Monday, March 18, 2024
மேலும்
  Homeஅறிவியல்தமிழகத்திற்கு வருகை புரிந்த ஆர்க்டிக் ஸ்குவா: இதுதான் காரணமாம்!

  தமிழகத்திற்கு வருகை புரிந்த ஆர்க்டிக் ஸ்குவா: இதுதான் காரணமாம்!

  உலகில் உள்ள பறவைகள், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக இடம் விட்டு இடம் செல்வதை நாம் அறிவோம். பருவநிலையும் பறவைகளின் இடம் பெயர்தலுக்கு ஒரு காரணமாக உள்ளது. அரிதான பறவைகளை காண்பது சவால் நிறைந்தது மற்றும் ஆச்சரியம் வாய்ந்தது. அவ்வகையில், பூமியின் துருவப் பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஆர்க்டிக் ஸ்குவா என்ற அரிய பறவை முதன்முறையாக தமிழகத்தில் தென்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் உள்ள தனுஷ்கோடியில், கடந்த ஜூன் 15 ஆம் நாள் துருவப் பகுதிகளில் ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை காணப்பட்டது. இப்பறவை நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தூத்துக்குடி மற்றும் பழவேற்காட்டில் தென்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தனுஷ்கோடியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பறவை, இந்த ஆண்டு தான் முதன்முறையாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ஆர்க்டிக் ஸ்குவா

  மன்னார் வளைகுடா பகுதியில் வாழும் மற்றும் அங்கு வலசைப் போதலுக்கு வரும் பறவைகளைப் பற்றிய ஆய்வுகளை 2015 ஆம் ஆண்டு முதல் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, பறவைகள் கணக்கெடுப்புப் பணியை இவர்கள் செய்து வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும், பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், ஆச்சரியமூட்டும் வகையில் ஆர்க்டிக் ஸ்குவா தமிழகத்திற்கு வந்திருப்பது தெரிய வந்தது.

  ஆர்க்டிக் ஸ்குவா பறவை, பூமியின் வடதுருவ முனையில் உள்ள ஆர்க்டிக்கிலும், தென்துருவ முனையில் உள்ள அன்டார்டிக்காவிலும் இனப்பெருக்கம் செய்பவை. இவை தமிழ்நாட்டில் இதுவரை காணப்பட்டதில்லை. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தூத்துக்குடியிலும், மே மாதத்தில் சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு பகுதியிலும் காணப்பட்டது.

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜூ கூறுகையில், நாங்கள் மன்னார் வளைகுடாவில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஆர்க்டிக் ஸ்குவா வகையைச் சேர்ந்த ஒரு அரிய பறவையை பார்த்தோம். இவை பெரும்பாலும், கடலிலேயே வாழும் பறவை. ஒன்றிரண்டு வருடங்களில், இனப்பெருக்கம் செய்ய நிலப்பரப்பை நோக்கி அவ்வப்போது வரும். அதுவும் துருவப் பகுதிகளில் தான் நடக்கும். அதோடு, இப்பறவை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். துருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரே பறவை ஆர்க்டிக் ஸ்குவா பறவை தான் என பைஜூ கூறினார்.

  மழைப் பொழிவு மற்றும் புயல் ஆகியவற்றை பறவைகள் நமக்கு முன்பே கணிக்கும். அந்த நேரத்தை ஒட்டியும் பறவைகள் வலசை போகும். இதுபோக, சில சமயங்களில் வலசை போகும் சில பறவைகள், அவற்றின் பாதையிலிருந்து திசை மாறி வரக்கூடும். பழவேற்காடு, தனுஷ்கோடி பகுதிகளில் காணப்பட்ட ஆர்க்டிக் ஸ்குவா, அப்படி திசை மாறி வந்தவையாகக் கூட இருக்கலாம். இது தென்மேற்குப் பருவ காலம் என்பதால், மேற்கு கடல் பகுதி வழியாக அவை பறக்கும் போது, கடல் நீரோட்ட திசை மற்றும் புயல் போன்ற காரணங்களால் அவை திசைமாறி, தமிழ்நாடு பக்கமாக வந்திருக்க கூடும் என்றும் பைஜூ கூறினார்.

  சென்னை

  சென்னை அருகே காணப்பட்ட ஆர்க்டிக் ஸ்குவா பறவை 2 வாரங்களுக்கும் மேலாக இருந்தது. தூத்துக்குடியில் காணப்பட்ட பறவை ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தது. இப்பறவைகள், உணவுத் தேவைக்காக மற்ற கடற்காகங்கள் மற்றும் ஆலா போன்ற கடற்பறவைகளின் உணவை வழிமறித்துப் பிடுங்கிக் கொள்வதால், கடற்கொள்ளையன் என அழைக்கப்படுகிறது.

  சாலை மற்றும் இரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களால், கடற்கரையின் ஈரப்பதம் நிறைந்த மணல் பகுதிகள் அழிந்து வருகிறது. இதனால், கரையின் மேற்பரப்பு இறுகி, கல்லும் சரளை மண்ணுமாக மாறுகிறது.

  இதனால், கடலில் வாழும் சிறிய மெல்லுடலிகள், நண்டுகள் மற்றும் பூச்சி வகைகள் அழிந்து வருகின்றன. இவற்றின் அழிவால், வலசை வரும் பறவைகளின் உணவுக்கான ஆதாரம் அழிகிறது. சுற்றுலாப் பயணிகள் போடும் குப்பைகளால் இப்பகுதி அசுத்தம் அடைகிறது. இதனால், அடுத்த 10 வருடங்களில், தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பறவைகளைக் காண முடியுமா என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது என்றார் பைஜூ.

  ஒரு அகழியில் 8000 க்கும் மேற்பட்ட எலும்புகள் கண்டுபிடிப்பு; என்ன சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....