Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்மனிதன் நிம்மதியாய் வாழ சிவாஜி கணேசனின் மூலமாக , கண்ணதாசன் கூறிய ஆறு கட்டளைகள்!

    மனிதன் நிம்மதியாய் வாழ சிவாஜி கணேசனின் மூலமாக , கண்ணதாசன் கூறிய ஆறு கட்டளைகள்!

    மனிதன் தன் சொந்த நிழலில் நின்றுகொண்டே, ‘ஏன் இருட்டாக இருக்கிறது?’ என்று கவலைப்படுகிறான் – ஜென் பழமொழி

    வாழ்க்கை எப்போதும் நம்மை தாலாட்டிக் கொண்டே இருக்காது. அவ்வபோது நம்மை வாழ்வு பதுகுழியில் தள்ளியும், உச்சாணிக்கொம்பில் அமர வைத்தும் நகரும் இந்த வாழ்வை, வட்டமென்று வைத்துக்கொண்டாலும், ஏற்றத்திலும் இறக்கத்திலும் நம் உணர்ச்சிகள் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் நாம் யார் என்பதை முடிவு செய்கிறது.

    உயரத்தில் இருக்கும்போது ‘நான்தான்’ என்ற அகந்தையும், துயரத்தில் இருக்கும்போது ‘நான் ஒரு பூஜ்ஜியம்’ என்ற வெறுமையும் இல்லாமல் வாழப்பழகுவது, நம்மை நிம்மதி என்ற உன்னத நிலையை அடைய வழிவகுக்கும் என்பது தொன்றுதொட்டே பலராலும் கூறப்பட்டுதான் வருகிறது. 

    எங்கே நிம்மதி? எங்கு சென்றால் நிம்மதி? என்று காடு, மலை, ஆலயம் என பல்வேறு பகுதிகளில் மனிதர்கள் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். ஓயாத சலனத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் நிம்மதி என்பது கேள்விக்குறிதானே?

    உள்ளுக்குள் அலைஅலையாக விழுந்து எழுந்துக் கொண்டிருக்கும் சலனத்தை, மனதிற்குள் இருக்கும் துயரத்தை, ததும்பலை ஆற்றுப்படுத்துவதற்கான வழிகளை ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் உள்ள ‘ஆறு மனமே ஆறு பாடலின்’ வழியே ஆறு கட்டளைகளாகச் சுருங்கச் சொல்லுகிறார், கவியரசர் கண்ணதாசன். 

    பலராலும் விரும்பப்படும் இசையினூடே தெரிவிக்கப்படும் கருத்துகள் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். நம் வரலாற்றில் இதற்கு சான்றுகளும் உண்டு. அதைத்தான் கவியரசரும் இப்பாடலில் செய்துள்ளார். அதற்கு பக்க பலமாக விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைந்திருக்கிறது. வரிகளை தொந்தரவு செய்யாமல் அதே சமயம் வரிகளை விட்டு விலகாமல் இசை பயணித்த விதம், நம்மை பாடலை மேலும் உள்வாங்கச் செய்ய உதவுகிறது.

    இதெல்லாம் ஒருபுறமிருக்க, பாடலை சிவாஜி எனும் நடிப்பு அரக்கன் வெறோரு தளத்திறகு கொண்டுச் சென்றார் என்றால் அது மிகையாகாது. தன் வாழ்வில் காணாத துயரத்தை கண்டிருப்பதையும், விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் தனது நடிப்பால் சிவாஜி கணேசன் தெரிவிக்கும் விதம் வியப்பிலும் வியப்பு. 

    ‘ஆறு மனமே ஆறு’ என்று பாடல் ஆரம்பிக்கும்போது, நம் மனதுக்கும் சேர்த்துதான் சிவாஜியின் வழியாக T.M.சௌந்தரராஜன் ஒலிக்கிறார். பெரும்பாலும், காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் என்று வருணிக்கப்படும் டி.எம்.எஸ் இப்பாடலிலும் அதை நிரூபித்திருக்கிறார். 

    ஆறு மனமே ஆறு – அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு என்று பாடல் ஆரம்பிக்கும்போதே துயரங்களை களைவதற்கான தத்துவப்பாடலுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்குள் எட்டிப்பார்த்து விடுகிறது. அதென்ன ஆறு கட்டளைகள் என்ற கேள்வியையும் இந்த வரிகள் நம்மிடத்தில் விதைத்து விடுகிறது. 

