Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைகால்பந்து உலகக் கோப்பை - விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு...

    கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..

    விளையாட்டு என்பது வெறுமனே திறன் சார்ந்தது மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமானதும் கூட. தற்போதும், உணர்வுப் பெருக்குகளின் எழுச்சியை பல்வேறு விளையாட்டு மைதானங்களில் நாம் காணலாம். ஆயிரமாயிரம் விளையாட்டுகள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனி ரசிக பட்டாளம் இருந்தாலும், உலகளவில் என்று வரும்போது கால்பந்து என்ற ஒற்றை விளையாட்டிற்கு இருக்கும் ரசிக பட்டாளம் என்பது மிகவும் பெரிது. 

    கால்பந்து மைதானங்களில் வெற்றி குதூகலிப்பு மட்டுமல்ல, கொலையும் நடந்த கதைகள் உள்ளன. அந்தளவிற்கு கால்பந்தின் மீதான தீவிரத்தன்மை என்பது நிலவி வருகிறது. சாதரணமாக கிளப்புகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து போட்டிள், நாடுகளுக்கிடையே சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே நடைபெறுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உலகக் கோப்பை, கோப்பா அமெரிக்கா, யுரோ போன்ற தொடர்களுக்காக மட்டுமே கால்பந்து வீரர்கள் தங்களது நாடுகளுக்காக, நாட்டின் அணியில் இடம்பெற்று விளையாடுகின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிதான் வருகிறது. இருப்பினும், கால்பந்து விளையாட்டு போட்டிகள் இவ்வாறாகத்தான் நிகழ்கின்றன. 

    எது? எப்படி நிகழ்ந்தாலும், கால்பந்து போட்டிக்கான தீவிரம் என்பது துளியும் குறைந்தபாடில்லை. மாறாக தீவிரத்தன்மை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில்தான், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) நடத்தும் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ஆம் வரை நடைபெறவுள்ளது. 

    football

    உலகமே வியக்கும் வண்ணம் கத்தாரில் இம்முறை கால்பந்து உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையை நடத்த பல முக்கிய நாடுகள் போட்டியிட அனைத்தையும் மீறி கத்தார் உலக கோப்பையை நடத்தும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எப்படி இது சாத்தியமாயிற்று? என உலகமே வியந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிறிய நாடான கத்தார் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் உலகக் கோப்பையை நடத்துவது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    கடந்த 2009-ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடத்துவதற்கான ஏல நடைமுறை என்பது தொடங்கியது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், கத்தார், தென் கொரியா, அமெரிக்கா போன்ற 5 நாடுகள் போட்டியிட்டன. இந்த போட்டியிலிருந்து உலகக் கோப்பையை நடத்தும் நாட்டைத் தேர்ந்தெடுக்க 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி சூரிக் என்ற பகுதியில் பிஃபாவின் 22 உறுப்பினர்களும் கூடினர். இந்த உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் எந்த நாடு உலகக் கோப்பையை நடத்தும் என்று தீர்மானிக்கப்படும். 

    அதன்படி, மொத்தமாக 5 சுற்றுகள் நடத்தப்பட்ட வாக்குப்பதிவின் இறுதியில் 14 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று கத்தார், கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் தகுதியைப் பெற்றது. ஆனால், கத்தாருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிஃபாவுக்குள் நடைபெற்ற ஊழலின் காரணமாகவே கத்தாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

    fifa

    மனித உரிமை மீறல்கள் நடைபெறும் ஒரு நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை நடத்தப்படுவது சரியாகுமா? என்று கேள்வி எழும்பின. மேலும், கத்தாரில் உலகக் கோப்பை நடைபெற்றால் நவம்பர்-டிசம்பர் மாதத்தில்தான் நடத்த முடியும். ஆனால், இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. அப்படியே நடத்தினாலும்,  யுஇஃப்ஏ நடத்தும் சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்று வரும் கால்பந்து தொடர்களில் மாற்றம் செய்யவேண்டிய சூழல் வரும் என பல எதிர்ப்புகள் வந்தன.  

    கேள்விகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தாலும், கத்தார் உலகக் கோப்பையை நடத்துவதற்கான பணியை 2010-ஆம் ஆண்டே ஆரம்பித்தது. இருந்தாலும், கனியுள்ள மரங்கள் மீது வீசப்படும் கற்கள் போல கத்தாரை நோக்கி விமர்சனங்களும், சர்ச்சைகளும் வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. வீசும் கற்களை சாமர்த்தியமாக விலக்கி கத்தார் மாபெரும் ஒரு நகரை உருவாக்கி கொண்டிருந்தது. 

    ஆம், 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதியதாக ஏழு கால்பந்து மைதானங்கள், புதிய மெட்ரோ நிலையங்கள், புதிய நெடுஞ்சாலைகள், புதிய நட்சத்திர விடுதிகள்  என நீண்டதோடு, இந்த கால்பந்து உலகக் கோப்பைக்கு ஏதுவாக புதிய விமான நிலையத்தையும் கத்தார் அமைத்தது. இவை அனைத்தையும் குறிப்பிட்ட நகரத்திற்குள் கத்தார் அமைத்துள்ளது. அவ்வபோது இதை செய்திகளாக கேட்ட உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கின. இதற்கு முன்பாக பிரேசில் 2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காக 15 பில்லியன் டாலர் செலவு செய்ததே அதிகமாக இருந்த நிலையில், கத்தார் 220 பில்லியன் டாலர் செலவு செய்வதை அனைவரும் வியப்போடு கண்டு வருகின்றனர். 

    இதனிடையே, பிஃபாவின் 22  உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் வாக்களித்த மூன்று மாதங்களில் தங்களுடைய பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அதோடு, 17 ஆண்டுகளாக பிஃபாவின் தலைவர் பதவியில் இருந்த சீப் பிளாட்டர், 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில நாட்களில் ராஜினாமா செய்தார். மேலும், அவர் மீது ஸ்விடசர்லாந்து நாட்டில் முறைகேடாக பணம் வைத்துள்ளது உள்ளிட்ட பல வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. கத்தாருக்கு உலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கிய போது சீப் பிளாட்டர்தான்  பிஃபாவின் தலைவர் பதவியில் இருந்தார். 

    இதோடு மட்டுமல்லாது, 2015-ம் ஆண்டு பிஃபா நிர்வாகிகள் 6 நபர்கள் அமெரிக்காவில் முறைகேடாக பணம் கைமாறியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ள்ளாக்கபட்டனர். இப்படியான நடவடிக்கைகள் கத்தாரின் மீது மேலும் சர்ச்சையை உருவாக்கின. 

    எப்படியான சர்ச்சை உருவாகினாலும், கத்தார் அதை சமாளித்து வருகிற 20-ஆம் தேதி முதல் முறையாக கால்பந்து உலகக் கோப்பையை நடத்தவுள்ளது. இதன் மூலம் அரபு நாடொன்றில் முதல் முறையாகவும், ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. 

    Qatar

    நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால்பந்து திருவிழாவுக்காக வீரர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் என பலர் தயாராகி வருகின்றனர். கால்பந்திற்காக நகரத்தை உருவாக்கியோதோடு மட்டுமல்லாமல், திறம்பட கால்பந்து போட்டியை நடத்தி காட்டியாகவேண்டும் என்ற முனைப்பில் தற்போது கத்தார் தீவிரமாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கண்டனம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....