Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇலவச திட்டம் மிக தீவிரமான பிரச்சனை- உச்சநீதிமன்றம்

    இலவச திட்டம் மிக தீவிரமான பிரச்சனை- உச்சநீதிமன்றம்

    தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் சாத்தியமில்லாத இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் மிகத் தீவிரமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

    தேர்தலின்போது வாக்காளர்களை ஈர்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன. இவ்வாறு செய்வது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதோடு, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும். இப்படி செய்வது அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றதாகும். 

    அதனால், இலவசங்களை அறிவிப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டப் பிரிவு 14 உள்பட பல்வேறு அரசிலமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறிய நடவடிக்கை என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 

    மேலும், இவ்வாறு இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னத்தை முடக்குவது அல்லது கட்சிகளின் பதிவை ரத்து செய்வது அல்லது இரண்டு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 

    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீது பலதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

    இதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலவசங்கள் அறிவிப்பது என்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. ஒரு மாநிலத்தின் கொள்கை மற்றும் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்போது எடுக்கும் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாது’ என தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. 

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் வாதாடிய கூடுதல் தலைமை வழக்குரைஞர் நடராஜ், ‘இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தான் ஒழுங்குபடுத்த வேண்டும்’ எனக் கூறினார். 

    இந்நிலையில் இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) அன்று விசாரணைக்கு வந்தது. 

    இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய கருத்தை தெரிவிக்குமாறு, வேறொரு வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்திருந்த மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபிலிடம் நீதிபதிகள் கேட்டனர். 

    இதற்கு கபில் சிபில், இந்த விவகாரத்தில் நிதி ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நிதி ஆணையத்துக்கு அழைப்பு விடுக்கலாம். ஏனென்றால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. அப்படி மத்திய அரசு அறிவுறுத்தினால் பல அரசியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடும் என தெரிவித்தார். 

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் இலவச திட்ட வாக்குறுதிகள் அளிக்கும் விவகாரத்தை நிதி ஆணையத்திடம் ஒப்படைக்கும் யோசனை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

    தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் அமித் சர்மா, ‘இலவசங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தலில் இலவச அறிவிப்புத் திட்டங்கள் நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டுவர வேண்டும்’ என தெரிவித்தார். 

    அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் நடராஜ், ‘இந்த விவகாரம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது’ என தெரிவித்தார். 

    இதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ‘எங்களிடம் அதிகாரம் இல்லை எனக் கூறும் தேர்தல் ஆணையம், அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தராதது ஏன்? தேர்தலில் இலவச அறிவிப்பு என்பது மிக தீவிரமான பிரச்சனை என்பதை மத்திய அரசு நம்புகிறதா என கேட்கிறேன். 

    தேர்தலின்போது இலவச திட்டங்கள் அறிவிப்பை எப்படி தடுப்பது என்பது தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும். 

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

    அதன்பிறகு, இலவசங்களை வழங்கலாமா வேண்டாமா என நாங்கள் முடிவு செய்வோம்’ என தலைமை நீதிபதி தெரிவித்தார். 

    இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....