    இதன்பிறகு, அலைகளின் உரசலில் கலந்தோடும் மணற்துகள்களைப் போல நாமும் இப்பாடலின் வரிகளில் கலந்துவிடுகிற நிகழ்வு அரங்கேறிவிடுகிறது. ஆறு கட்டளைகளையும் ஒவ்வொன்றாக சிவாஜியின் தேர்ந்த நடிப்பின் வழியே இப்படத்தின் இயக்குநர் கே.சங்கர் படமாக்கியிருக்கும் விதம் பிரம்மிக்கவைக்கிறது. 

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

    உள்ளத்தில் உள்ளது அமைதி

    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

    இறைவன் வகுத்த நியதி 

    இறைவனின் ஆறு கட்டளைகளில் முதலாவது கட்டளையாக, சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் மனிதர்களின் உள்ளத்தில் அமைதி நிலவும் என்பது சொல்லப்படுகிறது. சொல்லும் செயலும் வேவ்வெறாக இருப்போரிடத்தில் அமைதி நிலை கொள்ளாது என்பதே இந்த வரியின் எதிர்பக்கம். 

    இரண்டாவது கட்டளையில் இன்பமும் துன்பமும் ஒன்றோடு ஒன்று கலந்த கலவைதான் என்றும், இதுதான் இறைவனின் நியதி என்றும்…. பெரும் தத்துவம் கட்டவிழ்க்கப்படுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோலே கையாள வேண்டும் என்ற கூற்றும் இவ்வரிகளின் உள்ளூர வெளிப்படுவதை நம்மால் அறிய முடிகிறது. 

    சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும் சொல்லியதை சொன்னபடியே செய்தலை பொன்னுக்கு ஒப்பாகவும், என்றவர், இதனால் துன்பங்கள் நேர்ந்தாலும் பின்னாளில் வரும் இன்பத்தில் இந்த துன்பங்கள் நீர்த்துபோய்விடும் என்கிறார், கவியரசர் கண்ணதாசன். முதல் இரு கட்டளையின் சாரம்சத்தையும் இரு வரிகளில் அடைக்கும் கண்ணதாசனின் வித்தையை என்னவென்று சொல்லுவது?….இந்த இரு வரிகளோடு இந்த வித்தை நின்றுவிடவில்லை. இப்பாடல முழுக்க இது நீள்கிறது. 

    உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்

    உலகம் உன்னிடம் மயங்கும்

    நிலை உயரும் போது பணிவு கொண்டால்

    உயிர்கள் உன்னை வணங்கும்

    உண்மை என்பதை அன்பு என பொருள் செய்து அன்புடன் நன்மைகளை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் என்று இறைவனின் மூன்றாவது கட்டளை பாடலில் வெளிப்பட, அதற்கு சிவாஜியின் முக பாவணைகள் சிவாஜி நடிப்பில் ஏப்பெற்பட்ட ஆளுமை என்பதை நமக்கு காட்டும். நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்ற நான்காவது கட்டளை டிஎம்எஸ் குரலில் நேரடியாக நமக்குள் இறங்குகிறது. 

    ஆசை கோபம் களவு கொள்பவன்

    பேசத் தெரிந்த மிருகம்

    அன்பு நன்றி கருணை கொண்டவன்

    மனித வடிவில் தெய்வம்

     

    இதில் மிருகம் என்பது கள்ள மனம்

    உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

    இந்த ஆறு கட்டளை அறிந்த மனது

    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

    ஆசை, கோபம், திருட்டு போன்றவற்றை உடையவனை பேசத் தெரிந்த மிருகம் என கூறும் கண்ணதாசன் அன்பு, நன்றி மற்றும் கருணை கொண்ட மனிதனை தெய்வம் என்கிறார். மிருகம் எனும் கள்ளமுடைய  மனதை ஐந்தாவது கட்டளையாகவும், தெய்வம் எனும் பிள்ளை மனதை ஆறாவது கட்டளையாகவும் ஆறு மனமே ஆறு பாடல் சொல்கிறது. 

    ஒவ்வொரு இரு கட்டளையின் இடையிலும் புகும் வார்த்தைகளும், அதற்கேற்றபடி நிகழும் சிவாஜியின் தோற்ற மாற்றங்களும் பாடலின் அழகை மெருகேற்றுவதோடு பாடலின் ஆழத்தை அதிகரிக்கச் செய்கிறது. பாடலின் கருத்தை நம்மிடம் எளிதாக கடத்தச் செய்கிறது.

    ஆறு மனமே ஆறு, இந்த ஆறு கட்டளைகளை அறிந்து புரிந்து பின்பற்றி நிம்மதியோடு வாழ்வோமாக…வாழ முயல்வோமாக….

    75-வது சுதந்திர தினம்; சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலூர் கலகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....