Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இதுவும் காதல் மாதம்தான்; ஜூன் மாதம் 'ப்ரைட் மாதம்' என ஏன் கொண்டாடப்படுகிறது?

    இதுவும் காதல் மாதம்தான்; ஜூன் மாதம் ‘ப்ரைட் மாதம்’ என ஏன் கொண்டாடப்படுகிறது?

    காதல் காதல்தான் 

    காதலுக்கு மொழியில்லை

    காதலுக்கு எல்லையில்லை

    காதலுக்கு பிரிவினையில்லை

    காதலுக்கு  பால்பேதமில்லை 

    காதல் காதல்தான்; காதல் மட்டுமேதான்!

    ஒருபால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு, மூன்றாம் பாலின ஈர்ப்பு என காதலின் எல்லைகளை அழகுற நீட்டிப்பவர்களை உள்ளடக்கிய ஒரு சொல்லாடல்தான் இந்த LGBTQ! மொழி, சாதி, வர்க்கம், என பலவாறாக பிரிந்திருக்கும் நாம் மனிதத்தால் ஒன்றினைவோம் என்ற கூற்று தொடர்ந்து இருந்து வருகிறது.

    ஆனால் இக்கூற்றானது LGBTQ என்று வரும்போது மட்டும் காணாமல் சென்று விடும் அவலம் இன்றும் தொடர்வது வருத்தத்திற்குரிய விடயமே!

    வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்திய மரபு என்று கூறிக்கொள்ளும் பலரும் LGBTQ சார்ந்தவர்களைக் கண்டால், பேசினால் முகம் சுளிப்பதை இன்றளவும் காணமுடிகிறது. காதலின் எல்லையை நீட்டிப்பவர்களுக்கு இப்படியான முகம் சுளித்தல் கடினமான ஒன்றே. 

    இப்படியாக தொடர்ந்து சமூகத்தால் தள்ளிவைக்கப்படும் LGBTQ சமூகத்தாருக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமான மாதம்! ஆம், ஜூன் மாதமானது LGBTQ சமூகத்திற்கான ப்ரைட் மாதம்!

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் ப்ரைட் மந்த் என்று அழைக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக 1969ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இந்த ப்ரைட் மந்த் கொண்டாடப்படவேண்டிய அவசியமென்ன? எதன் காரணமாக இந்த ப்ரைட் மந்த் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்..

    ஸ்டோன்வால் நிகழ்ச்சி..

    LGBTQ எனப்படும் ஓரின, இருபாலின, மூன்றாம் பாலினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமை கோரல் 1924ம் ஆண்டு முதல் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது.

    இந்த LGBTQ அமைப்பிற்கு சிகாகோவில் உள்ள மனித உரிமைகள் ஆணையமானது நிதியுதவி செய்து வந்தது. இருப்பினும், 1969ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக அளவில் இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களை ஒன்று சேர வைத்தது.

    1969ம் ஆண்டு நியூயார்க் மாகாணத்தின் க்ரீன்விச் கிராமத்தில் இருந்த ஸ்டோன்வால் எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் அதிக புகழ்பெற்றிருந்த விடுதி ஒன்றில் காவலர்கள் சோதனை ஒன்றினை நடத்தினர்.

    ஜூன் மாதம் அதிகாலையில் காவலர்களால் நடத்தப்பட்ட இந்த சோதனையானது அந்த விடுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்றதற்காக நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் பல ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த விடுதியானது காவலர்களால் களேபரப்படுத்தப்பட்டது.

    இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியினையும் வேடிக்கை பார்த்திருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அந்த இடம் மக்கள் கூட்டத்தினால் நிரம்ப ஆரம்பித்தது.

    காவல்துறையினரால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடலாயினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்டிச் சென்றது. கண்ணாடி பாட்டில்களையும், சில்லரைக் காசுகளையும், சிறு சிறு கற்களையும் போலீசாரின் மீது போராட்டக்காரர்கள் வீசத் தொடங்கவே, வேறு வழி இன்றி காவலர்கள் பின்வாங்கினர்.

