Monday, March 18, 2024
மேலும்
  Homeசிறப்பு கட்டுரைஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! படிப்போம், காப்பாற்றுவோம்!

  ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! படிப்போம், காப்பாற்றுவோம்!

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் ஸ்வீடெனில் நடக்கும் சுற்றுச்சூழல் தினத்தில் 193 நாடுகள் பங்கேற்கின்றன. பல லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர்.

  முதலாவது சுற்றுச்சூழல் தினம்:

  பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் தரப்பில் 1972ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் நகரில் முதன் முதலாக இந்த உலக சுற்றுச்சூழல் தினம் அறிவிக்கப்பட்டது.

  இயற்கை வள ஆதாரங்களை அழிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தல், இயற்கைக்கு எதிராக இருக்கும் நடவடிக்கைகளைத் தடுத்தல், மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாழ்வதற்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் நிலம் நீர் காற்று போன்றவைகள் மாசடைவதிலிருந்து தடுத்தல் போன்ற காரணங்களுக்காக 1972ல் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்தச் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  இந்தச் சுற்றுச்சூழல் தினம் உருவாக்கப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் இந்த சுற்றுச்சூழல் தினமானது இந்த வருடம் ஸ்வீடன் நாட்டில் கொண்டாடப்படவுள்ளது.

  முதல் சுற்றுச்சூழல் தினமும் ஸ்வீடன் நாட்டில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஸ்டாக்ஹோல்ம்+50 என்கிற வார்த்தை தற்போது பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

  சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்..

  பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றது. அதிகரித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்.

  உணவு உற்பத்திக்காக பெருமளவு காடுகளை அழித்து விவசாயத்தினை நடைமுறைப்படுத்துதல், ஒரே பயிரினை திரும்ப திரும்ப விளைவித்து மண்ணின் தன்மையினைக் குறைத்தல், பயிர்களில் விரைவான வளர்ச்சிக்கு அதிக அளவு வேதியுரங்களைப் பயன்படுத்துதல், பெருமளவு விவசாயத்திற்கு அதிக அளவு தண்ணீரினை உபயோகப்படுத்துதல் என இயற்கை முறையில் நடக்க வேண்டிய விவசாயத்திலேயே பல செயற்கை முறையினை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

  விவசாயத்திலேயே இவ்வளவு குளறுபடிகள் நடக்கும்போது மற்ற துறைகளைப் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை.

  அதிக அளவு பிளாஸ்டிக் உற்பத்தி, பல்வேறு தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வெளிவிடும் நச்சு வாயுக்கள், விஷம் கலந்த கழிவுகள் என தங்களால் முடிந்த உதவியினை இயற்கைக்கு செய்து வருகின்றனர்.

  தனி மனிதர்களும் தங்களது கடமையினை மறந்து, பொது இடங்களில் குப்பை கொட்டுதல், அதிக அளவு கழிவுகளை பொதுவெளியில் வெளியேற்றுதல் என இயற்கைக்கு பல நன்மைகளை தினம் தினம் செய்து வருகின்றனர்.

  படித்த மக்கள் படிக்காத மக்கள் என அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் கேடுகளைப் பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் பல வருடங்களாகத் தொடரும் இந்த நடவடிக்கைகளால்தான் இன்று நாம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

  கரியமில வாயுவின் உயர்வு, குப்பைகளினால் கெட்டுப்போன நிலங்களின் பரப்பளவு அதிகரித்தல், உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்தல், வாழ்வதற்கு தகுதியில்லாத நிலங்கள் உருவாதல், பாலைவனப்பரப்பு அதிகரித்தல், கடல்நீர் மட்டம் உயர்தல், அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுதல், புதிய வகையான நோய் உருவாதல், பருவநிலை மாற்றத்தினால் அதிக அளவு மழை/அதிக அளவு வெப்பம் நிலவுதல் என ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு பல இன்னல்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

  இந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து இந்த உலகத்தினையும், மக்களையும், பிற உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு ஒவொரு நாட்டின் அரசாங்கம் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனி மனிதனும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைகளின் முக்கியத்துவத்தினை உணரவேண்டியுள்ளது.

  ஒட்டுமொத்த மனித இனமும் சேர்ந்து உழைக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நிகழ்வான இந்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட உள்ளது.

  ஒவ்வொரு வருடமும் ஒரு மைய கருத்தோடு அனுசரிக்கப்படும் இந்த நிகழ்விற்கு இந்த வருடம் ‘ஒரே ஒரு உலகம்’ என்ற மையக்கருத்து வைக்கப்பட்டுள்ளது.

