Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    ராஜஸ்தானின் கனவுகளை தகர்த்த கில்லர் மில்லர்; முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

    நேற்று நடந்த ஐபிஎல் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

    நேற்று நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணிக்கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் ஃபீல்டிங்கினைத் தேர்ந்தெடுத்தார்.

    இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் ஆறு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 26 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் (5 ஃபோர், 3 சிக்ஸர்) அடித்தார்.

    ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் 89 ரன்களை (12 ஃபோர், 2 சிக்ஸர்) விளாசினார். அணியில் படிக்கல் 28 ரன்கள் அடித்து தனது பங்கினை அளித்தார். குஜராத் அணித் தரப்பில் ஹர்திக் பாண்டியா, சாய் கிஷோர், யாஷ் தயாள், முஹமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை எடுத்தனர்.

    விக்கெட்டுகள் எடுக்கவில்லையெனினும் நான்கு ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ரஷீத் கான் இந்த ஆட்டத்தில் மிக முக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்தினார்.

    இதற்கு முன்னர் நடந்த பிளே ஆஃப் போட்டிகளில் 180 ரன்களுக்கு மேல் மூன்று முறை மட்டுமே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாஹா ரன்கள் ஏதும் அடிக்காமல் முதல் ஒவேரிலேயே சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

    இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் மேத்தியூ வேட் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.  இந்த ஜோடி 43 பந்துகளுக்கு 71 ரன்கள் அடித்தது.

    விக்கெட்டுகளுக்காக ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில், 7.4வது ஓவரில் இரண்டாவது ரன் எடுப்பதற்காக கில் ஓடிய போது வேட் செய்த ஒரு சிறு குழப்பத்தினால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    21 பந்துகளை எதிர்கொண்ட கில் 35 ரன்கள் அடித்திருந்தார். இதற்குப் பிறகு மேத்தியூ வேடும் மெக்காய் வீசிய பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    பாண்டியா-மில்லரின் அதிரடி..

    கில்லின் ரன் அவுட்டிற்குப் பிறகு மூன்றாவது விக்கெட்டுக்காக ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். இந்த தொடரில் தனது வழக்கமான ஆட்டத்தினை விடுத்து அணிக்கேப்டன் என்கிற முறையில் பொறுப்பாக ஆடி வந்த பாண்டியா, இந்த ஆட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

    சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து அவற்றினை பௌண்டரிகளுக்கு விளாசிய பாண்டியா 27 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

    மறுபக்கம் ஆடிய மில்லர், தனது வழக்கமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.  நாற்புறமும் பந்துகளை சிதறவிட்ட மில்லர் 38 பந்துகளில் 68 (3 ஃபோர், 5 சிக்ஸர்)  ரன்கள் அடித்து களத்தில் இறுதி வரை இருந்தார்.

    பாண்டியா-மில்லர் வெற்றிக்கூட்டணியானது கடைசி பத்து ஓவர்களில் 106 ரன்களை அடித்தது.

    19வது ஓவரினை வீசிய மெக்காய் ஏழு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். குஜராத் அணி வெற்றி பெற இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

    ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசியிருந்த பிரஷித் கிருஷ்ணா கடைசி ஓவரினை வீச அழைக்கப்பட்டிருந்தார். 

    பிரஷித் வீசிய முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பிய மில்லர், குஜராத் அணிக்கு ஒரு கனவு வெற்றியினைத் தேடித் தந்தார் என்றே கூற வேண்டும்.

    இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாய் நுழைந்துள்ளது. மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி போட்டியிட்டு வெற்றிபெறுமாயின் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.

    இன்றைய போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

    கோவில் கோவிலாக செல்லும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி!.. கல்யாண வைபோகமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....