Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபட்டிதார்-ராகுல்; வெற்றிக்கான ஒரு போராட்டம்.. லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு..

    பட்டிதார்-ராகுல்; வெற்றிக்கான ஒரு போராட்டம்.. லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு..

    நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு இதுவே கடைசி போட்டியாக இருக்கும். ஜெயிக்கும் அணியானது இரண்டாவது குவாலிஃபையர் செல்லும். எனவே, இந்த போட்டியானது இரண்டு அணிகளுமே மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.

    லக்னோ அணியானது லீக் போட்டியில் தோற்ற ஐந்து போட்டிகளையும் பிளே ஆஃப் சென்றுள்ள மூன்று அணிகளிடமே தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் ஃபீல்டிங்கினைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியானது ராஜத் பட்டிதார் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

    ராஜத் பட்டிதார்..

    பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணிக் கேப்டன் பிரான்சிஸ் டு பிளெஸிஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ராஜத் பட்டிதார், விராட் கோலியுடன் அணி சேர்ந்து நிதானமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார்.

    ஒரு பக்கம் விராட் கோலி நிதானமாக ஆட, மறு பக்கம் ராஜத் பட்டிதார் தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

    பட்டிதாரின் அதிரடியான ஆட்டத்தினால் பெங்களூரின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் 24 பந்துகளை எதிர் கொண்டு 25 ரன்கள் அடித்திருந்த கோலி, அவேஷ் கானின் பந்தில் பௌண்டரி லைனில் நின்றிருந்த மொஹ்சின் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    கோலி அவுட்டாகிய போது பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை எடுத்திருந்தது.

    இதற்கு பின்னர் வந்த மேக்ஸ்வெல், மஹிபால் லாம்ரோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்பொழுதும் போல தனது பணியினை சிறப்பாக செய்தார்.

    கார்த்திக் – பட்டிதார் இருவரும் இறுதி ஓவர்களில் லக்னோ பௌலர்கள் வீசிய பந்துகளை சிதறவிட்டனர்.

    இறுதி வரை தனது அதிரடியினைக் குறைக்காத பட்டிதார், ஐபிஎல்லில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். 54 பந்துகளை எதிர்கொண்ட பட்டிதார், 112 ரன்கள் அடித்து (12 ஃபோர், 7 சிக்ஸர்) ஆட்டத்தினை பெங்களூரு அணி பக்கம் கொண்டு வந்தார். மைதானம் முழுவதும் ஆர்சிபி என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பட்டிதார் – கார்த்திக் ஜோடியானது 41 பந்துகளை எதிர் கொண்டு 92 ரன்களை அடித்திருந்தது. 23 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 37 ரன்களை அடித்தார்.

    லக்னோ தரப்பில் ரவி பிஷ்ணோய், மொஹ்சின் கான், குர்னால் பாண்டியா, ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை எடுத்திருந்தனர்.

    போர் தொடங்கியது..

    208 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் சிராஜ் பந்தில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    சிறப்பாக தனது ஆட்டத்தினைத் தொடங்கிய மன்னன் வோராவும் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசல்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    41 ரன்களில் 2 விக்கெட்டினை எடுத்திருந்த லக்னோ அணிக்கு அடுத்த பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் ஹூடா, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.

    ஒருவர் அதிரடி காட்ட, மற்றொரு பேட்ஸ்மேன் நிதானமாக விளையாட என்று இந்த கூட்டணி லக்னோ அணியினை வெற்றிப் பாதையை நோக்கி நிதானமாய் இழுத்துச் சென்றது.

    ஒரு கட்டத்தில் ஹூடா தனது அதிரடியினை காட்டத் துவங்க லக்னோ அணியின் ஸ்கோர் வெகுவாய் உயர்ந்து கொண்டே சென்றது.

    14வது ஓவரில் ஹஸரங்கா வீசிய பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஹூடா அந்த ஓவரின் நான்காவது பந்தில் கிளீன் போல்ட் ஆனார். 

    ஹூடா-ராகுல் ஜோடி 61 பந்துகளுக்கு 96 ரன்கள் அடித்து பெங்களூரு அணிக்கு பெரும் நெருக்கடியினைத் தந்திருந்தது. ஹூடா தனது பணி முழுமையாக முடியாத நிலையில் பெவிலியன் சென்றாலும், மறு பக்கத்தில் ராகுல் ஒரு தலைவனாக தனது அணியின் வெற்றிக்காக தனி மனிதனாய்ப் போராடிக் கொண்டிருந்தார்.

    ஹூடாவிற்குப் பிறகு வந்த வீரர்களிடமிருந்து எந்த விதமான ஒத்துழைப்பும் வராத நிலையில் கே.எல்.ராகுல், 58 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த போது பௌண்டரி அடிக்க முயன்று ஹேசல்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

    ராகுல் அவுட் ஆன போது மைதானமே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த போராட்டத்தினை ராகுல்-ஹூடா ஜோடி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ராகுலின் விக்கெட்டுடன் அந்த அணியின் வெற்றியும் பெவிலியன் நோக்கிச் சென்ற நிலையில் இருபது ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து 14 ரன்களில் தோல்வியினைத் தழுவியது.

    இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணியின் இந்த வருட ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 114 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த ராஜத் பட்டிதார் ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

    ஹஸரங்காவின் சிறப்பான ஃபீல்டிங், ஹேசல்வுட், ஹர்ஷல் படேல் ஆகியோரின் திறமையான பௌலிங் ஆகியவை பெங்களூரு அணிக்கு பெரும் பலமாய் அமைந்தது.

    தோல்வியோ வெற்றியோ முதலில் போராடவேண்டும் என்ற வாக்கியத்தினை செயலில் காட்டியுள்ளது லக்னோ அணி.

    பெங்களூரு அணி இறுதி போட்டிக்குச் செல்வதிற்க்கு இன்னும் ஒரு தடைக்கல் மட்டுமே உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியினை வெற்றிகொள்ளுமாயின் பெங்களூரு இறுதிப் போட்டிக்கு செல்லும்.

    நாளை நடைபெறும் இந்த போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

    ‘பாரத் பந்த்’ எனும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் – தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....