Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்திருவாசகம்: சிவபுராணம் - பாடல் விளக்கம்- பாகம் 1

    திருவாசகம்: சிவபுராணம் – பாடல் விளக்கம்- பாகம் 1

    பாடல் 1:

    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

    பொருள்:

    நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
    கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
    திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
    தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
    ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

    குறிப்பு:

    1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற
    திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்துக்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

    2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, “ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்” எனப் போற்றுகின்றார்.

    3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும்
    ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்
    பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.

    பாடல் 2:

    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

    பொருள்:

    என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
    பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
    கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

    குறிப்பு:

    1. வேகம் கெடுத்தல் – துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்
    (நிலையில்லாமல் அலைபாய்தல்) குறிப்பதோடு. தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.

    2. பிஞ்ஞகன் – பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
    (இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)

    3. சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.

    இந்திய ராணுவத்தில் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....