Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீத முடிவு: விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

    ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீத முடிவு: விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

    ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த கல்லூரி மாணவர், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக, ஸ்டேட்டஸ் போட்டு விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஆபத்தானது, அது நம் மூளையை அடிமையாகும் என்பது அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டாலும் இன்றைய இளைஞர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவ்விளையாட்டில் உள்ள சாதக பாதகங்களை உணராமல் இன்னும் இந்த ரம்மி கேமிற்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதலும் அளித்தது.

    ஆனாலும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்ற வாக்கியத்திற்கு இன்று திருச்சி மாவட்டம் மனப்பாறையை அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பொறியியல் பயிலும் கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இதையும் படிங்க:முதுநிலை கல்வியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்….

    மணப்பாறை ரயில்வேக்கு அருகே உள்ள நாளங்காடிக்கு பின் பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவனின் உடலை மீட்டு யாராக இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அந்த விசாரணையில் இறந்தவர் மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் சந்தோஷ் என்பதும், இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    பிறகு உடனடியாக சந்தோஷின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, இறந்தவர் சந்தோஷ்தானா என்பதை ரயில்வே காவல்துறையினர் உறுதி செய்து கொண்டனர். மகனின் உடலை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    இதனையடுத்து சந்தோஷின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்ட ரயில்வே காவல்துறையினர், மாணவனின் தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்ட போதுதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றிய தகவல்கள் வெளியே வந்துள்ளது.

    அதில் சந்தோஷ் கடந்த 6 மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி தொடர்நது பணம் கட்டி விளையாடி வந்ததும், தொடர்ந்து பணத்தை இழந்தும், ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டில் இருந்து வெளியே வர முடியாமல், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி வீட்டில் இருந்த தங்க நகைகளையும் வைத்து விளையாடியது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து பணம் மற்றும் நகையை இழந்தது குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கேள்வி கேட்கவே, கோபமாகி கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சந்தோஷ். நேற்று மாலை வரை நண்பர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்த சந்தோஷ் திடீரென இரவு 9.50 என்னுடைய மரணத்திற்கு முழுகாரணம் ஆன்லைன் ரம்மி தான். அதில் நான் அடிமையாகி அதிக பணத்தை இழந்துள்ளேன். அதனால் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    இதை பார்த்த சந்தோஷின் நண்பர்கள் அதிர்ச்சியாகி, உடனே அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்தான் மணப்பாறை ரயில்வே கேட்டிற்கு அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் தண்டவாளத்தில் சந்தோஷின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சந்தோஷின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரக்தியில் எடுக்கப்பட்ட சந்தோஷின் இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டால் மட்டுமே இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....