Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் குவாலிஃபையர்; சீறுமா குஜராத்? ராயலாக விளையாடுமா ராஜஸ்தான்?

    ஐபிஎல் குவாலிஃபையர்; சீறுமா குஜராத்? ராயலாக விளையாடுமா ராஜஸ்தான்?

    இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் லீக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளன.

    இம்முறை இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து பத்து அணிகள் களமிறங்கின. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த மிக நீண்ட தொடரில் பத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பிளே ஆஃப் செல்வதற்காக கடுமையான போட்டியினை ஏற்படுத்தின.

    ஆரம்பம் முதலே மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியது. அதன் பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது இடத்தினை உறுதி செய்த நிலையில் இறுதி அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், இன்று பிளே ஆஃப் போட்டியான குவாலிஃபையர் ஒன், முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

    இந்த இரண்டு அணிகள் கடந்து வந்த பாதைகளையும் அந்த அணிகளின் சாதக பாதகங்களை பார்க்கலாம்..

    குஜராத் டைட்டன்ஸ்..

    ‘குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது முதல் ஐபிஎல் தொடர்’ என்ற கூற்று உண்மையில்லை என்னும் வகையில் ஆடிவருகிறது.

    ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், டேவிட் மில்லர், சுப்மன் கில், சாஹா, பெர்குசன் போன்ற வீரர்களுடன் களமிறங்கிய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆரம்பம் முதலே ஒரு வலுவான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் குஜராத் அணி பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    ராகுல் திவாட்டியா, ரஷீத் கான் போன்றோரின் கடைசி நேர அதிரடி ஆட்டமும், கில் மற்றும் சஹாவின் வலுவான தொடக்கமும், மில்லர் மற்றும்  பாண்டியாவின் பங்களிப்பு என பேட்டிங்கில் வலிமையான வரிசையினைக் கொண்டுள்ளது.

    ரஷீத் கான், பெர்குசன், முகமது ஷமி போன்றோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

    பதினான்கு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி பத்து போட்டிகளில் வென்று இருபது புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

    குஜராத் அணியில் அதிகபட்சமாக  ஹர்திக் பாண்டியா 413 ரன்கள் அடித்துள்ளார். ரஷீத் கான் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    முதலில் பேட்டிங்கினைத் தேர்ந்தெடுப்பது குஜராத் அணிக்கு சிக்கலாக உள்ளது. குஜாத் அணி தோற்ற நான்கு போட்டிகளில், மூன்று முறை முதலில் பேட்டிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஒரு குறையினை குஜராத் அணி சரிசெய்யுமாயின் அவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்வதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ்..

    அதிக ரன்கள் அடித்த வீரர், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர், அதிக பௌண்டரிகள் அடித்த வீரர் என அனைத்து முதலிடங்களையும் ஆக்கிரமித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல.

    அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 629 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், மூன்று அரைச்சதங்களும் அடக்கம். பல போட்டிகளில் ஒற்றை ஆளாய் அணிக்கு வெற்றியினை பட்லர் தேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    26 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் யுவேந்திர சஹால். 

    சஞ்சு சாம்சன், படிக்கல் மற்றும் ஹெட்மயர் போன்றோரின் பங்களிப்பும் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

    சமீப காலமாக ரவிச்சந்திரன் அஸ்வினின் பேட்டிங் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அவரது பினிஷிங் கதாப்பாத்திரமானது ராஜஸ்தான் அணிக்கு சில போட்டிகளில் கைகொடுத்துள்ளது.

    நேருக்கு நேர்..

    இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. அந்த போட்டியிலும் குஜராத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் குவித்திருந்தார்.  தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் பட்லர், ஹெட்மயர் தவிர மற்றோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 155 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் தோல்வியைத் தழுவியது.

    ராஜஸ்தான் அணியானது சமீபத்தில் விளையாடிய போட்டிகளில் பட்லரின் அதிரடி இல்லாமல் வென்றுள்ளது. இது அந்த அணிக்கு நம்பிக்கை தரும் விடயமாய் இருக்கும். அதே சமயம் பட்லரின் சமீபத்திய பேட்டிங் அந்த அணிக்கு சற்று அழுத்தத்தினை கொடுத்திருக்கும்.

    இரண்டாவது முறையாக இவ்விரு அணிகள் எதிர்கொள்ளும் இந்த போட்டியானது பிளே ஆஃப்-இல் நடைபெறுவதால் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி நேராக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் போரா? கசிந்த சீன அதிகாரிகளின் உரையாடல்; பதற்றத்தில் தைவான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....