Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு? அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள்!

    பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு? அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள்!

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பருத்தி மற்றும் நூல் விலை அதிகரித்து வருகிறது. இதன் விலையைக் குறைக்க வேண்டும் என ஆடை சார்ந்த தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பருத்தி மற்றும் பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “பருத்தி நூல் விலை உயர்வு விசைத்தறி, கைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற ஆடை சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கிறது. இது தொடர் கதையாகி வரும் நிலையில், ஜவுளித் தொழில் துறையினருக்கு சிரமத்தை அளிக்கிறது.

    பருத்தி நூல் விலை உயர்வைக் குறைக்க, மத்திய அரசு வரிக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், விலை உயர்வு ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    பருத்தி நூல் விலை அதிகரிப்பு :

    கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பருத்தி நூல் விலை அதிகரித்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இறக்குமதியை ஊக்குவிக்க, பருத்தி நூல் மீதான 10% இறக்குமதி வரியை, கடந்த ஏப்ரல் மாதம் 14ம் நாள் மத்திய அரசு இரத்து செய்து உத்தரவிட்டது.

    அதனால், பருத்தி நூல் விலை நிச்சயம் குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த வாரம் திங்கட்கிழமை நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்திருப்பது ஜவுளித்துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. திங்கட்கிழமை உயர்த்தப்பட்ட விலையையும் சேர்த்து, 40 ஆம் எண் நூலின் விலை கிலோ ரூ.463.81 ஆக உயர்ந்துள்ளது.

    இது கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விலையான ரூ.226.16 விட, 102% அதிகம் ஆகும். 10 ஆம் எண், 16 ஆம் எண், 20 ஆம் எண், 25 ஆம் எண், 30 ஆம் எண், 34 ஆம் எண் உள்ளிட்ட அனைத்து வகையான நூல் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் உயர்ந்திருக்கிறது. இது துணித் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது.

    பின்னலாடைகள், ‌ஆயத்த ஆடைகள் மற்றும் விசைத்தறி உற்பத்திப் பொருட்கள் முதலியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இத்துறைகளின் மூலமாக நாட்டிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கப் பெறுகிறது. இந்த தொழில்கள் அனைத்தையும் சிதைத்து விடுவதாக அமைந்து விட்டது நூல் விலை உயர்வு.

    திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயத்த ஆடை தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்புக்கு முன்பாக பெறப்பட்ட ஆர்டர்களை, முன்னதாக ஒப்புக்கொண்ட விலையில் முடிக்க முடியாத நிலையில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளன.

    இந்நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்பட்டால், அது இத்தொழிலை நம்பியுள்ள துணைத் தொழில்களை மிகவும் கடுமையாக பாதிக்கும். அத்தகைய பாதிப்பு, மிகப்பெரிய அளவில் வேலை இழப்பையும், பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தும்.

    விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டால், அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, நூல் விலையை கட்டுப்படுத்தி, ஜவுளித் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உண்டு.

    பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நூல் இழைகளை முழுமையாக சந்தைக்கு கொண்டு வர முடியும். அதோடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தியைக் கொண்டு வந்தால், பதுக்கிய நூல்களை வெளிக்கொண்டு வருவதை சாதிக்க முடியும். ஆகவே, பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், பருத்தி மற்றும் பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்தும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    திமுக திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார் – பரபரப்பில் அரசியல் களம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....