Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாதொடர்ந்து பலியாகும் உயிர்கள்; வெளியேறும் பண்டிட்டுகள் - என்ன செய்கிறது அரசு?

  தொடர்ந்து பலியாகும் உயிர்கள்; வெளியேறும் பண்டிட்டுகள் – என்ன செய்கிறது அரசு?

  ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பணிபுரியும் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் பயங்கரவாதிகளால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் காஷ்மீர் மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

  காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ளது இலாகி தேஹாதி வங்கி. இந்த வங்கியின் மேலாளராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஜயகுமார் நோக்கி இரண்டு, மூன்று முறை சுட்டார். இதில் விஜயகுமார் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

  காஷ்மீர் விடுதலை வீரர்கள் அமைப்பு..

  காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான, காஷ்மீர் விடுதலை வீரர்கள் அமைப்பு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் வசிக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதே கதி தான் நேரும் என எச்சரித்துள்ளனர். உயிரிழந்த விஜய் குமார் ராஜஸ்தான் மாநிலத்தின் அனுமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்தப் படுகொலைக்கு ஜம்மு காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  ராகுல் காந்தியும் ட்விட்டரில், காஷ்மீரில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலை நாட்டுவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த படுகொலைக்கு வருத்தமும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலை நாட்ட பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், குடிமக்களின் பாதுகாப்புக்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் காஷ்மீருக்கு திரும்பிய காஷ்மீர் பண்டிட்கள் தங்களை மறு குடியமர்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

  “எல்லாம் சுமுகமான நிலைக்கு திரும்பிவிட்டது என்று இருந்தோம். எனவே நாங்கள் அரசாங்க பணிகளில் சேர்ந்தோம். ஆனால் இப்போது நாங்கள் கொல்லப்பட்டு வருகிறோம்” என பட்கமில் உள்ள ஷேக்போரா முகாமை சேர்ந்த பண்டிட் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  இருப்பினும் ஜூன் 6ஆம் தேதிக்குள் எந்த தவறும் நடக்கா வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

  பண்டிட் ஊழியர்கள்..

  பண்டிட் ஊழியர்களின் பிரதிநிதியான அஷ்வானி பண்டிட், ஜூன் 6 வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.”அரசு என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும். அரசு மீண்டும் தோற்றுப் போனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் யோசிப்போம்” என்று கூறினார் அவர்.

  1990ஆம் ஆண்டு நடந்த வன்முறையின்போது வெளியேறிய காஷ்மீரி பண்டிட்டுகளில் 5 ஆயிரம் பேர் 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தால் கவரப்பட்டு காஷ்மீருக்கு திரும்பினர். அதே ஆண்டு நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சியின்போது பல பண்டிட்கள் கொல்லப்பட்டதை அடுத்து, 50 ஆயிரம் குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினார்.

  இரண்டு நாட்களுக்கு முன் தான் ஜம்முவை சேர்ந்த ரஜினி பாலா என்ற ஆசிரியை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இவர் காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்தின் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் டிவி கலைஞர் அம்ரீன் பட் என்பரும், மே 12ஆம் தேதி ராகுல் பட் என்ற அரசு ஊழியரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பேர் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல கடந்த ஒரு மாத காலத்தில் 22க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்புத்துறை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், பயங்கரவாதிகளைக்களையும் செயல்பாட்டை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தியுள்ளதாகவும், ஜம்ம காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

  தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை அடுத்து, உள்ளூர் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது பற்றி உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .

  இனி சுவரொட்டி ஒட்டக்கூடாது; அமலுக்கு வருகிறது புதிய சட்டம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....