Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்"என் வயித்துல எப்பொ நீ பொறக்கப் போறே?" வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் மாரியம்மன்!

    “என் வயித்துல எப்பொ நீ பொறக்கப் போறே?” வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் மாரியம்மன்!

    தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாக சமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு திருவிழா தொடங்கிய பின்னால்தான் மற்ற மாரியம்மன் கோயில்களில் திருவிழா தொடங்குவது ஐதிகமாம்.

    மஞ்சள் உடையும் மனசெல்லாம் பக்தியுமாக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திருச்சியின் எல்லா திசைகளிலிருந்தும் வெறுங்காலில் நடந்தே வருகிறார்கள். வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள். நேர்த்திக் கடன் தீர்க்க வருகிறார்கள். லட்சம் பிள்ளைகளை அரவணைக்க ஒரு தாய் இருக்கிறாள் என்கிற நம்பிக்கையில் வருகிறார்கள்.

    “சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே

    கண்ணபுரத்தாளே காரண சௌந்தரியே

    ஆயிரம் கண்ணுடைய அலங்காரி வாருமம்மா”

    என்று பாடிவரும் தன் பிள்ளைகளுக்காக தாயான மாரியம்மன் காத்திருக்கும் இடம்தான் ‘சமயபுரம். ‘இது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    கோயில் வரலாறு :

    சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்தகோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
    இங்கு தான் அம்மன் கோவில் உருவாகியதாக நம்பப்படுகிறது.

    அம்மனின் வரலாறு : 

    ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மாரியம்மன் வைணவியாய் இருந்தார். அவளின் உக்கிரம் அதிகமிருந்ததால் தாங்க முடியாத அன்றைய ஜீயர் அவளை அப்புறப்படுத்தினார். எடுத்துச் சென்றவர்கள் முதலில் ஓர் இடத்தில் வைத்து இளைப்பாறினர். அந்த இடம்தான் இப்போது ‘இனாம் சமயபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இப்போதும் திருவிழாவின் எட்டாம் நாள், ஓர் இரவு மாரியம்மன் அங்கு தங்குகிறது. மீண்டும் எடுத்துப்போய் கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்தார்கள். அந்த இடம்தான் இன்றுள்ள கோயில் அமைந்த இடம். இந்தத் தொன்மக் கதைக்கு மாறாக விஜயநகரத்து மன்னர்களால் அம்மன் உருவச்சிலை இங்கு கொண்டுவரப்பட்டது என்ற நம்பிக்கையும் உண்டு.

    தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், வரும் வழியிலிருந்த கண்ணனூர் மாரியம்மனிடம், வெற்றிபெற்றால் கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். வெற்றிபெற்ற மன்னர் சொன்னபடியே கோயில் கட்டி, நிர்வாகத்தையும் பூஜை முறைகளையும் திருவானைக்காவல் கோயிலிடம் ஒப்படைத்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் சமயபுரத்துத் தேரின்போது அகிலாண்டேஸ்வரி கோயில் பிரசாதம் அங்கிருந்து கொண்டுவரப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று’சமயபுரம் மாரியம்மன்” கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    அம்மனின் உருவம் :

    சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன் தலை மாலை கழுத்தில் சர்ப்பக் கொடையுடன் ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது. கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.

    அம்மனின் சிறப்பு :

    ஆதித் தமிழ் மரபின் எச்சமான மாரியம்மா சமயபுரத்தில் ஊரின் நடுவே அமர்ந்துள்ளார். கோயில் மூன்று சுற்றுகளை உடையது. கோயிலின் நீளம் கிழக்கு மேற்காக 280 அடி. அகலமோ தெற்கு வடக்காக 150 அடி. கோயில் மரம் வேப்ப மரம். அம்மன் கீழ் திசை நோக்கியும்; கருப்பண்ண சாமி தெற்குப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். கருவறையில் அம்மனைச் சுற்றி நீரைத் தேக்கிவைத்து, கோபம் தணிப்பதாக நம்புகிறார்கள். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம்.

    சமயபுரம் திருவிழாக்களின் ஊர். பொதுவாக பக்தர்கள் பட்டினி கிடந்து விரதம் இருப்பதுதான் வழக்கம். இங்கோ தாய் மாரியம்மா தன் குழந்தைகளுக்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாள்கள் “பச்சைப் பட்டினி விரதம்” இருக்கிறார்.

    சித்திரை திருவிழா:

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக போற்றி வணங்கப்படும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் அண்ணன் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது. அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறது.

    குழந்தைப் பேறு அருள்பவள்:

    குழந்தைப் பேறு இல்லாத பலர் முழு நம்பிக்கையோடு மாரியம்மனிடம் வந்து…

    “இருசி வயித்திலேயும் எம்காளி பொறந்திடுவே

    மலடி வயித்திலேயும் மாகாளி பொறந்திடுவே

    எத்தனை நாளா ஏங்கித் தவம் இருக்கேன்

    என் வயித்துல எப்பொ நீ பொறக்கப் போறே”

    என்று குழந்தைக்காக அழுகிறார்கள்.

    எளிய மக்களின் இவ்வளவு நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்தக் கோயில் காலை 5-30 க்குத் திறந்தால் இரவு 9-30 க்குத்தான் நடை அடைக்கப்படுகிறது. மாரியம்மனுக்கு நான்கு வேளை பூஜை நடக்கிறது.

    வாரத்தின் துவக்கம் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகிறதா?…இந்த வார ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....