Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்'இது பெயரு அசைவ உணவுதான்.. ஆனா, இதுல அசைவம் இல்ல' - உணவுத்துறையில் புதிய மாற்றம்!

    ‘இது பெயரு அசைவ உணவுதான்.. ஆனா, இதுல அசைவம் இல்ல’ – உணவுத்துறையில் புதிய மாற்றம்!

    இது அசைவம் மாதிரி…. ஆன அசைவம் இல்லை – தாவர அசைவம் ஒரு பார்வை:

    “அறிவியலுக்கு நாடுகள் தெரியாது, ஏனெனில் அது மனித குலத்துக்கு சொந்தமானது. அறிவியல் தான் இந்த உலகத்தை ஒளிர வைக்கும் ஒளிவிளக்கு” என்ற லூயி பாஸ்டர் வரிகளுக்கு ஏற்ப அறிவியலின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அதிலும் உணவு துறையில் அறிவியல் வளர்ச்சி நாளொரு வேகமும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் உணவு அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்று பலராலும் பேசப்படும் மற்றும் கவனிக்கப்படும் துறையாக மாறியுள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பது அனைவரின் முன்னுரிமையாகவும் மாறியுள்ளது.

    உணவு துறையில் ரோபோக்களின் பங்கு:

    மாடர்ன் கிச்சனில் தொடங்கி மாடுலர் கிச்சனில் வந்து நிற்கும் நம் சமூகம் விரைவில் ரோபோ கிச்சனை நோக்கி நகரப் போகிறது. தற்போது உணவு மற்றும் பேக்கிங் செய்யும் வரை ரோபோக்கள் வந்து விட்டன.

    வெளிநாடுகளில் பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு சமைக்கவும் ரோபோக்கள் வந்து விட்டன. அவைகள் மிகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் அவ்வளவு நேர்த்தியாகவும் உணவை சமைத்து விடுகின்றன.

    இந்தியாவை பொறுத்தவரை உணவு சமைப்பதுக்கு என்றும் ரோபோக்கள் இல்லாத போதும், உணவுத்துறையில், பயன்படுத்தும் ரோபோக்கள் இருக்கின்றன. நம் கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் ரோபாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    தாவர அசைவம் என்றால் என்ன ?

    இன்று உலகமே இதன் பின்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்! தாவரத்தாலான அசைவ உணவுகள்! அதாவது தாவர புரோட்டீன் உணவுகளை அசைவத்தின் ருசியில் தயாரிப்பதுதான் தாவர அசைவங்கள்.

    உண்பதற்கு அசல் அசைவ உணவின் ருசியேதான் இதில் இருக்கும். சத்துக்களுமேகூட அசைவத்தில் இருக்கும் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தின் அளவுக்கு கிட்டத்தட்ட இணையாக இருந்தாலும் இவை சோயா எனும் மீல் மேக்கரிலும், வேர்க்கடலையிலும் அவகேடோவிலும் உள்ள புரதங்களையும் கோதுமையின் குளூட்டானையும் பயன்படுத்தி இந்த புரதச்சத்து நிறைந்த தாவர அசைவங்கள் தயாரிக்கப்படுகின்றன.

    அசைவத்தின் சுவையைக் கொடுக்க அதற்கான பிரத்யேக நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும் இந்த தாவர அசைவ உணவு கடந்த ஒரே ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட இருபத்தி மூன்று சதவீத விற்பனை உயர்வு கண்டிருக்கிறது.

    அமெரிக்காவின் ஒட்டுமொத்த அசைவ உணவுத் தேவையில் 0.15% சதவீத சரிவை இந்த தாவர அசைவ உணவுகளின் விற்பனை நிகழ்த்தியுள்ளது. இந்த தாவர அசைவங்கள் அமெரிக்காவின் மாட்டுக்கறி விற்பனையில் 1.2% விற்பனைச் சரிவை உருவாக்கியிருக்கிறது. இது எதிர் காலத்தில் மேலும் அதிகமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

    அப்படியானால், அந்தத் தேவையை எதிர்கொள்வதற்கான திட்டங்களும் நம்மிடம் அவசியம். அதற்கு இந்த தாவர அசைவங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு பயன்படும் என்கிறார்கள்.

