Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிசாமி?

    அடுத்த அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிசாமி?

    அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றது.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு அணி உருவாகி கட்சிக்கு ஒற்றைத்தலைமை அவசியம், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உருவான அணி ஒற்றைத்தலைமை என்பது கட்சிக்கு நல்லது அல்ல, ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சைக் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி வந்தது.

    பல மாதங்களாக நீடித்த இந்த பிரச்சனை, கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் வெளிப்படையான பேசுபொருளாக மாறியது. இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய 23 தீர்மானங்களையும் நிராகரித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஒற்றைத்தலைமை குறித்து விவாதித்த பிறகே மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என முழங்கினர்.

    ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கப்படும் என கூறினார்.

    இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது எனக் கூறியது. மேலும், பொதுக்குழு தொடர்பான விவகாரங்களுக்கு தனி நீதிபதியை நாடுமாறும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இதனை அடுத்து, அவசர வழக்காக எடுத்துக் கொள்ளுமாறு தனி நீதிபதியை  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நாடியுள்ளனர். இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, நாளை விசாரிப்பதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:

    கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழக பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது.

    கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது.

    மேலும், கழக இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெற இருக்கும் பொதுக்குழுவிலே தேர்வு செய்து அறிவித்தல்.

    பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

    இதற்கு முன்னதாக அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறிவருகிறது.

    மேலும், நீதிமன்ற தடை எதுவும் இல்லாத நிலையில், உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராய் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    இணையத்தில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த அழைப்பிதழ் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது.

    கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை  கொண்டுவர  அதிமுகவினர் இடையே கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் – நாளை விசாரணை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....