Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதுதான் திராவிட மாடலா? அன்புமணி குற்றச்சாட்டு

    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதுதான் திராவிட மாடலா? அன்புமணி குற்றச்சாட்டு

    நீர் மேலாண்மை திட்டத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த வேடியப்பனூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டம் பயன்பெறும் கூடிய நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி – வேடியப்பன் மலையில் இருந்து வரும் நீர், நந்தன் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு செல்கிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சியினர், பின்னர் மறந்து விடுகின்றனர். தென்பெண்ணையாற்றில் இருந்து நந்தன் கால்வாய்-க்கு தண்ணீரை கொண்டு வர வேண்டும். இந்தாண்டு இதுவரை, தென்பெண்ணையாறு வழியாக 20 டிஎம்சி தண்ணீர், கடலில் கலந்துள்ளது. 

    திருவண்ணாமலை மாவட்டம் தொழில்வளம், வேலைவாய்ப்பு இல்லாத மாவட்டமாகும். வானம் பார்த்த பூமி. மாவட்டம் வளர்ச்சி பெற, நந்தன் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தொழில் வளம் மற்றும் சிப்காட் தேவை. விவசாய நிலத்தை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியானது, நீடித்த வளர்ச்சியாக இருக்காது. ஒன்றை அழித்து மற்றொன்றை கொண்டு வருவதை ஏற்க முடியாது. அரசு நிலம், தரிசு நிலத்தை பயன்படுத்தி சிப்காட் கொண்டு வர வேண்டும்.

    சென்னை – சேலம் இடையே, ஏற்கெனவே 3 வழி தடங்கள் உள்ளன. 4-வது ஒரு வழிதடம் தேவையில்லை. விவசாய நிலங்களை அழித்து, சுற்று சூழலை பாதிக்க செய்து, வனப்பகுதிகளை அழித்து 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வருவதையும் ஏற்க முடியாது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பாமக கண்டிக்கிறது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இதற்காக அரசாங்கம் சொல்லும் காரணங்களை ஏற்க முடியாது. மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என சொன்னார்கள். ஒன்றரை ஆண்டுகளில் 2 முறை நீட் தேர்வு நடைபெற்று உள்ளது. கடந்த ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 600 மாணவர்கள், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இல்லையென்றால், 2 அல்லது 3 பேர் மட்டுமே படிக்கும் நிலை இருந்திருக்கும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும். தமிழகத்தில் வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினர் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இந்த இரண்டு சமுதாயமும் முன்னேறினால், தமிழகம் முன்னேற்றம் அடையும். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை, தாமதமின்றி நிறைவேற்றி ஆளுநர் சட்டமாக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 ஆண்டுகளில் 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன்க்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    தி.மலை மாவட்டத்தை பிரிக்கலாம் – நிலப் பரப்பளவில் மிகப்பெரியதாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை வரும் கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும். சகிப்பு தன்மை, அனைத்து மதம், இனம், மொழி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதால், இந்தியாவில் இருந்து தமிழகம் வருகின்றனர். சகோதரத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இதை சீர்குலைக்க, பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. இது தமிழக கலாச்சாரம் கிடையாது. வட இந்திய கலாச்சாரம். பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரணிக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

    இதையும் படிங்க: ட்விட்டரில் தவறு செய்தால் இனி திருத்திக்கொள்ளலாம் – விரைவில் அறிமுகமாகும் எடிட்டிங் வசதி

    மது, சூது, போதை என இளைஞர்கள் மீது மும்முனை தாக்குதல் நடைபெறுகிறது. மது இல்லாமல் இளைஞர்களால் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்குவதுதான் திராவிட மாடல். இதில் 2 திராவிட கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தினால், கூடுதலாக ‘பார்’ திறக்கப்படுகிறது. 

    போதை பொருள் ஒழிப்புப் பிரிவில் உள்ள 20 ஆயிரம் பணியிடங்களில், 700 பேர் மட்டுமே உள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்வதை போல், அவர்களுக்கு விநியோகம் செய்யும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தால், உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். காடுகள் எரிந்து வருகிறது. கடல் மட்டம் உயர போகிறது.

    ஒரு பக்கம் வறட்சி, மற்றொரு பக்கம் தண்ணீரில் நாடு முழ்கிவிடுகிறது. எதிர்காலத்தில் கால நிலை பருவ மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்க போகிறது. பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கிறோம். நீர் மேலாண்மை திட்டத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன்மூலம் தென் பெண்ணையாறு – பாலாறு இணைப்பு திட்டம், நந்தன் கால்வாய் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றலாம்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க : வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ்…எச்சரிக்கப்பட்ட காவல்துறை..உயர்நீதிமன்ற தீர்ப்பால் சலசலப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....