Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு3000 குடும்பங்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முதல்வருக்கு கடிதம் 

    3000 குடும்பங்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முதல்வருக்கு கடிதம் 

    சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 3000 குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    அக்கடிதம் பின்வருமாறு;

    சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு (தெற்குத் தெரு), திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். 

    இந்த வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீர் – கழிவு நீர் வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். ஆதார் மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த 1994ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண். 300, நாள் 18.04.1994 மூலம் கொளத்தூரில் புல எண் 53ல் உள்ள 67.30 ஏக்கர் நிலத்தை அரசு ஊழியர்களுக்கு மாடி வீடும் கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மேற்படி நிலம் அமைந்துள்ள ஏரியைக் கைவிட்டு பொதுப்பணித்துறையிலிருந்து 29.6.1993 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 975 ஆணையும் வெளியிடப்பட்டது.

    இதையும் படிங்க‘க.நெடுஞ்செழியன்‌ அவர்களின்‌ புகழ்‌ வாழ்க!’ – உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    இந்நிலையில் கடந்த 2022 மே மாதத்தில் மேற்கண்ட பகுதி நீர்நிலை புறம்போக்கு என்றும், இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டுமென தெரிவித்து நீர்வளத்துறை, செங்குன்றம், பாசனப்பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். 

    அதிகாரிகளின் இந்த திடீர்நடவடிக்கையால் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோகிறதே என்று கடும் அதிர்ச்சிகளுக்கு உள்ளானதோடு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆட்சேபணையும் தெரிவித்தனர். இது சம்பந்தமாக தங்களிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.

    இப்பிரச்சனை சம்பந்தமாக மே 27, 2022 அன்று தங்களை நேரில் சந்தித்து இம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன்.  தற்போது மீண்டும் நீர்வளத்துறை  அதிகாரிகள் கடந்த 17.10.2022, 18.10.2022 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் வாங்க மறுத்த மக்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு, தங்களின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர் சர்ச் தெரு – நீலமேகம் தெருவில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் 3000 குடும்பங்கள் அப்பகுதியிலேயே நிரந்தரமாக குடியிருப்பதற்கு நிலவகை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு அம்மக்களை அங்கேயே குடியமர்த்தி பாதுகாக்க வேண்டுமெனவும், அம்மக்களை வெளியேற்றுவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு, அவர் கடிதம் எழுதியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....