Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை பொருளாதாரம் வீழ்ந்தது எப்படி?

    இலங்கை பொருளாதாரம் வீழ்ந்தது எப்படி?

    கம்பராமாயணம் தொட்டு அல்ல இன்று வரை அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் இலங்கை. 4 பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு.

    ஆனால், உள்நாட்டுக் குழப்பம், போர் போன்ற பாதிப்பினால், இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவித்து, சீனாவிடம் அடகுவைக்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது.

    இதனால் உலக சுற்றுலா தளத்தின் பேரரசியாக திகழ்ந்த இலங்கை தீவு இன்று உள்ளூர் வாசிகள் வசிப்பதற்கே லாயக்கற்றதாய் மாறிவருகிறது. இலங்கையில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுக்கு தவிக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

    கடும் நெருக்கடியில் இலங்கைப் பொருளாதாரம்:

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்?

    21-ம் நூற்றாண்டில் கூட இலங்கையின் பொருளாதார எதிர்காலம் தேயிலை, ரப்பர், ஏலக்காய், மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியைச் சுற்றியே பிணைந்திருக்கிறது.

    தேயிலை – ரப்பர் போன்ற பிரதான பொருள்களின் ஏற்றுமதி, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், வெளிநாடுவாழ் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்த வருமானம் ஆகியவற்றின் மூலமே அது தனக்குத் தேவைப்பட்ட அன்னியச் செலாவணியைப் பெற்றுவந்தது.

    அந்த அந்நியச் செலாவணியைக் கொண்டுதான் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டது.

    இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீத ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது. இதில் ஆயத்த ஆடைகளின் மொத்த ஏற்றுமதியின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது, சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

    பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநடப்பு:

    2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 (-16.3) சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

    சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் வறண்டது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.

    அரசின் அதிகமான கடன்:

    உள்நாட்டு போருக்கு பின், அதிகளவு கடன்களை வாங்கி குவித்ததால், 2019ல் இலங்கையின் சர்வதேச கடன் 33 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாகும்.

    இலங்கையின் தேசிய செலவினம், வருவாயைவிட அதிகமாக இருப்பதாகவும், வர்த்தகம் செய்யக்கூடிய பொருள்கள், சேவைகளின் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் அப்போதே எச்சரித்தது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்நிலையில், இலங்கை சுற்றுலாவுக்கு பேரிடியாக அமைந்தது 2019 ஈஸ்டர் தாக்குதலும், கொரோனா கோரத்தாண்டவமும். 2018-ம் ஆண்டு மட்டும் சுற்றுலா துறை மூலம் 5.6 பில்லியன் டாலர் கிடைத்திருந்தது.

    சுற்றுலா வீழ்ச்சியுற்ற நிலையில், அந்நிய செலாவணி அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. 2019 ல் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே அரசு, வாட் வரியை 15% லிருந்து 8% ஆக குறைத்ததால் அரசின் வரிவருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டது. கொரோனாவால் தேயிலை, ரப்பர், ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

    2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறியிருந்தது.

    இலங்கை அரசு இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் திடீரென கொரோனா மூலம் வந்தவை என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்த்தது ராஜபக்ச அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    திட்டமிடாத இயற்கை விவசாயம்:

    இதற்கிடையே அந்நியச் செலாவணி வெளியே செல்வதை தவிர்க்க இறக்குமதியை கட்டுப்படுத்திய அரசு, 2021 மே மாதம் உர இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியது.

    இலங்கை ஆண்டுதோறும் உர மானியமாக 26 கோடி அமெரிக்க டாலர்களை (ஜிடிபியில் 0.3%) செலவிட்டு வந்தது. பெரும்பாலான உரம் இறக்குமதி மூலம்தான் பெறப்பட்டது. இறக்குமதியால் செலவாகும் அந்நியச் செலாவணிகளை மிச்சப்படுத்த ராஜபக்ச அரசு – மிகவும் வினோதமான முடிவை எடுத்தது. 2021 மே முதல் வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படாது என்று அறிவித்தது. ஒரே நாளில் இலங்கை முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.

    ரசாயன உரங்கள் பயன்பாட்டை ஒரேயடியாகக் கைவிட்டுவிட்டு இயற்கை விவசாய முறைக்கு மாறினால் சாகுபடி கணிசமாகக் குறைந்து அத்தியவாசிய உணவுப் பொருள்களுக்கே கடும் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்படும் என்று வேளாண் விஞ்ஞானிகள் உள்பட அனைவரும் ராஜபக்சவை ஒரே குரலில் எச்சரித்தனர். நெல் சாகுபடியில் 25%, தேயிலைச் சாகுபடியில் 35%, தென்னைச் சாகுபடியில் 30% வீழ்ச்சி அடையும் என்று கூட்டாக அரசுக்குக் கடிதம் கூட எழுதியிருந்தனர்.

    முறையான திட்டமிடல் இல்லாமல், அதிரடியாக இயற்கை விவசாயத்துக்கு மாறியதால் வேளாண் உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது. பணவீக்கம் அதிகரித்து உணவுப்பொருட்கள் விலையேறிய நிலையில், உணவுப்பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை.

    வெளிநாட்டுக் கடன்:

    இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 500 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 100 கோடி டாலர் கடனும் இலங்கை வாங்கி அதனை தவணை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளது.

    ஆனால், இலங்கை அரசிடம் இப்போது இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த மாதத்தோடு முடிந்துவிடும். அடுத்துவரும் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் 43.70 கோடி டாலராவது தேவைப்படும். 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான வெளிநாட்டுக் கடன் சேவையில் 480 கோடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய பிரச்சனையாகும்.

