Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது; உலக தேனீக்கள் தினம்!!

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது; உலக தேனீக்கள் தினம்!!

    இந்த உலகமானது பலவிதமான உயிரினங்களையும், தாவரங்களையும் தனக்குள்ளே கொண்டுள்ளது.

    இந்த அளவிற்கு பலதரப்பட்ட உயிரினங்கள் உலகெங்கும் விரவிக்கிடந்தாலும் எந்த ஒரு உயிரினமும் தனித்து வாழும் வசதியினைப் பெற்றதில்லை. ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்திற்கு ஏதோ ஒரு வகையில் தேவைப்படும் நிலை உள்ளது.

    உணவாகவும், உணவிற்காகவும், பெருகிவரும் உயிரினங்களின் எண்ணிக்கைகளை குறைக்க ஊனுண்ணிகளாகவும் என ஏதோ ஒரு வகையில் உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.

    இவ்வாறு ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தினை சார்ந்துள்ள சங்கிலித் தொடர் போன்ற ஒரு பரிணாமத்தினையே நம் உணவுச்சங்கிலி என்கிறோம்.

    இந்த உணவுச்சங்கிலி என்கிற வரையறை உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திற்கு எப்படி பயன்படுகிறது என்பதனை தெளிவாக விளக்கும் ஒன்றாய் உள்ளது.

    இப்படிப்பட்ட மிக முக்கியமான உணவுச்சங்கிலிக்கு அடிப்படை ஆதாரமாய் உள்ளது தாவரங்கள் என்றால் அது மிகையாகாது.

    தாவரங்களைப் பொறுத்தே மற்ற உயிரினங்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அது போல இந்த தாவரங்கள் வளர்வதற்கும் மற்ற உயிரினங்கள் முக்கியம் என்பது தான் இயற்கையின் சிறப்பான விடயமே!

    தாவரங்கள் வளர்வதற்கு மற்ற உயிரினங்கள் எப்படி உதவுகின்றன??

    உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுபவை; அவ்வாறு மாறும் உயிரினங்களின் மூலம் தாவரங்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுகின்றன. இயற்கையின் விந்தையே விந்தை..

    பறவைகளின் எச்சத்தின் மூலமாகவும், ஒரு சில விலங்குகள் பழங்களைத் தின்று விதைகளை எறிவதன் மூலமாகவும் தாவரங்களின் வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவுகின்றன.

    இந்த வகையில் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிக அதிகமாக உதவி செய்பவர்களில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது தேனீக்கள்.

    பூக்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்ளும் தேனீக்கள், அவற்றின் மகரந்தங்களை பரப்புவதற்கு பெரிதும் உதவுகின்றன.

    உலகத்தில் உள்ள பூக்களைக் கொண்ட தாவரங்களின் வளர்ச்சியில் 90 சதவீதம் மற்ற உயிரினங்களின் உதவியால் ஏற்படும் மகரந்தச்சேர்க்கையினை சார்ந்து உள்ளன.

    இவ்வாறு மகரந்தச் சேர்க்கைக்கு உறுதுணையாய் இருக்கும் உயிரினங்கள் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகின் பல்லுயிர்த் தன்மையினையும் பாதுகாக்கின்றன.

    இத்தகைய முக்கியமான செயல்பாட்டுக்கு மிக முக்கியமான காரணியாய் விளங்கும் தேனீக்களை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனினால் 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் உலக தேனீக்கள் தினம்.

    தேனீக்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 20 தேதி கொண்டாடப்படுகிறது. 

    தேனீக்களை கொண்டாடுவோம்..

    மிகப்பெரிய இந்த உலகில் அளவில் மிகச்சிறியதாய் தேனீக்கள் இருந்தாலும், அவற்றின் பங்கு மிகப்பெரியது.

    பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்துவதிலும், பல்லுயிர்த் தன்மையினை பாதுகாப்பதிலும், காடுகளின் மறு உருவாக்கத்திலும் தேனீக்கள் குறிப்பிட்ட பங்கினை செய்து வருகின்றன.

