Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபரபரப்பாக சென்ற போட்டி; மும்பையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!

    பரபரப்பாக சென்ற போட்டி; மும்பையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன. பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் மொத்தமாக 70 லீக் போட்டிகள் உள்ளன. லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    எனவே, முதல் நான்கு இடங்களைப் பிடிப்பதற்காக பத்து அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. ஒவ்வொரு அணிகளும் தங்களது முழு திறமைகளைக் காட்டி விளையாடி வந்த நிலையில் இப்போட்டியானது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.

    இதுவரை ஒரு அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்காக மற்ற அணிகள் விளையாடி வருகின்றன.

    நேற்று நடந்த 65வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இது வரை மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று பிளே ஆஃப் வாய்ப்பினை இழந்த மும்பை அணி இறுதி ஆட்டங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.

    அது போல ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பினைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

    இந்த ஒரு பரபரப்பான சூழ்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. 

    முதல் இன்னிங்ஸ்

    இதன்படி முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில்  ஒருவரான அபிஷேக் ஷர்மா 10 பந்துகளில் 9 ரன்கள் அடித்து டேனியல் சாம்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ராகுல் திரிபாதி, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ப்ரியம் கார்க்குடன் கைகோர்த்து மும்பை இந்தியன்ஸ் பௌலர்களை துவம்சம் செய்தனர். 44 பந்துகளை எதிர்கொண்ட திரிபாதி 76 ரன்களைக் குவித்தார். உடன் ஆடிய கார்க்கும் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். இந்த கூட்டணியானது 43 பந்துகளுக்கு 78 ரன்கள் அடித்தது.

    சிறப்பாக ஆடிய கார்க், ராமந்தீப் சிங் போட்ட பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்குப் பின்னர் வந்து நிக்கோலஸ் பூரானும் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பூரான் மற்றும் திரிபாதி கூட்டணி 42 பந்துகளை எதிர்கொண்டு 76 ரன்கள் அடித்தது. 

    36 ரன்கள் அடித்திருந்த நிலையில் பூரான் மெரிடித் பந்தில் மார்கண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன நிலையில், அதற்கு அடுத்த ஒவரிலேயே  76 ரன்கள் எடுத்திருந்த ராகுல் திரிபாதியும் ராமந்தீப் சிங் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதி ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைக் குவித்தது.

    மும்பை அணி தரப்பில் ராமந்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ், மெரிடித், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ஒரு தலா விக்கெட்டினையும் எடுத்தனர்.

    இரண்டாம் இன்னிங்ஸ்

    194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 36 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 48 ரன்களும், 34 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 43 ரன்களும் அடித்தனர்.. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 66 பந்துகளுக்கு 95 ரன்கள் அடித்தது.

    சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதற்கு அடுத்த ஒவேரிலேயே இஷான் கிஷன் உம்ரான் மாலிக்கின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அதன் பின்னர் வந்த டேனியல் சாம்ஸ், திலக் வர்மா, ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணியானது 17 ஓவர்களில்  5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்திருந்தது.

    ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மற்றோரு பக்கத்தில் ஆடிய டிம் டேவிட் அதிரடி காட்டினார். நடராஜன் வீசிய 18வது ஒவரில் நான்கு சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கையை அளித்தார்.

    டிம் டேவிட்டின் இந்த அதிரடியால் மும்பை வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18வது இறுதிப் பந்தில் எதிர்பாராவண்ணமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

    19வது ஓவரினை வீச வந்த புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி ரன் ஏதும் கொடுக்காமல் ஒரு விக்கெட்டினை எடுத்தார். இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ரன்களை மட்டுமே எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.

    சன்ரைசர்ஸ் அணி சார்பாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய திரிபாதிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, தனது பிளே ஆஃப் வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினை எதிர்கொள்கிறது. 16 புள்ளிகள் பெற்றுள்ள லக்னோ 3வது இடத்திலும், கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது.

    இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    என்னது, நான் இறந்துட்டேனா ? – நித்யானந்தா எழுதிய கடிதம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....