Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇனியாவது உற்பத்தி நாடாக மாறுமா இலங்கை? சரியான பொருளாதார கொள்கை வகுக்கப்படுமா?

    இனியாவது உற்பத்தி நாடாக மாறுமா இலங்கை? சரியான பொருளாதார கொள்கை வகுக்கப்படுமா?

    இலங்கை 1970–ல் ஏற்பட்ட பஞ்சத்தைவிட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி தவிக்கிறது. மக்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என்பது தான் நிலைமை.

    மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், இவ்வளவு வளர்ச்சியடைந்த நாடு இவ்வளவு மோசமான நிலையை அடைந்தது ஏன் என்ற கேள்விக்கான எளிமையான பதில் இலங்கையின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது தான்.

    உயிராதாரமான அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவைகளின் விலையானது விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ.35 ஆகவும், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.250 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வு ஒருபுறமிருக்க, பொருட்கள் தட்டுப்பாடு என்பது பெரிய அளவில் நீடிக்கிறது. இதனால் உழைக்கும் மக்கள் வாழவழியின்றி தவிக்கின்றனர். பிள்ளைகளுக்கு உணவளிக்க இயலாமல் போவதாலும், பட்டினியாலும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் அதிக நேரம் பட்டினியால் காத்திருந்து மயங்கி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    போர்ச்சூழல் :

    “போர்ச் சூழலில் தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்களை ஒப்பிடும்போது, இந்த நிலையெல்லாம் ஒன்றுமே இல்லை. சிங்களர்கள் பலர் பட்டினியால் மாண்டு போகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அந்த நிலை இன்னும் வரவில்லை.” – என்று இலங்கை இதழியலாளர் நிலாந்தன் ஒரு மாதம் முன்பு தெரிவித்து இருந்தார்.

    இப்பொருளாதார பிரச்சனை காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். வன்முறை வெடித்ததால், வேறுவழியின்றி பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

    தற்போதைய பிரச்சனைக்கு காரணமே அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்ட இலவசம், மானியம் தான். சின்ன தீவான இலங்கை உற்பத்தி செய்பவர்களின் தேசம் அல்ல. நுகர்வோரின் தேசமாக உள்ளது.

    பெரும்பாலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். அனைத்து அடிப்படைத் தேவைகளும் இலவசம் அல்லது மானியம் மூலம் கிடைத்ததால் மக்கள் பட்டினியின்றி வாழ்ந்தனர்.

    இங்குள்ள அரசியல்வாதிகள், மக்களை மானியங்களுக்கு அடிமையாக்கினர். எரிபொருள் மானியம், உர மானியம், இலவச வீடுகள், மானியத்துடன் குடிநீர், மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கினர். இவற்றை மக்கள் மீது உள்ள பாசத்தால் தரவில்லை. ஓட்டுகளை அறுவடை செய்யும் உள்நோக்கத்துடன் வாரி வழங்கினர்.

    உள்நாட்டு உற்பத்தி :

    உள்நாட்டில் உற்பத்தி செய்யாத தலைமுறையை வளர்த்தனர். ஆனால் நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக கடன் சுமை அதிகரித்தது. நாட்டின் மொத்த கடனில் 10 சதவீதத்தை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்திருப்பர்.

    மீதி 90 சதவீதத்தை மானிய விலை பொருட்கள், சேவையை 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவித்த மக்கள் பெற்றுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எரிபொருள், உரத்திற்கு மானியம் வழங்காமல் இருந்திருந்தால், வெளிநாட்டுக் கடன் பாதியாக குறைந்திருக்கும்.

    இலங்கைக்கு இனி எந்தவொரு நட்பு நாடும் கடன் கொடுக்க தயங்கும். உரம், எரிபொருள் என இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கை மானியம் வழங்க கூடாது என சர்வதேச நாணய நிதியம் கண்டிப்புடன் கூற வேண்டும்.

    உற்பத்தி இல்லாமல் இலவசங்களை வழங்கும் மோசமான கலாச்சாரத்தை ஒழிப்பது அவசியம். கல்வி, சுகாதாரம் தவிர வேறு எதற்கும் மானியம் அளிக்க கூடாது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும்.

    ஒவ்வொருவரும் அவர்கள் வாங்கும் பொருளுக்கு சரியான விலை கொடுக்கட்டும். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மூட வேண்டும் அல்லது தனியார்மயமாக்க வேண்டும்.

    தற்போதைய பொருளாதார சரிவு, இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம். விழித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இலவசம் எனும் ஒழுங்கீனத்திலிருந்து விடுபட பணவீக்கம் உதவும். உயிர்வாழ உற்பத்தி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.

    உள்நாட்டில் உற்பத்தித்திறனை அதிகரித்து பணவீக்க பிரச்னையை தீர்க்க வேண்டும். உற்பத்தியை மையமாக கொண்ட பொருளாதார கொள்கையை வகுக்க வேண்டும். இலங்கையில் 1977ம் ஆண்டு திறந்து விடப்பட்ட பொருளாதாரம், தற்போது மூடப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

    மேலும், இலங்கையில் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றால், மூடிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டியது அத்தியாவசியமானது என கூறுகிறார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மகிந்த ராஜபக்சேவின் குடும்ப அரசியலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....