  நமக்கு இருப்பது ஒரு உலகம் மட்டுமே, எனவே இந்த உலகத்தினைக் காக்க வேண்டிய பொறுப்பும், பிற உயிர்களுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய கடமையும் மனிதர்களுக்கு உள்ளது என்பதனை நினைவு கூர்வதற்காகவும், சுற்றுச்சூழலினைப் பாதுகாக்க செய்யவேண்டிய நடவடிக்கைகளை பற்றி கலந்தாலோசிக்கவும் நாளை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

  தற்போதைய நிலவரம்..

  மனித குலமானது இயற்கை ஆதாரங்களை அதிக அளவு உபயோகித்து வருகின்றனர். இந்த அளவானது, இயற்கை அதன் பழைய நிலைக்கு திரும்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட விரைவாய் உள்ளது.

  இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைத்து உலகம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு ஆக வேண்டிய செலவு சராசரியாக வருடத்திற்கு 500 பில்லியன் டாலராக உள்ளது.

  2014ம் ஆண்டு இந்தத் தொகை வருடத்திற்கு 100 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  கரியமில வாயுக்களின் அளவு 2030ம் ஆண்டுக்குள் குறைக்கப்பட வேண்டும். பழைய நிலையே தொடருமாயின் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகத்தின் சராசரி வெப்பநிலையானது 2.7 டிகிரி செல்சியஸ் அளவு உயர வாய்ப்புள்ளது.

  இந்த உலகத்தினை ஆபத்திலிருந்து காப்பற்றுவதற்கான நேரம் நமது கைமீறி சென்று கொண்டிருக்கிறது. தற்போதுள்ள வாழ்க்கை முறைக்கு 1.6 அளவு பூமியானது தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  உலகத்தின் வெப்பநிலையானது இன்னும் இரண்டு டிகிரி செல்சியஸ் உயருமாயின், வாழத்தகுதியற்ற ஒரு கிரகமாக இந்த உலகம் மாறுவதிலிருந்து நம்மால் தடுக்க முடியாது என பல விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர்.

  1900ம் ஆண்டினை ஒப்பிடுகையில் தற்போதுள்ள கடல் மட்டத்தில் அளவானது 20 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  அதிக அளவு உயரும் வெப்பநிலையினால் ஏற்படும் பருவநிலை மாற்றமானது உணவு உற்பத்தியில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

  உணவுத் தட்டுப்பாட்டினால் பல போர்களும், மக்களிடையே கலவரங்களும் ஆட்சிக் கவிழ்ப்பும் நடைபெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  தனிமனிதனாக நாம் செய்ய வேண்டிய கடமைகள்..

  அரசாங்கமானது சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் இயன்ற அளவு முயன்றாலும், அந்த முயற்சி வெற்றியடைவது என்பது அந்த நாட்டின் குடிமக்களை பொறுத்தே உள்ளது.

  இந்த விடயத்தில் எடுத்துக்காட்டாக நமது நாட்டினை எடுத்துக்கொள்வோம்..

  குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றினை தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்பது பலகாலமாக நடைமுறையில் இருந்து வரும் சட்டங்களில் ஒன்று. ஆனால் இன்று வரை பலருக்கும் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது என்பது எப்படி என்றே தெரியாமல் உள்ளது.

  பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கும், குப்பையினை தரம்பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக அள்ளிப்போட்டுகொண்டு செல்லும் குப்பை வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டும் என்ற சட்டமும் நடைமுறையில் உள்ளது.

  இம்மாதிரியான பல சட்டங்கள் குப்பைகள் கையாள்வது பற்றி நடைமுறையில் உள்ளது. ஆனால் இதனைக் கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிகளும், கல்லூரிகளும் தவறுகின்றன. இதனால் ஒரு கவலையற்ற வருங்கால சந்ததி உருவாகிறது என்பது கவலைக்குரிய விஷயம்.

  குப்பைகள் கொட்டும் இடம் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும், நிலத்தடி நீர்மட்டமானது இந்த குப்பைகளில் இருந்து உருவாகும் கழிவுகள் கலக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

  அந்த இடத்தின் மேற்பரப்பானது சிமெண்ட் அல்லது களிமண் கொண்டு இறுகிய மேற்பரப்பாக இருக்க வேண்டும்.

