Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிரா முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே

    மகாராஷ்டிரா முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முற்றுப்புள்ளியாக நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

    தற்போது எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கட்சியின் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

    தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியிருந்த தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின் பெயரில் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

    புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர்மற்றும் துணை முதல்வருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

    புதிதாக அமைந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டமானது ஜூலை 2,3ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய பிறகு செய்தியாளர்களை இருவரும் இணைந்தே சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,

    ‘சிவசேனாக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியை ஏற்பதாக இருந்தால், தனது பதவியினை ராஜினாமா செய்யத் தயார் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அவர் கூறியபடி சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே அடுத்த முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.’

    ‘பதவிக்கான போராட்டமல்ல இது, ஹிந்துத்துவ கொள்கையினைக் காப்பதற்கான போராட்டம். 2019ம் ஆண்டு பாஜகவும் சிவசேனாவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.’

    ‘ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது சிவசேனா. பால் தாக்கரே வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்ததால் கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டது.’ என்று கூறியுள்ளார்.

    மேற்கொண்டு செய்தியாளர்களின் பேசிய ஷிண்டே, 50 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக களமிறங்கினோம், மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே அரசுக்கு எதிரான போராட்டத்தினை நடத்தியனோம். தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்தார்.

    சர்ச்சைக்கான பின்னணி:

    சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்கிற கூட்டணியினை அமைத்திருந்தது. இந்த கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகக் கடந்த 2019ம் வருடம் பதவியேற்றார்.

    2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக-சிவசேனா கட்சிகளின் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும் சிவசேனா கட்சி கேட்ட சுழற்சி முறையிலான முதல்வர் பதவியினை பாஜக மறுத்தது மட்டுமல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார்.

    இதன்காரணமாக, அதிருப்தி அடைந்த சிவசேனாக் கட்சி பாஜகவிடமிருந்து பிரிந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியினை உருவாக்கியது.

    இந்த கூட்டணியின் சார்பில் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி ஏற்றார்.

    இரண்டாண்டுகள் கழிந்த நிலையில், சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவரும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கினர்.

    மேலும், அசாம் மாநிலம், கௌகாத்தியில் உள்ள விடுதியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தங்கி ஒரு வரமாக ஆளும் கட்சிக்கு எதிராக நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    பல கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சித் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. இதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

    மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மை இழந்ததை தொடர்ந்து,  எதிர்க்கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ளார்.

    மீண்டும் உயரும் கொரோனா தொற்று! கலங்கும் மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....