Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியா முழுவதும் நடைபெறும் கலவரம்.. என்ன காரணம்??

    இந்தியா முழுவதும் நடைபெறும் கலவரம்.. என்ன காரணம்??

    மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் என்ற திட்டத்தினை எதிர்த்து நாடெங்கும் இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பீகாரில் தொடங்கிய இந்த கலவரம் இரண்டாவது நாளாக பீகார் மட்டுமல்லாது ராஜஸ்தான், அசாம் போன்ற மாநிலங்களிலும் பரவியுள்ளது.

    அக்னிபாத் திட்டம்..

    அக்னிபாத் என்கிற திட்டமானது மத்திய அரசினால் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 45,000 இளைஞர்கள் ராணுவப்பணிக்காக எடுக்கப்படவுள்ளனர்.

    இந்த திட்டம் பற்றிய கருத்தினை தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பினை அதிகரித்து, நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் விதமாக இந்த அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.’ என்று கூறியுள்ளார். 

    இந்த திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்கள் ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு பணியமர்த்தப்படுவார்கள் எனவும், இவர்களுக்குச் சம்பளமாக 40,000 ருபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று மாத காலத்திற்குள் இதற்கான ஆட்சேர்ப்பு முகாம்கள் நாடெங்கும் நடத்தப்படும் என்றும், இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வயது வரம்பு 17.5 லிருந்து 21 வயது வரை இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    என்ன பிரச்சனை..

    இந்த அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு வருடங்களுக்கு மட்டுமே ராணுவத்தில் பணிபுரிய முடியும்.

    பணியமர்த்தப்பட்ட 45,000 வீரர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற விதிமுறையினை மத்திய அரசு இந்த திட்டத்தில் கொண்டுவந்துள்ளது.

    இந்த காரணத்திற்காகவும், வயது வரம்பின் காரணமாகவும் ராணுவ பணிக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பழைய முறையில் ராணுவ ஆட்சேர்ப்பிணை நடத்தக்கோரி போராடி வரும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து நான்கு வருட பணிக்குப் பின் தங்களை யார் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்கிற கேள்வியினையும் மத்திய அரசின் முன்வைத்துள்ளனர்.

    பீகாரில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. பல பகுதிகளில் ரயில் தண்டவாளங்களை தடுத்தும், தண்டவாளங்கள் மேல் டயர்களைக் கொளுத்தியும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

    மேலும், பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தும் தங்களது அதிருப்தியினைத் தெரிவித்து வருகின்றனர். பாபுவா பகுதியில் உள்ள ரயில்நிலையத்தில் நின்றிருந்த ரயில் ஒன்று முழுவதுமாய் தீ வைக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் ஒருசில மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. புலந்ஷார் பகுதியில் உள்ள ஜிடி ரோட்டினில் மாணவர்கள் தடை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அக்னிபாத் திட்டத்தினை திரும்பபெறக் கோரி பல்வேறு விதமான கோஷங்களைக் எழுப்பியவண்ணம் உள்ளனர்.

    தமிழகத்தில்..

    இந்த அக்னிபாத் திட்டத்தினை எதிர்த்து தமிழகத்தின் வேலூரிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.

    2019ம் ஆண்டு நடந்த ராணுவ உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற இவர்களுக்கு இதுவரை எழுத்துத் தேர்வு வைக்கவில்லை. கொரோனாவினைக் காரணம் காட்டி தேர்வானது தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த எழுத்துத் தேர்வினை விரைவில் நடத்தக்கோரியும், தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தினை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக தடுத்த வேலூர் காவலர்கள், அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்திப் போராட்டத்தினைக் கலைத்தனர். இதனால் சில தருணங்கள் வேலூர் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

    ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவு ஓவ்வொரு இந்திய இளைஞருக்கு உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற வண்ணம் உள்ளனர்.

    இவ்வாறு ஏற்படும் ராணுவ காலிப் பணியிடங்களை நிரப்ப இந்திய அரசானது நாடு முழுவதும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இந்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டமானது பல இந்திய இளைஞர்களின் ராணுவ ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்ளது எனவும், இதனால் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்திய இளைஞர்கள் போராட்டக் குழுக்களாக மாறும் வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்படும் எனவும் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    உலக அளவில் ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் பதினான்கு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....