Saturday, May 4, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைவணிகமெனும் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வ.உ.சி - பிறந்தநாள் கட்டுரை!

    வணிகமெனும் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வ.உ.சி – பிறந்தநாள் கட்டுரை!

    இந்தியாவின் முதல் சுதேசி கப்பல், முதல் தொழிலாளர் வேலைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற்ச்சங்கம் என இன்று நாம் காணும் கனவு யாவற்றையும், சுயசார்பு இந்தியாவின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்து அன்றே கொண்டு வந்தவர்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

    அப்படிப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி உலகநாதர் – பரமாயி அம்மாள் என்ற தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர். ஓட்டப்பிடாரத்திலும், நெல்லை மாவட்டத்திலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இவர், பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு புலமைப் பெற்றிருந்த வ.உ.சி அவர்கள், மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு தன் தந்தையை போலவே தானும் மிகச்சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை படித்து முடித்து வழக்கறிஞரானார்.

    தந்தையையே மிஞ்சிய தனையனாக வழக்கறிஞர் தொழிலும் புகழ்பெற்ற வ.உ.சி அவர்கள், ஏழைகளுக்காக இலவசமாக வாதாடி, தனது சிறப்பான வாதத் திறமையினால், பல வழக்குகளில் வெற்றி கண்டு மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற பெயரை பெற்றார் .

    பால கங்காதர திலகர் அவர்களின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, போராட ஆரம்பித்தார். வ.உ.சியின் சுதந்திர போராட்ட முறை மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்டது.

    இதன் பிறகு அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1905-ஆம் ஆண்டு தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் இணைத்துக்கொண்டு போராடியவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வின் தலைமை பதவியையும் வகித்தார்.

    தமிழகம்-இலங்கை இடையிலான ஆங்கிலேய கப்பல் போக்குவரத்து கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய வ.உ.சி அவர்கள், ஆங்கிலேயே நிறுவனத்தினர் பல்வேறு இடையூறுகளை கொடுத்த போதிலும், எதற்கும் அஞ்சாமல் கொழும்பு சென்று ஒரு கப்பலை வாங்கி வந்தார். அதற்கு சுதேசி கப்பல் என்ற பெயரையும் வைத்தார். வ.உ.சி அவர்களின் சுதேசி கப்பல் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ஒரு கட்டத்தில் பலரின் சூழ்ச்சிகளாலும், ஆங்கிலேயர்கள் கொடுத்த நெருக்கடிகளாலும் சுதேசி கப்பல் நிறுவனம் திவால் ஆனது.

    ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே வ.உ.சி அவர்களின் மீது கொண்டிருந்த வெறுப்பினால், அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி, 1908 மார்ச் 12-ம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறைக்கு 1908-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் மாட்டிற்கு பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்க செய்து ஆங்கிலேயர்கள் சித்ரவதை கொடுத்தனர். அதனால் அவருக்கு “செக்கிழுத்த செம்மல்” என்ற பெயரும் உண்டு.

    இப்படி சிறையில் பல இன்னல்களை சந்தித்து வெளியே வந்த பிறகும் தன் மனைவி மக்களோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் மேலும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தார். புதிதாக தொடங்கிய தொழில்களும் அவருக்கு கை கொடுக்க வில்லை. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும் வசதியான வாழ்க்கை வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களின் விடுதலைக்காகவே உழைத்த இந்த செக்கிழுத்த செம்மல் 1936, நவம்பர் 18-ம் தேதி அன்று இவ்வுலகை விட்டு மறைந்ததார். வ.உ.சி என்னும் மாமனிதர் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தாலும், அவரது போராட்ட குணங்களும், வள்ளல் தன்மைகளும் ,நாட்டிற்காக அவர் கொடுத்துச்சென்ற பங்களிப்புகளும் நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

    இப்படிப்பட்ட புரட்சிக்கரமிக்க இந்த சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அதன்படி, இன்று சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் . மேலும், வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் இன்றும், நாளையும் காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக ‘டிஜிட்டல்’ முறையில் திரையிடப்படுகிறது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....