Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைகடைசி மூச்சு வரை தேசபக்தியுடன் தைரியமாக போராடி, மறைந்த ஜான்சி ராணியின் வரலாறு!

    கடைசி மூச்சு வரை தேசபக்தியுடன் தைரியமாக போராடி, மறைந்த ஜான்சி ராணியின் வரலாறு!

    இராணி இலட்சுமிபாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார்.

    வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த இராணி இலட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய இந்த தொகுப்பினைப் படிக்கவும்.

    இராணி இலட்சுமிபாய் ஆரம்ப கால வாழ்கை:

    நவம்பர் 19, 1828 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா என்பதாகும்.

    இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்துப் போனார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். லட்சுமி பாய் வீட்டில் கல்வி கற்றார், மற்றவர்களை விட சுதந்திரமாக இருந்தார்.

    மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.

    திருமண வாழ்க்கை:

    இவரது தந்தை ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842-இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார். அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.

    1851-இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும், இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர்.

    பின்னர், அக்குழந்தைக்கு தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853 இல் உடல்நலமிழந்து இறந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

    ஆங்கிலேய படையெடுப்பு:

    ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

    மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார்.

    ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆதலால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

    போர் ஆரம்பம்:

    ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேற சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார்.

    பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார்.

    அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

    அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்று டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார்.

    இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது.

    இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. இதை அறிந்த ஜான்சி இராணி தன் வளர்ப்பு மகனை பாதுகாப்பக தன் தோளில் வைத்துக் கொண்டு தப்பித்து வந்தார்.

    ஜான்சியின் இறப்பு:

    ஆங்கில கவர்னர் ஜான்சி இராணியை கொல்ல இரகசிய திட்டம் ஒன்று தீட்டி வைத்திருந்தார். ஆனால் அவர் ஆண்வேடம் தரித்து போரிட்டதால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பிறகு அவர் போரில் பலத்த காயம் அடைந்தார்.

    இறந்தாலும் தன்னுடைய உடல் ஆங்கிலேயருக்கு கிடைக்க கூடாது என்று எண்ணி ஒரு இஸ்லாமியரின் மடத்திற்கு சென்றார். பிறகு 1858 ஆண் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் ஜான்சியின் உயிர் இம்மண்ணை விட்டுச் சென்றது. இவர் குறுகிய நாட்கள் வாழ்ந்தாலும் தன்னுடைய வீரத்தால் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

    இதனால் தான் நேதாஜி பெண்களின் இராணுவப் படைக்கு ஜான்சி இராணி என்று பெயரிட்டார். இவரின் நினைவாக இந்திய அரசு ஜான்சி இராணி பல்கலை கழகத்தை நிறுவியுள்ளது. இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள், நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார்.

    தனது கடைசி மூச்சு வரை தேசபக்தியுடன் தைரியமாக போராடி, மறைந்த ஜான்சி ராணியை வரலாறு ஒருபோதும் மறக்காது.

    வறண்ட சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற வேண்டுமா? – உள்ளே படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....