Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்"நந்தவனத்தில் ஓர் ஆண்டி" பாடல்- ஓர் பார்வை

    “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல்- ஓர் பார்வை

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடலைப் பாடியவர் கடுவெளி சித்தர் ஆவார். கடுவெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர், சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளி சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை. நாட்டுப்புறத்தில் இது பாடப்படுவதால் இதனை நாட்டுப்புற பாடல் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். அவர் பாடிய பாடல் இது:

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

    நல்ல வழிதனை நாடு- எந்த
    நாளும் பரமனை நத்தியே தேடு
    வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

    பாடலின் பொருள் விளக்கம்:

    மேலோட்டமாகப் பார்த்தால், இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால், வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

    சித்தர்கள் எப்போதுமே உடம்பு, ஆன்மா, நிலையாமை என்று ஒரு சிந்தனைக்குரிய கருத்துக்களையே கூறுவர். அவர்கள் வேடிக்கையாகச் சொல்லிவிட்டு செல்வது போல் இருக்கும். ஆனால், அந்த வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கும்.

    இப்படித்தான் கடுவெளிச்சித்தர் ஒருநாள் கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சுடுகாடு. அங்கே காணும் காட்சி அவரை சிந்திக்க வைக்கிறது. அங்கு, அவர் இளம் வயதுடைய மனிதனின் உடல் அடக்கம் செய்யப்படுவதை காண்கிறார். இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என மனம் வருந்துகிறார்.

    “என்ன உலகம் இது? நேற்று இருந்தார். இன்று இல்லை. வாழும்வரை ஆடிய ஆட்டம் என்ன? எனக்கு நிகர் யார் என்று அடித்தக் கொட்டம் என்ன? மூச்சுப் போச்சு என்றால் எல்லாம் அடங்கிப் போச்சு. ஆனால், கிடைத்தற்கரிய பிறவி அல்லவா இந்த மானிடப்பிறவி.

    இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர் உணர்ந்து வாழ்கிறார்கள்? வரமாக கிடைத்துள்ள இப்பிறவியின் அருமையை உணராமல், தாறுமாறாக வாழ்ந்து காலத்துக்கு முன்பாகவே, வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டானே” என்று நினைத்து அங்கேயே நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

    “இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான் என்று நினைக்கலியே” என்று அழுது புலம்புகின்றனர் அவரது உறவினர்கள். அவர்களை பார்த்துக் கொண்டிருந்த கடுவெளி சித்தர், “நந்தவ னத்திலோ ராண்டி”  என்ற பாடலை பாடிவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறார்.

    அது என்ன ஆண்டி.. வேண்டி.. தோண்டி.. தாண்டி.. வேடிக்கையாக இருக்கிறதல்லவா!

    இந்தப் பாடலை மேலோட்டமாக பார்த்தால் உண்மையான அர்த்தம் நமக்கு புரிய சிறிது கடினமாக தோன்றலாம்.

    கதையின் மூலம் பொருள் விளக்கம்:

    ஏழை ஆண்டி ஒருவன், தினசரி பிச்சை எடுத்து உண்பவன், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத அவன், ஒருநாள் நந்தவனமொன்றில் வித விதமான வண்ண மலர்களை காண்கிறான். நந்தவனத்தின் அருகில் ஒரு குளம் இருப்பதையும் காண்கிறான். ஆனால், என்ன பயன் குளத்தின் நீரை எடுத்து நந்தவனத்துக்கு பயன்படுத்த முடியவில்லையே என்று நினைக்கிறான்.

    தனக்கு ஒரு குடம் (தோண்டி) இருந்தால், அந்த குடத்தை வைத்து குளத்து நீரை தினசரி நந்தவனத்தில் ஊற்றினால், பல மலர்கள் பூக்கும். அந்த மலர்களை விற்று ஒரு மண்டபம் கட்டலாம் என்றும் அதில், பல ஆண்டிகளை தங்க வைக்கலாம் என்றும் கற்பனையில் மிதக்கிறான்.

    பக்கத்து ஊரில் உள்ள குயவனிடம் சென்று, தனக்கு ஒரு குடம் தானமாக வேண்டும் என்று கேட்கிறான். ஆனால், அந்த குயவன் அதற்கு இணங்கவில்லை. ஆண்டி பத்து மாதங்கள் அங்கிருந்து குயவனிடம் மன்றாடுகிறான். குயவனும் மனம் இலகி ஒரு குடத்தை தானமாக கொடுக்கிறான்.

    ஆண்டி தனக்கு குடம் (தோண்டி) கிடைத்த சந்தோசத்தில், அதை தலையில் வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, குடத்தை கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் மன்றாடி வாங்கிய தோண்டியை பத்து நாழிகைகளில் உடைத்து விட்டான்.

    இது ஒரு சாதாரன ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல!

    பத்து மாதம் தவம் செய்து பெற்ற இந்த மனித உடலை, போற்றி பாதுகாக்காமல், அற்ப சுகங்களுக்கு ஆசைபட்டு, மனித உடல் என்னும் தோண்டியை போட்டு உடைக்கிறாயே, இந்த உடல் இருக்கும்போதே ஆன்மா இறையுடன் கலக்க வழி தேட வேண்டாமா என்று கேட்கிறார் கடுவெளி சித்தர்.

    மேலும், நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளைத் தேட வேண்டும் என்றும், பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து இறைவனை நெஞ்சில் வைத்து, வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

    சீ(ஜீ)வாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று உள்ளது. அப்படிப் பெற்ற உடலைத் தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை, நகைச்சுவைப் பாடல் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.

    வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
    வளமான திருக்காஞ்சிப் பதியலாச்சு

    கடுவெளி சித்தர் காஞ்சிபுரத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று போகர் அவருடயை பாடலில் இவ்வாறு தெரிவிக்கிறார்.

    தேவிக்குரிய திருநாள்- ஆடிப்பூரத்தின் சிறப்புகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....