விட்டு வெளியேறினார். 

    மனிதர்கள் இல்லாத அந்த தீவுகள் முழுவதிலும் உருவத்தில் பெரிய, பறக்க ஏதுவாக இல்லாத சிறகினை உடைய டோடோ என்கிற பறவைகள் விரவிக் கிடக்கின்றன.

    எதிர்ப்பதற்கு எந்த விலங்குகளும் இல்லை. தீவு முழுவதும் டோடோ பறவைகளுக்கே சொந்தம். உணவுகளுக்கும் பஞ்சம் இல்லாத நிலையில் ஒரு சொர்கமாயமான வாழ்க்கையினை மொரிஷியஸ் தீவினில் டோடோ பறவைகள் வாழ்ந்து வந்துள்ளன.

    டோடோ பறவைகளை பற்றிய எழுத்துவடிவிலான தகவலினை முதன் முதலாக 1598ம் ஆண்டு  டச்சு கடலோடிகள் அளித்துள்ளனர். அன்றைய தேதியிலிருந்து சராசரியாக 100 ஆண்டுகளில் மனிதர்களால் டோடோ பறவையினமானது அழிந்துப் போயுள்ளது.

    பல நூற்றாண்டுகளாக எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாத இடத்தில் வளர்ந்த டோடோ பறவைகள் பரிணாம வளர்ச்சியின் படி தங்களது பறக்கும் தன்மையினை இழந்துள்ளன. அவைகளுக்கும் பறக்கும் தேவை இருந்ததும் இல்லை.

    மேலும், அதிக அளவு உணவு கிடைத்ததாலும், பயம் என்பதனையே அறியாமல் இருந்ததாலும் டோடோ பறவைகள் அளவில் பெருத்தும் சோம்பேறியாகவும் இருந்துள்ளது. தங்களது முட்டைகளை அவை வெறும் நிலத்திலேயே இட்டுள்ளன.

    இவையெல்லாம் மனிதர்கள் அங்கு வருவதற்கு முன்னர் அவைகளுக்கு ஒரு பெரிய விடையமாய் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மனிதர்களின் காலடித்தடம் மொரிஷியஸில் பட்டதும் டோடோ பறவைகளின் நிலைமை முற்றிலும் மாறத் தொடங்கியது.

    எப்படி அழிந்தது..?

    பயம் என்பதினை அறியாத அந்த டோடோ பறவைகளுக்கு மனிதர்களை பார்த்ததும் ஓடி மறையத் தெரியவில்லை. அவைகள் பிடிக்கப்பட்ட போதும் கூட தப்பிக்க தோன்றாத நிலையில் இருந்துள்ளன.

    இதன் காரணமாக டோடோ பறவைகள் உணவிற்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டன.

    மனிதர்கள் டோடோ பறவையினைக் கொல்வது போன்று வரையப்பட்ட படம். மூலம்:விக்கிப்பீடியா

    மொரிஷியஸ் தீவுகளை பொறுத்த வரை 17ம் நூற்றாண்டு காலத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை 50ஐத் தண்டி இருக்கவில்லை.

    இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களா அவ்வளவு டோடோ பறவைகளைக் கொன்றார்கள் என்றால் ஆம் என்றுதான் கூற வேண்டும். மறைமுகமாக அவர்கள் செய்த இன்னொரு செயலும் டோடோ பறவைகள் விரைவில் அழியக் காரணமாய் இருந்தது.

    அந்த தீவுகளுக்கு குடியேறிய மனிதர்கள் தங்களுடன் பல்வேறு விதமான விலங்குகளையும் அழைத்து வந்துள்ளனர். பன்றிகள், குரங்குகள், பூனைகள், எலிகள் போன்ற விலங்குகள் அந்த தீவுகளுக்கு மனிதர்களால் கொண்டுவரப்பட்டன. 

    அவைகள் உயிருள்ள டோடோ பறவைகளை கொல்லாமல் இருந்தாலும் டோடோ பறவைகளின் முட்டைகளை தங்களது உணவாக மாற்றிக்கொண்டன.

