Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்தோடுடைய செவியன் கதை உங்களுக்கு தெரியுமா? இதோ முதல் பாகம்!

    தோடுடைய செவியன் கதை உங்களுக்கு தெரியுமா? இதோ முதல் பாகம்!

    திருச்சிற்றம்பலம்

    தோடுடைய செவியன் கதை மற்றும் பாடல் விளக்கம்- பாகம் 1

    புராணக்கதை:

    சோழநாட்டுக்கு அணிகலனாக விளங்கிய பல தலங்களில் சீர்காழி நகரமும் ஒன்றாகும். இந்த தலத்தில், ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர் அவரது மனைவியார் பகவதி அம்மையார் ஆகிய இருவரும் வாழ்ந்து வந்தனர்.

    இவர்கள் இருவரும், சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு எதையும் நினைக்காமல், இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். எனினும் தங்களது குலம் தழைக்க ஒரு பிள்ளை இல்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்து வந்தது.

    அந்நாளில் தமிழ்நாட்டில் சமணர் மற்றும் புத்தர்களின் ஆதிக்கம் மிகவும் பரவி இருந்தது. இந்த மதங்களின் தாக்கத்தினால், சைவநெறி போற்றப்படாமல் விளங்கியது.

    இந்த நிலை கண்டு மிகவும் வருத்தமுற்ற சிவபாத இருதயர், மாற்றுச் சமயக் கொள்கைகளை நிராகரித்து, சைவ சமயத்தின் சிறப்பினை நிலைநாட்டும் வல்லமை பெற்ற ஒரு குழந்தை தனக்கு பிறக்கவேண்டும் என்று பெருமானை தினமும் வேண்டிவந்தார்.

    இது தொடர்பாக சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    “மனையறத்தின் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்

    அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடிக்கமலம்

    நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்

    புனைமணிப் பூண் காதலானைப் பெறப் போந்து தவம்புரிந்தார்”

    நீறாக்கும்= திருநீற்றின் பெருமையினை உணர்த்தும்; பெருமானின் திருக்கூத்து அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதாக கருதப் படுகின்றது. அத்தகைய தொழில்களில் முதலாகிய படைப்புத் தொழிலுடன் தொடர்பு கொண்ட மகப்பேற்றினை விரும்பினார் என்று நயமாக பெரியோர் உரை காண்கின்றார்.

    பெருமானின் அருளால், கோள்கள் அனைத்தும் வலிமை பெற்று உச்சத்தில் இருந்த ஒரு திருவாதிரை நன்னாளில், பகவதி அம்மையார் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். வேதநெறிகள் தழைத்து ஓங்கவும், சைவ சமயம் விளங்கித் தோன்றவும், உயிர்கள் அனைத்தும் பெருமானின் அருள் பெற்று உய்யவும், புனிதமான தனது திருவாய் மலர்ந்து அழுத திருஞானசம்பந்தர் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த குழந்தை, மூன்றாண்டுகள் வயது நிரம்பிய நிலையில் ஒரு நாளில், சைவசமயம் உய்யும் வண்ணம் பெருமான் ஒரு திருவிளையாடல் செய்து காட்டினார். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியமங்களை செய்வதற்கு ஏதுவாக, திருக்கோயிலில் இருந்த குளத்தினில் நீராட பிள்ளையாரின் தந்தையார் புறப்பட்டார்.

    அந்த சமயம், குழந்தை தானும் தந்தையாருடன் செல்வேன் என்று அழத் தொடங்கவே, சிவபாத இருதயரும், குழந்தையை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றார். தனது குழந்தையை குளத்தில் கரையில் விட்டுவிட்டு, தந்தையார் குளத்தில் நீராடத் தொடங்கினார். நீராடத் தொடங்கும் முன்னர், பிள்ளையை கரையில் தனியே விட்டுவிட்டு நீராடுவதற்கு தயங்கிவராய், கோபுரத்தை நோக்கி அம்மையையும் அப்பனையும் வணங்கிவிட்டு குளத்தில் மூழ்கினார்.

    பெற்ற தாய் தந்தையரை விடவும் அம்மையும் அப்பனுமே குழந்தைக்கு உற்ற துணையாக வரும் நாட்களில் இருப்பார்கள் என்று குறிப்பு தந்தையாருக்கு தோன்றியது போலும். நீராடல் முடிந்த பின்னர், கரையை நோக்கிய சிவபாத இருதயர் தனது மகன் ஆங்கே இருக்கக் கண்டு தன்னை விடவும் பெரிய காவல் பெற்றார் தனது மகன் என்ற எண்ணத்துடன் தனது நித்திய அனுட்டாங்களை அனுசரித்த பின்னர், அகமர்ஷண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொருட்டு மீண்டும் நீரினுள் மூழ்கினார்.

    தனது தந்தையைக் காணாது தவித்த குழந்தை, கண்ணீர் ததும்ப தனது கைகளால் கண்களை பிசைந்து கொண்டு, அம்மே அப்பா என்று அழைத்த வண்ணம் அழத் தொடங்கியது. குழந்தை அழுததை சேக்கிழார் அழுது அருளினார் என்று கூறுகின்றார். குழந்தை அழும்போது முதலில் கண்களில் நீர் பொங்கும், பொங்கும் நீரினைத் துடைக்கும் வண்ணம் குழந்தை கண்களை கசக்கும், பின்னர் குரல் கொடுத்து அழத் தொடங்கும். இதே வரிசையில் சேக்கிழார் இந்த பாடலில் கூறியிருப்பதை நாம் உணரலாம்.

    இந்த பாடலில் சேக்கிழார் எண்ணற்ற மறையொலி பெருகவும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சி அடையவும், சம்பந்தர் அழுதார் என்று கூறுகின்றார். பின்னர் நடக்கவிருப்பதை இங்கே குறிப்பாக நயத்துடன் உணர்த்துகின்றார். தேவாரப் பாடல்கள் வேதங்களின் சாரம் என்பதாலும், நாடெங்கும் தேவாரப் பாடல்கள் பின்னாளில் பாடுவதற்கும் அதனால் அனைத்து உயிர்களும் சிவானந்தம் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்வதற்கு அடிகோலும் வண்ணம் சம்பந்தப் பெருமானின் அழுகை அமைந்தது என்று இங்கே உணர்த்துகின்றார்.

    கண்களில் வழியும் நீரை உமை அம்மை துடைத்து பின்னர் கையில் பாலுடன் கூடிய பொன் கிண்ணத்தை கொடுத்தமையால் அம்பிகையின் ஸ்பரிச தீட்சை கிடைக்க பெற்றதால் கண்மலர்கள் என்றும் கை மலர்கள் என்றும் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளன. தமிழ் வேதமாகிய எண்ணற்ற பதிகங்கள் சம்பந்தர் வாயிலிருந்து வரப்போவதை குறிக்கும் வகையில் மலர் செங்கனி வாய் மணி அதரம் என்று வாய் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளது.

    “கண்மலர்கள் நீர் ததும்ப கைம்மலர்களால் பிசைந்து

    வண்ண மலர்ச் செங்கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப

    எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்

    புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்”.

    கௌதம புத்தர் மற்றும் புத்த மத வரலாறு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....