Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசங்க காலத்தில் யானைகள் - நசை பெரிது உடையார்

    சங்க காலத்தில் யானைகள் – நசை பெரிது உடையார்

    சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல குறையத்தொடங்கிய அந்த ஒரு இனிய மாலைப் பொழுதில், நகரத்திற்கு புறத்தே இருந்த அந்த கிராமம் மெல்ல மெல்ல இரவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஆடுகளும், மாடுகளும் வயிறு நிறைந்த திருப்தியில், தங்களது மகிழ்ச்சியை அசை போடுவதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு மெல்ல நடந்து வந்தன.

    ஆடு மாடுகளை ஓட்டி வந்த குடியானவர்கள், பாதியில் விட்ட கதையை தொடர்ந் பேசிக்கொண்டு வந்தனர்..

    குடியானவர்களுடன் வந்த அவர்களது மனைவிமார்கள் தலைக்கு மேல் புல்லுக்கட்டை சுமந்தபடி ஒயிலாக நடந்து வந்தனர்.

    ஆடு மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் எழுப்பிய சப்தமும், ஆடு மாடுகள் எழுப்பிய சப்தமும், அவைகளை ஓட்டிக்கொண்டு வந்த மனிதர்களின் பேச்சுக் குரல்களும்.. ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு புது விதமான மொழியை உருவாக்க முயற்சித்த நேரத்தில்.. தங்களது தாய், தந்தைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்த முயற்சியை மேலும் கடினமாக்கும் வகையில் வித்தியாசமான மகிழ்ச்சிக் குரல்களை எழுப்பியபடியே ஓடி வந்தனர்.

    இந்த வகையான காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக்கொண்டிருக்க.. மற்றொரு புறத்தில், உழவு வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் தங்கள் கணவனின் வரவை எதிர்பார்த்து, அவர்களின் துணைவியர் ஆவலோடு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்..

    மொத்தத்தில் அந்த கிராமம், இரைதேடிச்சென்ற பறவைகள் திரும்பிய கூட்டைப் போல, கலகலப்புடன் காணப்பட்டது..

    இவ்வளவு சலசலப்புக்கும், மகிழ்ச்சிக்குரல்களுக்கும் இடையிலும், அந்த கிராமத்தில் இருந்த ஒரு வீட்டின் நிலை நம்மைக் கவர்கிறது.. 

    மூங்கில் படல் கொண்டு அடைத்த அந்த கூரை வீட்டின் வாசல், சாணம் தெளிக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. வீட்டின் வலது புறத்தில் ஒரு மல்லிகைச் செடி காலையில் பூத்த மல்லிகைப் பூவைச் சுமந்தபடி சோகமாய்க் கவிழ்ந்திருந்தது..

    மல்லிகைச் செடியின் சோகத்தை எப்படி நீக்குவது என்று தெரியாமல் அருகில் இருந்த ரோஜாவும், கனகாம்பரமும் தலைகுனிந்து யோசித்துக் கொண்டிருந்தன..

    அந்த வீட்டில் இருந்த கொய்யா மரமும், வாழைகளும், மாமரமும் கூட ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களது இலைகளை இப்படியும் அப்படியுமாய் மெதுவாக ஆட்டிக்கொண்டிருந்தன..

    இந்த வீட்டுக்கு என்னவாயிற்று? ஊரிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருக்கும் இந்த நேரத்தில், இந்த வீடு மட்டும், இவ்வளவு மௌனத்தை தன்னுள் ஏன் வைத்துள்ளது என்ற கேள்வி எழ.. மெல்ல அந்த வீட்டிற்குள் எட்டிப் பார்க்கிறோம்..

    அடடா.. அழகிய கண்களைக் கொண்ட அந்த பெண்ணின் முகத்தில் பெரும் கவலை குடிகொண்டிருந்தது.. அவளது அருகில் அமர்ந்திருந்த தோழியும் ரோஜா, கனகாம்பரம் செடி போல, என்ன செய்வது எனத் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்..

    அந்த வீட்டின் உரிமையாளராகிய அழகிய கண்களைக் கொண்ட அந்த பெண்ணின் நிலையைக் கண்டு, அந்த வீடே அமைதியில் மூழ்கி இருந்தது..

    தான் மேற்கொண்ட கடமையை முடிக்கும் பொருட்டு, பிரிந்து சென்ற தனது காதலனை எண்ணி அவள் வருந்துகிறாள்.. அவளது காதலனை நினைக்கும் தருணங்களில், மீன் போன்ற அவளது கண்களில் இருந்து, கடல் நீராக கண்ணீர் வெளியேறுகிறது..