    டோடோ பறவைகளின் இருப்பிடத்தினை அபகரித்தல், அவைகளின் வாழ்விடத்தினை அழித்தது, காடுகளை அழித்து அந்த தீவினில் டோடோ வாழ முடியாத நிலையினை உருவாக்குதல் போன்ற காரணங்களால் டோடோ பறவைகள் விரைவில் தங்களது இறுதி நாட்களினை நோக்கிச் சென்றன.

    மேற்கூறிய காரணங்களால் அழிந்து வந்த டோடோ பறவை கடைசியாக 1662ம் ஆண்டு அழிந்தது. பல லட்ச ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனம் மனிதனின் இடையூறுகளால் ஒரே நூற்றாண்டில் தடம் தெரியாமல் அழிந்துப் போனது.

    மொரிஷியஸ் நாட்டின் நாணயத்தில் இடம்பெற்றுள்ள டோடோ பறவை. மூலம்:விக்கிப்பீடியா

    டோடோ பறவைகளோடு அவை உணவாகக் கொள்ளும் டோடோ மரமும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. விறகுகளுக்காக வெட்டப்பபட்ட இந்த மரங்களில் தற்போது 13 மட்டுமே எஞ்சியுள்ளன. அந்த 13 மரங்களும் 300 வருடங்கள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    டோடோ பறவைகள் அழிந்த பிறகே அதிக கவனத்தினைப் பெற்றது. கதைகளிலும் பேச்சு வழக்குகளிலும் டோடோ வார்த்தை அதிகம் உபயோகிக்கப்பட்டது. டோடோ என்கிற வார்த்தை முட்டாள்தனத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

    மொரிஷியஸ் நாட்டுக் கொடியில் டோடோ பறவை இடம்பெற்றுள்ளது. மேலும் 1971ம் ஆண்டு, அந்த நாட்டில் வெளியிட்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் டோடோவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

    லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள டோடோ பறவையின் எலும்புக்கூடு. மூலம்:விக்கிப்பீடியா

    டோடோ பறவையானது, அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது.

    டோடோ பறவையின் பெயரில் விருதுகளும் கொடுக்கப்பட்டன. அழிந்து வரும் உயிரினங்களுக்கு ஆதரவான குரலாக டோடோ இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    இறுதி வார்த்தை..

    “நடந்து வரும் டோடோ பறவைகள்

    மொரிஷியஸின் சூரிய ஒளியினையும் காற்றினையும் அனுபவிக்கின்றன.

    சூரியன் இப்பொழுதும் அந்த நிலத்தில் படுகிறது;

    ஆனால் டோடோ பறவைகள் அங்கு இல்லை!!

    அவற்றின் குரல்கள் ஒலித்த நிலமெங்கும் மௌனம் குடிகொண்டிருக்கிறது.

    இருப்பினும் நீங்கள் அவற்றினை பார்க்கலாம்; அருங்காட்சியகத்தில் எலும்புகளாக..’

    1896ல் வெளிவந்த ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற ஆங்கிலப் பாடலின் தமிழ் வரிகள் இவை. டோடோக்களுக்கு முன்னரும், அவற்றிற்குப் பிறகும் பல உயிரினங்கள் தங்களது அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன/சென்றுள்ளன.

    கால நிலை மாற்றம், காடுகள் அழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, மிகுதியான இயற்கை ஆதாரங்களை உபயோகித்தல் போன்ற செயல்பாடுகளால் பல உயிரினங்கள் தங்களது இருப்பிடத்தினை இழந்தும், வாழ்க்கையினைத் தொலைத்தும் வருகின்றன.

    மனிதர்கள் இயற்கையின் பாதுகாவலர்கள். அறிவியல், வளர்ச்சி போன்றவை நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால் அந்த வளர்ச்சி நம்மையும், நம்மைச் சார்ந்துள்ள உயிரினங்களையும் அழிவின் பாதைக்கு கொண்டு செல்கிறது என்பது தான் வருத்தத்திற்குரிய விடயம்.

    இயற்கைக்கு எதிரான செயல்களில் இறங்கும் மனிதர்களினால் இந்த உலகை விட்டுச் செல்லும் ஒவ்வொரு உயிரினமும் டோடோ பறவை தான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....