    இதற்கிடையே, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் பிப்ரவரி நிலவரப்படி 51 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில் உடனடியாக செலுத்த வேண்டிய கடன் 7 மில்லியன் டாலர். மேலும் இது, இலங்கை ரூபாய் மதிப்பில் 2 லட்சம் கோடி ஆகும். இந்நிலையை சாமளிக்க இந்தியாவிடம் கடன் பெற்றுள்ள இலங்கை, சீனா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கவும் முயற்சித்து வருகிறது.

    உணவுப்பொருள் விலை ஏற்றம்:

    இலங்கை பணமதிப்பில் உணவுப்பொருட்களின் விலை மஞ்சள் ரூ.350 , கத்தரிக்காய் 250 கிராம் ரூ.300, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.2000, தேங்காய் ஒன்று ரூ.150. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை. விண்ணை முட்டும் விலை, வறுமை, உணவுப் பஞ்சம் இதை நோக்கித்தான் இலங்கை பொருளாதாரத்தின் நிலை தற்போது இருக்கிறது.

    மேலும் இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள்.

    ரேஷனில் உணவுப் பொருள்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருள்களை வாங்கவும் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அதிபர் கோத்தபய ராஜகபக்சவின் அறிவிப்புதான். உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு இலங்கை என்று திடீரென அறிவித்து ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடை விதித்தார். இந்த மோசமான அறிவிப்பால் இலங்கை பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

    உலக வங்கி எச்சரிக்கை:

    இலங்கை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் டபிள்யுஏ விஜேவர்த்தனா எச்சரிக்கையில், “பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இலங்கையில் 5 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் சென்றிருக்கிறார்கள்” என கூறி இருந்தார்.

    ஆனால், இலங்கை அரசு நீண்ட காலத்துக்குத் தீர்வு காணாமல் தற்காலிகமாகத் தீர்வை நோக்கியே நகர்கிறது. நிவாரணப் பொருள்களை இந்தியாவிடம் பெறுகிறது. கரன்ஸி ஸ்வாப்பிங் மூலம் இந்தியா, வங்கதேசம், சீனாவிடம் இருந்து பொருள்களை வாங்குகிறது, ஓமனிலிருந்து பெட்ரோலை வாங்குகிறது. கடந்த காலத்தில் பெற்ற கச்சா எண்ணெய் கடனை அடைக்க, ஈரான் நாட்டுக்கு மாதந்தோறும் 50 லட்சம் டாலர் மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைக்கும் நிலைதான் நிலவுகிறது.

    இலங்கை அரசின் பதில்:

    இலங்கையில் உணவுப் பொருள்கள் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் பதுக்கல்தான், விலை உயரும் என்ற எண்ணத்துடன் பதுக்கி வருகிறார்கள் என்று பழியைப் போடும் இலங்கை அரசு தங்களின் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

    ராணுவம் களத்தில் இறங்கி பதுக்கல் பொருள்களை வெளிக்கொண்டு வந்து, மக்களுக்கு நியமான விலையில் வழங்கிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே பிரச்சனையின் ஒட்டுமொத்த உருவத்தை பார்க்கவும், தீர்க்கவும் இலங்கை அரசு தயாராக இல்லை.

    அதில் உச்சகட்டமாக, “மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருள்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவுக்கு வெளியிலிருந்து பொருள்கள் வாங்குவதைக் கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்” என்று இலங்கை அரசு மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளது.

    சீனாவின் தலையீடு:

    இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 650 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

    கடனுக்காகவும், பொருளாதார மீட்சிக்காகவும் சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் இலங்கையின் இந்தச் செயல், இலங்கையை சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

    ஏற்கெனவே, ஹம்பன்தோட்டா துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவிடம் பெற்ற 1400 கோடி டாலர் கடனை அடைக்க 2017-ம் ஆண்டிலிருந்து 99 ஆண்டுகளுக்கு அந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகை விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, ஹம்பன்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்தியாவின் பங்களிப்பு:

    அண்டை நாடுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய அரசு இலங்கையுடன் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் நெருக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஏற்றுமதி நாடு இலங்கைதான். இந்தியா-இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 60 சதவீதம் இலங்கைக்கு ஏற்றுமதி நடக்கின்றன.

    பொருளாதார ரீதியாக இலங்கைக்கு அதிகமான ஏற்றுமதியை இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக ஆடைகள், ஜவுளிகளை அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனையால், நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும் காலம் அதிகரிக்கும், அமெரிக்க டாலருக்கு நிகாரன இலங்கை ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் சரிந்துவிட்டதும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணி, கணினி உதிரிபாகங்கள், இரும்பு, உருக்கு போன்றவையும் ஏற்றுமதியாகின்றன. இலங்கை பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கும்போது அது இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

    இந்த நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, இலங்கையைத் தங்கள் பக்கம் சாய்க்கவும், பொருளாதார அடிமையாக மாற்றவும் சீனா முயன்று வருகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் சிக்கித் தவிக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், சீனாவின் கிளை நாடு என்ற அடைமொழியோடு இலங்கை வரலாம். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு எப்போதும் ஆபத்துதான்.

    இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றால், மூடிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டியது அத்தியாவசியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார். ஆனால், ஒன்றை மட்டும் இப்போது உறுதியாகக் கூற முடியும்.  இலங்கை இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகள் இன்னும் ஏராளம் உள்ளன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....