    இந்த வருடத்திற்கான தேனீக்கள் தினத்திற்கு ‘தேனீக்கள் மற்றும் தேனீக்கள் வளர்ப்பு முறைகளைக் கொண்டாடுவோம்’ என்ற மையக்கருத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் தேனீக்களின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. உயிரின அழிவு இயற்கையாக நடக்கும் அளவினை விட 100 முதல் 1000 மடங்கு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

    இவ்வளவு வேகமாக உயிரினங்கள் அழிந்து வருவதற்கு முழு காரணமும் மனிதர்களாகிய நம்மையேச் சேரும்.

    மகரந்தகளைக் கடத்தும் உயிரினங்களில் 35 சதவீதம் முதுகெலும்பில்லாத உயிரினங்களும் (முக்கியமாக தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள்), 10 சதவீதம் முதுகெலும்பு உள்ள உயிரினங்களும் (முக்கியமாக வௌவால்கள்) உலக அளவில் அழிவைச் சந்தித்து வருகின்றன.

    இந்த போக்கு தொடருமேயானால், அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பழங்கள், விதைகள் அழிக்கப்பட்டு, பிரதான உணவுகளான அரிசி சோளம் போன்ற உணவுகள் அதிகமாக்கப்படும் அபாயம் ஏற்படும்.

    இது நமது ஆரோக்கியத்தில் ஒரு சமநிலையற்ற வழக்கத்தினை ஏற்படுத்திவிடும்.

    அதிக அளவு விவசாயம் செய்தல், ஒரே பயிரினை திரும்ப திரும்ப பயிரிடுதல், வேதியுரங்களை பயன்படுத்துதல், மாறிவரும் பருவ வெப்பநிலை போன்றவை தேனீக்களை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

    எனவே தேனீக்களை பாதுகாப்பதற்காகவும், தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், உணவுச் சங்கிலியினை பாதுகாக்கவும், உணவுத் தட்டுப்பாட்டினை குறைக்கவும் இந்த தேனீக்கள் தினமானது இன்று அனைத்து நாடுகளிடையே கொண்டாடப்படுகிறது.

    ஒரு தனி மனிதனாக தேனீக்களை எவ்வாறு பாதுகாப்பது..

    நமது நிலத்தில் வளரும் தாவரங்களை வளர்த்தல்.

    தேனீ வளர்ப்பவர்களிடம் தேன் வாங்குதல். இது அவர்களது வருவாயினை உயர்த்த உதவுகிறது.

    இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்துதல். இதன் மூலம் வேதியுரங்களின் உபயோகத்தினை குறைக்கலாம்.

    செயற்கை தேனீ கூடுகளை அமைத்தல்.

    காடுகள் வளர உதவி செய்தல்.

    தேனீக்கள் இந்த உலகிற்கு செய்யும் பங்கினை பற்றிய தகவல்களைப் பரப்புதல். தேனீக்களில்லா உலகம் எப்படி இருக்கும் என்கிற உண்மையினைக் கூறுதல்.

    தேனீக்கள் பற்றிய ஆச்சர்யமான உண்மைகள்..

    தேனீக்கள் பறக்கும் போது ஏற்படும் சத்தமானது அவை இறக்கைகள் அடித்துக் கொள்வதால் உண்டாகிறது. ஒரு நிமிடத்தில் 11,000 முறை தனது இறக்கைகளை அடித்துக் கொள்ளுமாம்!!

    தேனீக்கள் ஒரு மணி நேரத்திற்கு 32 கிலோமீட்டர் தூரம் பறக்கின்றன.

    ஆண் தேனீக்களுக்கு கொடுக்குகள் இருப்பதில்லை, பெண் தேனீக்கள் மட்டுமே நம்மைக் கொட்டுகின்றன.

    தேனீக்களுக்கு ஐந்து கண்களும், ஆறு கால்களும் உள்ளன.

    இந்த உலகில் கிட்டத்தட்ட 300 லட்சம் வருடங்களாக தேனீக்கள் வாழ்ந்து வருகின்றன!!

    ஸ்பெயினிலுள்ள ஒரு குகை ஒன்றினில் மனிதர் ஒருவர் ஏணியில் ஏறி தேன் சேகரிப்பில் ஈடுபடும் ஓவியம் உள்ளது. இந்த ஓவியம் 8,000 ஆண்டுகள் பழமையானது. மேலும் எகிப்து கல்லறைகளிலும் தேன் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மனிதர்கள் தேனினை பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே தங்களது உணவுகளில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....