    முள் இல்லாத மீன், மாடில்லாத பால், கறி இல்லாத அசைவம் கேள்விப்பட்டு உள்ளீர்களா? 

    சால்மன் மீன்கள் முதல் ட்யூனா மீன்கள் வரை பலதரப்பட்ட முக்கியமான் கடல் மீன்கள் இன்று பரிசோதனைக் கூடங்களிலேயே உருவாக்கப்படுகின்றன.

    இந்த மீன்களின் செல்களை பரிசோதனைக்கூடத்தில் வைத்து இவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. அதனால் இவற்றை செல் பேஸ்டு மீன்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த மீன்களில் முள் இருக்காது, தோல் இருக்காது, கண்கள் இருக்காது; வெறும் சதைப்பகுதி மட்டுமே இருக்கும்.

    சாதாரண கடல் மீனில் இருக்கும் எல்லா சத்துக்களும் இந்த மீனில் அப்படியே இருக்கும். ஆனால், இவை சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்டு செயற்கைப் பண்ணைகளில் தயாரிக்கப்படும் மீன்கள் ஆகும்.

    இனி எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயன்படப் போகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டியது இது போன்ற மீன் தயாரிப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை மீன்கள், பாக்கெட்டுகள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்டு சூப்பர் மார்க்கெட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த சந்தை உலகம் முழுதும் விரிவடைய கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

    அடுத்தது மாடில்லாத பால். இது கிட்டத்தட்ட நம்மிடம் ஏற்கெனவே உள்ளதுதான். சோயா, வேர்க்கடலை போன்ற புரதச்சத்து நிறைந்த தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி பாலைப் பிழிந்தெடுத்து அதைக் கொண்டு பல்வேறு வகையான வீகன் பால் பொருட்களைத் தயாரிப்பதுதான் இந்தத் தொழில்நுட்பம்.

    இது இன்று மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் உணவுச் சந்தை என்கிறார்கள். வீகன் டயட் இருப்பவர்கள் மட்டுமல்லாது அசைவப் பிரியர்களுமேகூட இந்த சைவ பால் பொருட்களை இதன் ருசிக்காகவும் இதன் சத்துகளுக்காகவும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் இதற்கான தனியான கிளப்புகள் எல்லாம் இருக்கின்றன. தனியான கபேக்கள் இருக்கின்றன.

    இறுதியாக, கறி இல்லாத (பண்படுத்தப்பட்ட) அசைவம். இதுவும் விலங்குகளின் செல் மற்றும் திசுக்களைப் பயன்படுத்தி பரிசோதனைச் சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கை அசைவங்கள்தான்.

    இது சுமார் இருபது வருடங்களாகப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இனப்பெருக்க ஊசிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த புதியவகை அசைவங்களில் சாதாரண சிக்கன் அல்லது பீஃபில் இருக்கும் அளவுக்கான அதே வகை புரதம், கொழுப்புச்சத்து இரண்டும் உண்டு.

    கடந்த 2020ம் ஆண்டில் சிங்கப்பூரில் முதன் முதலாக இந்த சிக்கன் பர்கர் விற்பனைக்கு வந்தது. இன்று உலகம் முழுதும் பல உணவகங்களில் இந்த பண்படுத்தப்பட்ட அசைவம் அதிகமாக உண்ணப்படுகிறது.

    இந்த புதிய உணவுகள் ஆரோக்கியமானதா என்ற விவாதம் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் வழக்கமாக உண்ணும் அதே உணவுகள்தான். இதன் தயாரிப்பு முறைகள் மட்டுமே நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் இருக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    ஆனால் அதே நேரத்தில் இதில் சேர்க்கப்படும் ஹார்மோன் ஊசிகள், செயற்கையான சுவையூட்டிகள், மணமூட்டிகள் எல்லாம் உடலுக்கு எவ்வளவு நன்மை என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று விமர்சிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    உங்க எடையை குறைக்கனுமா? அப்போ இதை செய்யுங்க….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....