Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா75-வது சுதந்திர தினம்; சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலூர் கலகம் 

    75-வது சுதந்திர தினம்; சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலூர் கலகம் 

    நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 17ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்த அரசர்களுக்கிடையே நிலவி வந்த மோதல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர்.

    ஆங்கிலேயர்களுக்கு முன்னரே, பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்திருந்தாலும், அவர்கள் யாரும் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த கிழக்கிந்திய கம்பெனியினருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

    இவர்களில், பிரெஞ்சுகாரர்கள் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வலிமையாக போராடத்துவங்கினர். எனினும் 1760-ம் ஆண்டில் நடந்த வந்தவாசிப் போரில் பிரெஞ்சுகாரர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்தது. 

    இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்தது.

    மாற்றம் ஒன்றை தவிர, மற்றவை அனைத்தும் மாறும் என்பது போல, ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் ஆக்கிரமிக்க துடிப்பதை, இந்தியாவின் ஒரு சில மன்னர்கள் உணரத்தொடங்கினர்.உணரத்தொடங்கியது மட்டுமல்லாது. உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடத்தொடங்கினர்.

    இந்திய மக்களிடையேயும், மன்னர்களிடையேயும் சுதந்திரம் என்னும் வார்த்தை, பெரிய தீயாக பரவுவதற்கு முன்னர் உருவாகும் மெல்லிய புகை போல பரவத் தொடங்கியது. அந்த மெல்லிய புகை எப்பொழுது வேண்டுமானாலும் கொழுந்து விட்டு எரிய தயாராக இருந்தது.

    வெல்லெஸ்லி பிரபு கொண்டு வந்த துணைப்படை திட்டத்தின் உதவியுடன் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி எளிதாக கைப்பற்றியது. தங்களது நாடுகள் தங்கள் கண் முன்னே அந்நியர்களின் கைகளுக்குள் போவதை பெரும்பாலான இந்திய மன்னர்கள், மிகவும் தாமதமாகவே தெரிந்து கொண்டனர்.

    ஒரு சில மன்னர்கள், தங்களது எதிர்ப்பை நேரடியாகவே காட்டத்தொடங்கினர். அப்படிப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த, பூலித்தேவனும் (புலித்தேவர்), மருது சகோதரர்களும், வேலுநாச்சியாரும், தீரன் சின்னமலையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    குறுநில மன்னர்களாக இருந்த இவர்களை, ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக வீழ்த்தினர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை அவர்களுக்கு மிகப்பயனளித்தது. பணத்துக்காகவும், போதைப் பொருளுக்காகவும் பலர் எளிதாக ஆங்கிலேயர்களுக்கு விலை போயினர்.

    1806-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த திருப்புமுனை வரலாற்றில் வேலூர் கலகம் என அழைக்கப்பட்டது.

    தென்னிந்தியாவில் முக்கிய ராணுவ மையமாக இருந்த வேலூர் கோட்டையில், காவல் பணியில் ஈடுபட்ட சிப்பாய்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    கர்னல் ஜான் கிரடாக் என்பவரின் உத்தரவு பெயரில், மாட்டுத்தோலால் செய்யப்பட்ட குல்லாய் அணிய இந்திய படைவீரர்கள் வற்புறுத்தப்பட்டனர். இது மட்டுமின்றி படைவீரர்கள் உபயோகப்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் மீது பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. இது இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

    இது மட்டுமல்லாது, இந்திய வீரர்கள் தாடி வளர்த்து கொள்ளவும், மீசை வைத்துக் கொள்ளவும், திருநீறு பூசவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆங்கிலேயர்களை எதிர்த்து தென்னிந்தியாவில் போராடிய பலர் வேலூர் சிறையில் அடித்த்து வைக்கப்பட்டிருந்தனர். ஆங்கிலேயர்களை பழி வாங்க அவர்கள் தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    1806-ம் ஆண்டு ஜூலை 10ம் நாள் இரவு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் தலைமையில் அணிவகுத்தவர்கள், ஆங்கிலேயர்களை சுட்டுக்கொன்றனர். இந்த கலகத்தில் கர்னல் ஜான் கிரடாக் இந்திய வீரர்களால் கொல்லப்பட்டார்.  புரட்சி ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே வேலூர் கோட்டையும், வெடிமருந்து தயாரிப்பு கிடங்கு சிப்பாய்கள் வசமானது.

    வேலூர் சிறையில் இருந்த திப்பு சுல்தானின் மகன், மன்னராக சிப்பாய்களால் பிரகடனப்படுத்தப்பட்டார். வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கொடி கீழிறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது.

    இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதுவரை நடைபெற்ற போர்களிலில் இருந்து வேலூர் கலகம் தனித்து நின்றது. வேலூர் கலகத்துக்கு முன்னதாக நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தனி மனிதர்களால் நடத்தப்பட்டன. ஆனால் வேலூர் கலகத்தில் முதன் முதலாக, இந்திய வீரர்களிடையே ஒற்றுமை உணர்வு ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிரான இயல்பான உணர்ச்சிகளின் வெளிப்பாடு வேலூர் கலகத்தில் இந்திய வீரர்களிடையே தோன்றியது.

    எனினும், வேலூர் கலகத்தின் வெற்றியின் அருமையையும், சுதந்திர காற்றையும், இந்திய வீரர்கள் வெகு நேரம் அனுபவிக்க முடியவில்லை. எந்த வித வியூகமும், இன்றி இருந்த இந்திய வீரர்களை ஆங்கிலேயர்கள் எளிதாக அடக்கினர்.

    இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், கோட்டையை ஆங்கிலேயர்கள் திரும்ப கைப்பற்றிய பிறகு, ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் மரணத்தை முத்தமிட்டனர். ஒரே நாளில், வேலூர் கலகம் முடிவுக்கு வந்தது.

    வேலூர் கலகம் தோல்வியில் முடிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்திய வீரர்களின் இந்த எதிர்ப்பு குணம், ஆங்கிலேயர்களிடையே சற்று கலகத்தை உண்டாக்கியது. 

    வேலூர் கலகத்தைத் தொடர்ந்து, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் முதல் இந்திய சுதந்திர போராட்டம் எனப்படும் சிப்பாய்க் கலகம் 1857-ம் ஆண்டு ஏற்பட்டது. பின்னாளில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்த மக்களும் சுதந்திரம் தங்களது பிறப்புரிமை என்ற எண்ணத்தை தங்களது மனதில் விதைத்துக்கொண்டனர். நாட்டின் சுதந்திரத்துக்காக அயராது பாடுபட்டனர்.

    இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இப்படியாக வேலூர் கலகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆயிரம் மக்களின் உயிர்த்தியாகம் காரணமாக இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, லட்சோப லட்ச மக்களின் ஒருமித்த போராட்ட குரலுக்குப் பிறகு, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அந்த பாடல் தேசமெங்கும் ஒலித்தது.

    ‘ஆடுவோமே பல்லுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’

    இந்தியாவிற்கு சுதந்திரம் ஆனந்தமாக கிடைக்கவில்லையென்றாலும், முதன் முதலாக மக்கள் சுவாசித்த சுதந்திரக் காற்று. அவர்களின் மனதில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு இதமளித்தது என்பதை மறுக்க முடியாது.

    முதல்வரின் விருதுக்கு தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி தேர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....