Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அபூர்வ ராகமாக இசைத்த, இயல்பாக நடித்த ஸ்ரீவித்யாவை மறக்க முடியுமா?

  அபூர்வ ராகமாக இசைத்த, இயல்பாக நடித்த ஸ்ரீவித்யாவை மறக்க முடியுமா?

  பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை தன் விழியழகால் வெளிப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்தையே ஈர்த்தவர் நடிகை ஸ்ரீவித்யா. தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள். அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா.

  அமைதியான முகம், அதில் துருதுருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருட்டிணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை திரைப்படங்களில் நடித்து வந்தார்.

  இவர் இந்திய திரைப்பட நடிகை, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  இவர் ஒரு பின்னணி பாடகியாகவும் பணியாற்றி உள்ளார். “கற்பூர முல்லை” படத்தில் பாடகியாக நடித்தது மட்டுமின்றி பாடியும் இருப்பார். புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 1966ஆம் ஆண்டு திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

  நடிக்க வந்தபொழுது அவருக்கு 20 வயதுதான், ஆனால் அந்த வயதிலும் எந்த நடிகையும் எடுக்காத சவாலை எடுத்தார். அன்றே ஏறக்குறைய சம வயதுள்ள கமலஹாசனுக்கு தாயாக நடித்தார்.

  நடிப்பும் ஶ்ரீவித்யாவும் !

  1971ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய நூறுக்கு நூறு படத்தில் ஆசிரியரை காதலிக்கும் மாணவியாக ஒரு சின்ன வேடத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

  கே.பாலசந்தர் இயக்கிய வெள்ளிவிழா, சொல்லத்தான் நினைக்கிறேன் மற்றும் அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி இவர் தான்.

  தான் ஜோடியாக நடித்த நடிகருக்கே, பல்வேறு உறவுமுறை கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு, சில நடிகையருக்கே அமையும். அச்சிலரில், ஶ்ரீவித்யாவும் ஒருவர். அபூர்வ ராகங்களில், ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர், “மாப்பிள்ளை” படத்தில் மாமியாராகவும், “உழைப்பாளி” படத்தில் அக்காவாகவும், “தளபதி” படத்தில், அம்மாவாகவும் நடித்தார்.

  மலையாளத்திரையுலக வாழ்வைத் தொடங்கிய ஶ்ரீவித்யா, மலையாள மொழியில்தான், நீண்டகாலமாகவும், அதிக படங்களிலும் நடித்துள்ளார். மகிழ்ச்சி, சோகம், வில்லத்தனம் மற்றும் நகைச்சுவை என அனைத்து காட்சிகளிலும் மிக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.

  காதலுக்கு மரியாதை படத்தின் இறுதி காட்சி ஒன்றே போதும் இவரின் நடிப்பு திறமையை எடுத்துக்காட்ட. மிக சிறப்பானதொரு நடிப்பை அவர் காட்டியிருப்பார்.

  ஶ்ரீவித்யா அவர்கள் வாழ்கை போராட்டங்கள் நிறைந்தது. அவர் நடிகையானதில் தாய்க்கு விருப்பமில்லை ஆனாலும் போராடி நடிகையானார், பின் காதல் தோல்வி, திருமண தோல்வி , சொத்துக்கள் கணவனின் கைக்கு சென்று சல்லி பைசா இல்லாமல் மறுபடியும் அவர் மலையாள திரையுலகிற்கு சென்று போராடிக்கொண்டுதான் இருந்தார்.

  ஈகோ பார்க்காதவர்:

  எந்த விதமான பந்தா, கெடுபிடிகளும் செய்யாதவர். ஈகோ பார்க்காதவர். எனவே, இறுதிவரை, அனைத்துமொழி திரைப்படத்துறையினராலும், பெரிதும் விரும்பப்படும் நடிகையாகவே இருந்தார் ஶ்ரீ வித்யா.

  டி.ராஜேந்தருக்குப் பிடித்தமான நடிகை ஶ்ரீவித்யா. அவருடைய பல படங்களில், ஶ்ரீவித்யா நடித்திருப்பதைக் காணலாம். டி.ராஜேந்தர் படங்களில், அதிகளவில், நடித்த ஒரே நடிகை ஶ்ரீவித்யா மட்டுமே.

  2003 ஆம் ஆண்டில் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது அவருக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

  இதற்காக இவர் மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்றார். மூன்றாண்டுகளாக, புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றபடிதான் நடித்தும் வந்தார்.

  இவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், திருமதி ஸ்ரீவித்யா ஒரு விருப்பத்தை திரைப்பட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ் குமாரிடம் கேட்டு கொண்டார். அது என்னவென்றால், ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பது.

  இதன் மூலம் பணப் பற்றாக்குறை அல்லது ஏழை மாணவர்களின் படிப்பைத் தொடர உதவித்தொகையை வழங்குவதற்கும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்காக இச்சங்கம் செயல் படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  இவர் வாழ்வின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், இவர் காதலித்த மனிதர்கள், இவரை ஏற்கவில்லை. இவரைக் காதலித்த நல்ல மனிதர்களை இவர் விரும்பவில்லை என்பதுதான். பெற்றோர் பாசம், காதல், திருமணம், குழந்தைப்பேறு என, வாழ்வின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அனைத்திலும் தோல்விகண்ட முதல் தமிழ் நடிகை இவர்தான்

  எத்தனையோ போராட்டங்களில் வென்ற ஶ்ரீவித்யா, புற்றுநோயுடனான போராட்டத்தில் தோற்றுகொண்டே இருந்தார்

  ஒரு கட்டத்தில் யாரையும் அவர் பார்க்க விரும்பவில்லை, தன் களையிழந்த நோயுற்ற முகம் பத்திரிகையில் வருவதை கூட அவர் விரும்பவில்லை அதே நேரம் தமிழகத்திலிருந்து யாரும் வலியசென்று பார்க்கவுமில்லை.

  ஶ்ரீவித்யாவை புற்றுநோய் எனும் அரக்கன் ஒடுக்கி உருமாற்றி வைத்திருந்த அந்த கோலத்தை கண்ட மிக சிலரில் கமலஹாசனும் ஒருவர்.

  தமிழகம் கிட்டதட்ட அவரை மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் ஶ்ரீவித்யாவினை மறக்க மாட்டார்கள்…

  “வரவு எட்டனா செலவு பத்தனா” நிலையை போக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....