  ஆறுகள் குளங்கள் பக்கத்தில் இம்மாதிரியான குப்பை கொட்டும் இடங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இம்மாதிரியான விடயத்தினை அரசு செய்யத்தவறுவதுடன் அதனை எதிர்த்து போராட மக்களும் முயற்சி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரே வாகனத்தினை அதிக காலம் உபயோகிப்பது. வாகனத்தினை சரியாகப் பராமரிக்காமல் ஓட்டுவது, வீட்டுக் கழிவுகளை பொது சாக்கடைகளில் இணைப்பது.. ஒரு சாக்லெட் பாலிதீன் கவரினைக் கூட குப்பைத்தொட்டியில் போடத் தவறுவது என மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளில் கூட அதிக அளவு மாசுபாட்டினை உருவாக்குகின்றனர்.

  தனி மனித ஒழுக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படாமல் சுற்றுச்சூழலில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.

  முடிவுரை..

  15-20 வருடங்களுக்கு முன்னர், எங்கள் ஊரில் உள்ள ஆறு, எந்த விதமான கழிவுகளும் கலக்காமல் கருவேல மரங்களும் இல்லாமல், மிக சுத்தமாக இருந்தது. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடவில்லையென்றாலும், மழைவரும் போது வரும் தண்ணீரானது குப்பைகள் இல்லாமல் இருக்கும்.

  அழகான சூழ்நிலையில் இருந்த அந்த ஆற்றிற்கு அருகில் முதன் முதலாக ஒரு குப்பை கொட்டும் இடத்தினை உருவாக்கினர். அந்த இடம் உருவானதிலிருந்து அந்த ஆறு ஒவ்வொரு நாளும் தனது தன்மையினை இழந்து வந்தது.

  கழிவுநீர்களும் அந்த ஆற்றில் கலக்கப்பட்ட நிலையில், பன்றிகளும், காகங்களும் அதிக அளவு அந்த ஆற்றுப்பகுதியில் குவிய ஆரம்பித்தன.

  பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழை குப்பை கொட்டும் பகுதியில் இருக்கும் குப்பைகளை ஆறு முழுவதும் அடித்துச் செல்கிறது.

  இன்று அந்த ஆறு தனது உயிரினை இழந்து வருகிறது. தனது இறுதிக்காலத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

  இரவு நேரங்களில் எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உருவாகும் புகை மூட்டமானது அந்த பகுதியினையே பெரும் இக்கட்டினை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

  பல வருடங்களாக எங்கள் ஊரின் தண்ணீர்த் தேவையினை பெருமளவு பூர்த்தி செய்த அந்த ஆறு இப்பொழுது வருடம் முழுவதும் கழிவுகளால் நிரம்பிக்கிடக்கிறது.

  பலரின் ஆக்கிரமிப்புகளால் சில இடங்களில் தனது இடத்தினை அந்த ஆறு இழந்துள்ளது. தன்னுடன் பயணித்த பல துணை ஆறுகளையும், சிற்றோடைகளையும் இன்று அந்த ஆறு இழந்துள்ளது.

  வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன. கடைகளும், பள்ளிகளும் இன்று அந்த ஓடையினை இல்லாமல் செய்துள்ளன.

  நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்துவிட்டுச் சென்ற ஒவ்வொரு இயற்கை ஆதாரங்களும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் அழிந்து வருகின்றன.

  இயற்கை வளங்களையும், பல நினைவுச் சின்னங்களையும் நமக்கு நமது முன்னோர்கள் விட்டுச் சென்றது போல, தண்ணீரில்லாத ஒரு உலகத்தினையும், குப்பைகள் நிறைந்த ஒரு உலகத்தினையும், வாகனப் புகையும், நச்சு வாயுக்களால் சூழ்ந்த ஒரு உலகத்தினையும், உயிர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத ஒரு உலகத்தினை நாம் நமது வருங்காலத்திற்கு விட்டுச்செல்லவிருக்கிறோம்.

  இன்னும் இந்த பூமியில் கால் வைக்காத அடுத்த தலைமுறைக்கும், எந்த தவறும் செய்யாத உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் நாம் சொல்லப்போகும் பதில் தான் என்ன??

  நமது சுயநலத்தினால் அதிக அளவு ஆதாரங்களை அழித்துவிட்டோம் என்று கூறப்போகிறோமா? யோசியுங்கள்.. இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்.

  விருப்பத்துடன் மதமாற்றம் செய்யத் தடையில்லை: கட்டாய மதமாற்றமே குற்றம்!

   

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....