Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! முதல்வர் ஸ்டாலின்

    பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! முதல்வர் ஸ்டாலின்

    அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது, அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2022) அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

    அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம்! கொள்ளிடத்திற்கு வடக்கே – வெண்ணாற்றுக்கு தெற்கே – ஊடாற்றுக்கு வடக்கே – சிதம்பரத்துக்கு மேற்கே – இந்த அரியலூர் உருவாக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெறும் புதைபடிவங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரணவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூபாய் 10 கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா (Fossil Park) அமைப்பதற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றது.

    வாரணவாசி கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் நிலப்பகுதியினைப் (களர் நிலப்பரப்பு) பாதுகாத்திட, பாதுகாப்புக் கொள்கை (Conservation Policy) வெளியிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

    அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம்.

    மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய நீண்ட கால கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட ஆணையிடப்பட்டதையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    நேற்று இரவு நான் ஆசிய கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்த மாவட்டத்தைச் சார்ந்த கார்த்திக் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

    அவர்களுடைய ஏழ்மை நிலையை தொலைக்காட்சி பேட்டியின் மூலமாக பார்த்த நான் உடனே நம்முடைய அமைச்சர் சிவசங்கரை அங்கே அனுப்பி வைத்தேன். அதனுடன் குடும்பத்தார் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்பட்டிருக்கக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவரது குடும்பத்தினரிடம் சென்று நானே நேரடியாக வழங்கினேன்.

    தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தித் திட்டத்திற்காக 13 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்களில் உள்ளடங்கிய நிலங்களை, சிவசங்கள் குறிப்பிட்டுச் சொன்னாரே, மீண்டும் உரிய உடமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள மேலூர் மற்றும் இலையூர் மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடமையாளர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அரியலூர் – பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்கா அமையப் போகிறது.

    அரியலூர் நகரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. செந்துறை நகருக்கு புறவழிச்சாலை,
    அரியலூர் – ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த 7 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டுமானப் பணிகள்,
    அரியலூர் முதல் செந்துறை வரை நான்கு வழிச்சாலையாக 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம், அரியலூர் – மழவராய நல்லூர் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிய பாலம், தேளூர் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையம் அமைப்பது எனப் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம். வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.

    வேளாண் பாசனப் பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது. உயர்கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.

    சில நாட்களுக்கு முன்னால் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் என்னிடத்தில் ஒரு அறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கழக ஆட்சி மலர்ந்ததும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம். அந்த திட்டத்தின் மூலமாக மகளிர் சமுதாயம் எத்தகைய பயனை அடைந்து வருகிறது என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

    பேருந்துகளில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் மாதத்துக்கு சுமார் தொள்ளாயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஏழை எளிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டினோம். மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம்.

    அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது.

    2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை.நான் முதல்வன் திட்டமானாலும்; ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்;புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான்.

    இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும். இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும்.
    அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம் என தெரிவித்தார்.

    எல்லா தவறுகளையும் ஆளுநரின் மீது போட்டுவிட்டு மாநில அரசு தப்பிக்க முயற்சிக்கிறது- அண்ணாமலை குற்றசாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....