Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

    நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

    கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது நாள்களுக்கு முன்பு உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள தற்போது மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  

    இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்தது.

    மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் தந்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக கடந்த ஜூலை 18-ம் தேதி காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

    மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடலை மறுகூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஜூலை 18-ம் தேதி அன்றே அளிக்கப்பட்டது.

    ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். அதோடு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

    அதன்பின்னர், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தந்தை ராமலிங்கம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. 

    இந்த மனு கடந்த ஜூலை 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், உடற்கூராய்வின் போது மாணவி ஶ்ரீமதியின் பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் உடற்கூராய்வை மேற்கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 20-ம் தேதி இரண்டாவது முறையாக மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு நடைபெற்றது. 

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரிய மனு ஜூலை 22-ம் தேதியாகிய இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணையின்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், இன்று காலை விசாரணை தொடங்கியபோது, முதல் உடற்கூராய்வுக்கும் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து, மாணவியின் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

    மேலும், இரண்டு முறை உடற்கூராய்வு செய்யும் காணொளிகளையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், நீதிபதி, ‘மாணவியின் உடலை பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள்? அவரது உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் என்ன தாமதம்? ஒவ்வொரு முறையும் பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும். மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது பெற்றோருக்கு தெரியாதா? ‘நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா?’ என்று நீதிபதி அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: 

    மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு சமூக ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்புகின்றன. இந்த விவகாரத்தில் அனைவரும் தங்களை நீதிபதியாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

    மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறது. கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை விரைந்து நடத்துங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நாளை தங்களது மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (ஜூலை 23) 7 மணிக்குள் உடலை பெற்று, நாளை (ஜூலை 23) மாலைக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டது.

    மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....