Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்தேவாரம்: "பித்தா பிறை சூடி" பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 2

    தேவாரம்: “பித்தா பிறை சூடி” பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 2

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் பித்தா பிறை சூடி பாடல் மற்றும் விளக்கம்- தொடர்ச்சி:

    பாடல் 4:

    முடியேன்இனிப் பிறவேன்பெறின்
    மூவேன்பெற்றம் ஊர்தீ
    கொடியேன்பல பொய்யேஉரைப்
    பேனைக்குறிக் கொள்நீ
    செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அடிகேளுனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

    பாடல் 5:

    பாதம்பணி வார்கள்பெறும்
    பண்டம்மது பணியாய்
    ஆதன்பொருள் ஆனேன்அறி
    வில்லேன் அருளாளா
    தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆதீஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே

    விளக்கம் :

    அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், “ஆதன்” என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

    பாடல் 6:

    தண்ணார்மதி சூடீதழல்
    போலும்திரு மேனீ
    எண்ணார்புரம் மூன்றும்எரி
    உண்ணநகை செய்தாய்
    மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அண்ணாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே

    விளக்கம் :

    தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும் படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    பாடல் 7:

    ஊனாய்உயிர் ஆனாய்உடல்
    ஆனாய்உல கானாய்
    வானாய்நிலன் ஆனாய்கடல்
    ஆனாய்மலை ஆனாய்
    தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆனாய்உனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    திருவாசகம்: சிவபுராணம் – பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 2

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....