    அவளது துன்பத்தைக் காண சகிக்காத தோழி அவளின் துயரத்தை நீக்கும் பொருட்டு ஆறுதல் கூறுகிறாள்..

    “அழுவதை நிறுத்தி விட்டு, முதலில் கண்ணீரைத் துடை..”

    “என்னால் முடியவில்லை.. அவருக்கு இந்நேரம் எனது நினைவுகள் மறந்தே போயிருக்கும்..” என்று கூறி மேலும் அழுகிறாள்..

    “நீ நினைப்பது போல ஒரு நாளும் நடக்காது.. அவர் உன்னை ஒரு நாளும் மறக்க மாட்டார். அப்படியே அவர் மறந்தாலும், அவர் சென்ற வழி இருக்கிறதே!! அந்த வழியில் அவர் காணும் காட்சிகள் உன்னை அவருக்கு நினைவுபடுத்தும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறாள் தோழி..

    தோழி கூறுவதை நம்ப முடியாமல் பார்த்த அந்த பெண், “அவர் சென்ற வழியில் பார்க்கும் காட்சிகள் என்னை எப்படி நியாபகப் படுத்தும்?” எனக் கேட்கிறாள்..

    மெலிதாகச் சிரித்த தோழி.. பின்வருமாறு கூறுகிறாள்..”அடி அசடே.. கூறுகிறேன் கேள்!.. உனது காதலன், பாலைவனத்தின் வழியே பயணம் செய்து கொண்டிருக்கிறார்.. அவர் செல்லும் பாதைகளில் நிறைய யானைகள் இருக்கும்..’

    “அங்கே இருக்கும் பெண் யானைகளுக்கு வெயில் தாங்க முடியாது, பசியால் வாட ஆரம்பித்து விடும்..”

    “அந்த நேரத்தில் ஆண் யானை என்ன செய்யும் தெரியுமா?” எனக் கேட்கிறாள் தோழி..

    ஒன்றும் புரியாத அந்த பெண், “ஆண் யானை என்ன செய்யும்?” என திருப்பிக் கேட்கிறாள்..

    “பசியால் வாடும் பெண் யானைக்கு, யா மரத்தின் மரப்பட்டையை பிளந்து ஊட்டும். இந்த கட்சிகளைக் காணும் உனது காதலனுக்கு கட்டாயம், உனது நினைவு திரும்ப வரும்.. விரைவில் அவர் திரும்புவார்.” என தோழி கூறுகிறாள்.

    தோழியின் ஆறுதலை ஏற்றுக்கொண்ட அழகிய கண்களை உடைய அந்த பெண், சோகத்தின் நடுவே மென்மையாகப் புன்னகைக்கிறாள்.. அவளது வீட்டின் வாசலில் இருந்த மல்லிகைச் செடியும், மெல்ல நிமிர்ந்து பார்க்கிறது.. அவளின் அந்த ஒரு புன்னகை மெல்ல மெல்ல அந்த வீட்டின் மரங்களுக்கும், செடிகளுக்கும் பரவ.. அவைகளும் மகிழ்ச்சியில் தங்களது இலைகளை அசைத்தன..

    இந்த மாறுதலைக் கண்ட தோழி பின்வரும் பாடலைப் பாடுகிறாள்..

    “நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்

    பிடி பசி களைஇய பெருந்தகை வேழம்

    மென் சினை யாஅம் பொளிக்கும்

    அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே!..

    சுமார் 1800 ஆண்டுகள் பழமையான இந்த பாடலில் காதலைக் குறிக்க யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.. தமிழகத்தில் யானைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றிருந்தன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. 

    இந்த பாடலை பெருங்கடுகோ எனப்படும் சங்க கால புலவர் பாடியுள்ளார். பெருங்கடுகோ குறித்த தகவல்கள், கரூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புகழூரில் கிடைத்த தமிழிக் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.

    இந்த கல்வெட்டின் மூலம் கோ ஆதன் செல்லிரும்பொறை எனப்படும் சேர மன்னனின் மகன்தான் இந்த பெருங்கடுகோ என தெரிய வருகிறது. இது போல தனக்கு வந்த கனவை தனது தோழியிடம் கூறும் ஆண்டாள், யானைகளை தனது பாடலில் உபயோகித்துள்ளார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....