மாணவி ஶ்ரீமதியின் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்தது.
மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் தந்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக கடந்த ஜூலை 18-ம் தேதி காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மாணவி ஶ்ரீமதியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடலை மறுகூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஜூலை 18-ம் தேதி அன்றே அளிக்கப்பட்டது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். அதோடு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்பின்னர், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தந்தை ராமலிங்கம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த மனு கடந்த ஜூலை 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், உடற்கூராய்வின் போது மாணவி ஶ்ரீமதியின் பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் உடற்கூராய்வை மேற்கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 20-ம் தேதி இரண்டாவது முறையாக மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு நடைபெற்றது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரிய மனு 22-ம் தேதியாகிய இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இன்று (ஜூலை 22) காலை விசாரணை தொடங்கியபோது, முதல் உடற்கூராய்வுக்கும் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து, மாணவியின் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு முறை உடற்கூராய்வு செய்யும் காணொளிகளையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி பள்ளிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு முன் போராட்டம்