Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவினை வீழ்த்தியது லக்னோ..

    பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவினை வீழ்த்தியது லக்னோ..

    நேற்று நடந்த 66வது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

    இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கினைத் தேர்வு செய்தார். 

    இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் 20 ஓவர்களுக்கு 210 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் 70 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்கள் (10 ஃபோர், 10 சிக்ஸர்) எடுத்தார். கே.எல்.ராகுல் 51 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்கள் (3 ஃபோர், 4சிக்ஸர்) எடுத்தார். 

    கொல்கத்தா பௌலர்களில் டிம் சௌத்தி 4 ஓவர்களில் 57 ரன்களும், ரஸ்ஸல் 3 ஓவர்கள் வீசி 45 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். டிம் சௌத்தி வீசிய 19 ஒவரில் நான்கு சிக்ஸர்களை விளாசினர் லக்னோ அணியினர். 18 ஓவர்களில் 164 ரன்களை எடுத்திருந்த லக்னோ அணி இறுதி இரண்டு ஓவர்களில் மட்டும் 46 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இந்த போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் மட்டுமே பிளே ஆஃப்-க்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழக்க, இரண்டு ஓவர்களில் நான்கு ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது.

    நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ்..

    பெரிய இலக்கினை நோக்கி பயணித்த கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக இல்லையெனினும் அதன் பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா , ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

    அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 22 பந்துகளில் 42 ரன்கள் (9 ஃபோர் ) எடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் (4 ஃபோர், 3 சிக்ஸர்) இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது.

    42 ரன்கள் அடித்திருந்த நிதிஷ் ராணா  கிருஷ்ணப்பா கெளதம் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேற அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகளுக்கு 65ஆக இருந்தது.

    இதன் பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் தனது பங்கினை சிறப்பாக அளித்தார். இவர் 24 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் (2 ஃபோர், 3சிக்ஸர்) அடித்தார்.  நான்காவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ்-பில்லிங்ஸ் கூட்டணி 66 ரன்களை குவித்தது.

    சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சாம் பில்லிங்ஸ் அடுத்தடுத்து அவுட் ஆக, 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 142 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. மிகவும் பரபரப்பாக சென்ற போட்டியின் மிக முக்கியமான தருணத்தில் களமிறங்கிய ஆண்ட்ரி ரஸல் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய ரஸ்ஸல், சொற்ப ரங்களில் ஆட்டமிழந்ததுடன் (11 பந்துகளில் 5 ரன்களில்), அதிக பந்துகளை வீணாக்கிவிட்டு சென்றார்.

    ரிங்கு சிங் மற்றும் சுனில் நரைன்..

    ரஸல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய பொழுது கொல்கத்தா அணியின் ஸ்கோர் 150. வெற்றி பெற இன்னும் 60 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான தருணங்கள் சிறப்பான கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் என்றுமே தவறியதில்லை..

    இந்த நிலையில் ரிங்கு சிங் மற்றும் சுனில் நரைன் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். சுனில் நரைன் 7 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 3 சிக்ஸர்கள் விளாசி 21 ரன்களை அடித்தார்.

    மறுபக்கத்தில் ஆடிய ரிங்கு சிங் உலகத்தரம் வாய்ந்த ஒரு இன்னிங்சினை வெளிப்படுத்தினார். அவர் 15 பந்துகளில் 40 ரன்கள் (2 ஃபோர், 4 சிக்ஸர்கள்)  அடித்திருந்தார்.

    இரு அணிகளுக்கும் இடையில் நடந்த கடைசி ஓவர் போராட்டம்..

    19வது ஜேசன் ஹோல்டர் வீசிய 19வது ஒவரில் நரைன், ரிங்கு தலா ஒரு சிக்ஸர்கள் விலாச, கடைசி ஒவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

    ஸ்டோனிஸ் கடைசி ஒவரினை லக்னோ சார்பாக வீச வந்தார். 21 ரன்கள், 6 பந்துகள்.. பந்தினை எதிர்கொள்ளப்போவது ரிங்கு சிங்..

    முதல் பந்தில் ஃபோர்.. வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் இப்போது 17 ஆக குறைந்தது.

    இரண்டாவது பந்தில் சிக்ஸர்.. வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் 11ஆக குறைந்தது..

    மூன்றாவது பந்தினை வீசிய ஸ்டானிஸ் தனது யார்காரினைத் தவறவிட, அந்த பந்தும் சிக்ஸராக மாறியது. வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் 5ஆக குறைந்தது.

    நான்காவது பந்தில் 2 ரன்களை ரிங்கு சிங் எடுக்க.. 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இரண்டு பந்துகளில் 3 ரன்கள்.. ஒட்டுமொத்த மைதானமும் பரபரப்பில் இருக்க இதுவரை 18 ரன்களை நான்கு பந்துகளில் விட்டுக்கொடுத்த ஸ்டோனிஸ் ஐந்தாவது பந்தினை வீசினார்.

    அந்த பந்தானது ரிங்குவின் பேட்டில் பட்டு ஆப் சைடில் கேட்ச் ஆக மாறியது. கடினமான அந்த கேட்சினை எவின் லெவிஸ் அற்புதமாக பிடித்தார். ரிங்கு பெவிலியன் திரும்பினார்.

    ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அற்புதமான யார்கரினை வீசி உமேஷ் யாதவின் விக்கெட்டினை எடுத்து லக்னோ அணிக்கு இரண்டு ரன்களில் வெற்றியைத் தேடித் தந்தார் ஸ்டோனிஸ். 21 ரன்கள் அடித்த நரைன் அவுட் ஆகாமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தினைத் தக்கவைத்துள்ளது லக்னோ அணி. இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள்ளும் நுழைந்துள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் தனது பிளே ஆஃப் சுற்றினை இழந்துள்ள கொல்கத்தா அணி.. சிறப்பான போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது. அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரும் இதனையே குறிப்பிட்டுள்ளார். 

    வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த டி காக் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.

    இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியினை எதிர்கொள்கிறது.

    இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம்; முதல் மனைவி கேட்ட கேள்வி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....