Tuesday, May 16, 2023
மேலும்
  Homeஆன்மிகம்ஏன் வாசலில் கோலம் போடுகிறோம்? கோலம் உணர்த்தும் அறிவியல் என்ன?

  ஏன் வாசலில் கோலம் போடுகிறோம்? கோலம் உணர்த்தும் அறிவியல் என்ன?

  நம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காகச் செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும்.

  நாம் கோலத்தைப் பார்த்திருப்போம், பெண்கள் அதைப் போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை பெரும்பாலர் அறிந்திலர். ஆனால் அந்தக் கோலத்தை ஏன் போடுகிறோம்?, எதற்காகப் போடுகிறோம் என்று நமக்குத் தெரிந்திருக்க இயலாது. இனி அதைத் தெரிந்துக்கொள்வோம்.

  கோலம் ஏன் போடுகிறோம்?

  ஒரு இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும்.

  ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

  கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர். வட நாட்டவர் அதை ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான்! அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்த பிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃபிளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அன்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்வீகத்தை மறந்து விட்டோம்.

  கோலத்தின் வகைகள்:

  ஆனால் கோலத்தில் என்னென்ன வகைகளுண்டு? அவற்றின் குணாதிசயம் என்னென்ன என்று தெரிந்துக் கொள்வதும் அவசியம். கோலத்தில் மூன்று வகையுண்டு.

  புள்ளிக்கோலம் – புள்ளிகளை வரிசையாகவும் ஊடாகவும் கணக்கிட்டு வைத்து அதனை இணைத்து வடிவத்தை கொண்டுவருதல்.

  நெளிக்கோலம் – அதேபோல் புள்ளிகளை வரிசையாகவும் ஊடாகவும் கணக்கிட்டு வைத்து அப்புள்ளிகளுக்கு இடையில் நெளிந்து செல்லும் கோடுகளில் வடிவத்தை கொண்டுவருதல்.

  ரங்கோலி – புள்ளிகள் இல்லாமல் கற்பனை மூலம் தேவையான வடிவத்தை வரைதல். இதற்கு முடிவென்பது இல்லை. ஒரே ரங்கோலி கோலத்தை ஒரு மைதானம் நிறையுமளவு வரைய முடியும்.

  கிழமைக்கு ஏற்றவாறு கோலம் போடலாமே!

  ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கோலம் உண்டு. உதாரணமாக ஞாயிறன்று சூரியக்கோலம். திங்களன்று சந்திரக்கோலம்.

  தீபாவளி அன்று தீபக்கோலம், பொங்கல் அன்று பொங்கல்பானை கோலம், திருமண வீடுகளில் மலர்க்கோலம், கோயில் திருவிழாக்களில் மலர், தீபம், அன்னம், மயில், சங்கு என்று பலவித கோலங்களை இடுவர். பூஜையறையில் அறுங்கோண எண்கோண வடிவ கோலங்களை இடுவர்.

  விடியற்காலையில் சூரியன் விழிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டுப் பெண்கள் விழித்து வாசலைச் சுத்தப்படுத்தி மாட்டுச் சாணத்தைத் தெளித்துக் கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள் இது நம் பண்பாட்டிற்குரியது. இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம்.

  பூக்களை நெருக்கமாக இணைத்துக் கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்துக் கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்ப்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.

  மார்கழி மாத பனிக்காற்று மருத்துவகுணம் கொண்டது. ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழி மாதம் இருக்கிறது. அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் செய்யாமல் இருப்பார்கள்.

  அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் போட வேண்டும். அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

  மும்மூர்த்திகளை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் கோலம்:

  மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது.

  அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை. இது பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசு சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணி பூவை வைப்பார்கள்.

  பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது. இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது.

  பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது, சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

  கோலத்தின் சிறப்பு அம்சங்கள்:

  கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

  தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது. வெள்ளிகிழமையிலும் பவுர்ணமி தினங்களிலும் தாமரைபூ கோலம் போட்டால் இந்த இல்லத்திற்கு ஸ்ரீலஷ்மிவாசம் கிடைக்கும்.

  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் வீட்டில் தினமும் அழகழகான கோலம் போடுங்கள், அந்த கோலத்தை கலைத்து விளையாட ஒரு மழலை பிறக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு.

  அரிசிமாவின் மூலம் குனிந்து கோலமிடுவது ஒரு யோகாசனம் ஆகும். இதன்மூலம் இடுப்பு மற்றும் முதுகு, மூட்டு எலும்புகள் வலுப்பெறும். அரிசிமாவை சிறு ஜீவராசிகள் உணவாக எடுத்துச் செல்வதால் தானம் செய்த புண்ணியம் சேரும்.

  கோலத்தில் இடப்படும் புள்ளிகள் மற்றும் வடிவங்களால் சிந்தனைத் திறன், ஓவியத்திறன், கற்பனைத் திறன் நினைவுத்திறன் என்று மூளையின் ஆற்றல் பெருகுகிறது.

  அரிசியைத் தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்குக் கூட காரணம் இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணைத் தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படித் தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்குப் பேராசை என்பது எப்படி வரும்? என்ற கருத்து சொல்லப்படுகின்றது.

  அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. காரணம் அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது.

  பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும். அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தோஷம் ஏற்படும். இறைவனின் சக்கர சின்னங்களை பூஜை அறையில் மட்டும்தான் கோலமாக போட வேண்டும். வாசலில் போடக்கூடாது.

  வாசலில் இருக்கும் கோலத்தை வைத்தே வீட்டு சூழ்நிலையும் அவர்கள் இனத்தையும் கூட கண்டுபிடித்து விடலாம் என்பர்.

  எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.

  அட! நம்ம சூப்பர் ஸ்டாரா இது? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் ரஜினிகாந்தின் புகைப்படம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....