    காவலர்கள் ஒரு வழியாக அந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின்பும், போராட்டம் நடந்த பிறகு ஐந்து நாட்களுக்கு அந்த இடத்தில் பலரும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

    இந்த ஸ்டோன்வால் நிகழ்வானது அமேரிக்கா முழுவதும் இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களை ஒன்று சேரவைக்க ஒரு துவக்கப் புள்ளியாய் அமைந்தது.

    உரிமைக்கான போராட்டம் துவங்கியது..

    இந்த சம்பவத்திற்கு முன்பு ஒவ்வொரு வருடம் ஜூலை மாதம் நான்காம் தேதியின் போது பிலடெல்பியா மாகாணத்தில் தங்களது உரிமைக்காக ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் மிக லாவகமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

    ஸ்டோன்வால் நிகழ்ச்சிக்குப் பிறகு நவம்பர் இரண்டாம் தேதி 1969ம் ஆண்டு பிலடெல்பியாவில் இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்பு ஒரு மாபெரும் பேரணியினை நடத்துவதற்கான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

    இந்த பேரணியானது 1970ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி ஸ்டோன்வால் சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் நிறைவடைந்த தினத்தில் அணிவகுக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

    ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்போரும் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணி ஆரம்பித்த பொழுது சில நூறு நபர்களே கலந்து கொண்ட நிலையில், பேரணி முடியும் தருவாயில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை இணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

    ‘தெளிவாகக் கூறு;சத்தமாகக் கூறு’ என்ற முழக்கத்துடன் ஆரம்பித்த பேரணியில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையின் அளவு சரியாக தெரியாத நிலையில், சுமார் 1000த்திலிருந்து 20,000 மக்கள் வரை கலந்து கொண்டிருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டது.

    இந்த பேரணிக்குப் பிறகு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஓரினச்சேர்கையாளர்களால் பேரணி நடத்தப்பட்டது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதன் முதலாக அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த பேரணி நடத்தது. உலகில் முதன் முதலாக அரசு அனுமதியுடன் ஓரினச்சேர்க்கையாளர்களால் நடத்தப்பட்ட பேரணியாக வரலாற்றில் பதிந்தது.

    1978ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவென தனி கொடி உருவாக்கப்பட்டது. இந்த கொடியில் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் வயலட் என ஆறு நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கொடியில் உள்ள ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு பொருள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    1999ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ஜூன் மதத்தினை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான மாதமாக அறிவித்தார்.

    பிரைட் மாதம்..

    இதற்குப் பிறகு ஓவொரு வருடமும் ஜூன் மாதம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் இந்த ப்ரைட் தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இன்று ஓரினச்சேர்க்கையானது உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறவு முறையாக உள்ளது. சமூகத்தில் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளைக் களைய பல நாடுகளும் தங்களினாலான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பல நாடுகள் LGBTQ சமூகத்தை ஒப்புக்கொண்டாலும் இன்னும் பெரும்பாலான நாடுகள் LGBTQ சமூகத்தை ஏற்கவில்லை. சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நாடுகளிலும், மக்கள் மனப்பூர்வமாக LGBTQ சமூகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

    அதேசமயம், முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது உலகம் முழுவதும் LGBTQ சமூகம் சார்ந்த விழிப்புணர்வும், புரிதலும் வளர்ந்து வருவது முற்போக்கு சிந்தனை வளர்வதை குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

    எது எப்படியாக இருந்தாலும், ஆரம்பத்தில் சொன்னதுபோலவே ‘காதல் காதல்தான்; காதல் மட்டுமேதான்!’

    காதல் எனும் பொதுவுடமை அனைவருக்கும் அவரவர்களின் விருப்பத்தின் பெயரில் வாய்க்கட்டும்! பூமி காதல் எனும் பூக்களால் நிறையட்டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....