Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் ஆறாத வடுவாக மாறிய ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்; பலியான 3000 பேர்! - நடந்தது...

    இந்தியாவின் ஆறாத வடுவாக மாறிய ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்; பலியான 3000 பேர்! – நடந்தது என்ன?

    1984ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்காக மிகப்பெரிய ராணுவ படையெடுப்பு அமிர்தசரஸ் கோவிலில் நடத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் கோவிலில் நடந்த இந்த படையெடுப்பு பின்னாளில் நடந்த ஒரு முக்கிய நிகழ்விற்கு மூலகாரணமாக இருந்தது.

    ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று அழைக்கப்பட்ட இந்த ராணுவ படையெடுப்பானது ஏன் நிகழ்ந்தது? யார் இதற்கு கரணம்? பார்க்கலாம் வாருங்கள்.

    காலிஸ்தான் இயக்கம்..

    காலிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இயக்கமானது சீக்கியர்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்று போராடிய குழுவாக இருந்தது. இவர்கள் பஞ்சாப் பகுதிகளில் பரவி இருந்தனர்.

    1940களில் தொடங்கப்பட்ட இயக்கம் அந்த அளவிற்கு பிரபலமாக இல்லாமல் இருந்தாலும், 1970களில் மிகப் பிரபலமாய் அறியப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்னும் நபர்.  இவர் டம்டமி தக்ஸல் எனப்படும் சீக்கிய கல்வி அமைப்பின் தலைவராக இருந்தவர்.

    பிந்தரன்வாலே, சீக்கிய இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராய் இருந்தார். சீக்கியர்களின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு தெரிவித்த பிந்தரன்வாலே, இளைஞர்கள் மற்றும் முதியோர்களை சீக்கிய மதத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் தனி மாநிலம் கோரிக்கையினை வலியுறுத்தி, பிந்தரன்வாலே மற்றும் காலிஸ்தான் இயக்கத்தினர் அமிர்தசரஸ் கோவிலினை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பிந்தரன்வாலே மற்றும் காலிஸ்தான் இயக்கத்தினரை அமிர்தசரஸ் கோவிலில் இருந்து வெளியேற்றவும், அந்த பகுதியினை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அப்போதைய இந்தியப் பிரதமராய் இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.

    நிகழ்வுகள்..

    ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. முதல் பகுதி ஆபரேஷன் மெட்டல் எனவும் இரண்டாவது பகுதி ஆபரேஷன் ஷாப் எனவும் அழைக்கப்பட்டது.

    ஆபரேஷன் மெட்டல் அமிர்தசரஸ் கோவிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும், ஆபரேஷன் ஷாப் பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகப்படும் வகையில் இருக்கும் நபர்களைக் கைது செய்வதாகவும் இருந்தது. இதற்காக இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

    இந்த ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கைகளும் பத்து நாட்கள் நடைபெற்றது. அந்த பத்து நாட்களிலும் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்:

    ஜூன் 1, 1984: அமிர்தசரஸ் கோவிலுள்ள குரு ராம் தாஸ் லாங்கர் என்ற இடம் இந்திய ராணுவத்தினரால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

    ஜூன் 2,1984: கிட்டத்தட்ட ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்திய ராணுவப் படையானது பஞ்சாப் மாநிலத்தினுள் புகுந்தது. பத்திரிகை நிருபர்கள் பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைவது புறக்கணிக்கப்பட்டது. அமிர்தசரஸின் பல பகுதிகளில் மின்சாரமும், தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

    ஜூன் 3, 1984: அமிர்தசரஸ் கோவிலின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு போடப்பட்டது.

    ஜூன் 4, 1984: அமிர்தசரஸ் கோவிலுக்குள் இருந்த ராம்கர்ஹியா பங்கஸ் என்ற பகுதி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. கோவிலுக்கு உள்ளே இருந்த சீக்கிய போராளிகளுடன் யுத்தம் நடந்தது.

    குருச்சந்திரன் சிங் டொஹரா என்ற அலுவலர் பிந்தரன்வாலேயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    ஜூன் 5, 1984: கோவிலின் பல பகுதிகளிலும் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர்.

    ஜூன் 6, 1984: அகல் தகத் என்னும் பகுதி இந்திய ராணுவத்தினரால் அழிக்கப்பட்டது. இங்கு நடந்த போராட்டத்தில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார்.

    ஜூன் 7, 1984: அமிர்தசரஸ் பகுதி இந்திய ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    பத்து நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த நடவடிக்கைகளில் பத்திரிக்கையாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.

    பஞ்சாப் மாநிலமே இந்தியாவிலிருந்து தனித்து விடப்பட்ட நிலையில் இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு மாநிலத்திற்கு வெளியே சென்று விடப்பட்டனர்.

    ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைகள் இந்திய மக்களின் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தினையும், இந்திய அரசின் மீது கடுமையான கண்டனங்களையும் வைக்க இந்த ஒரு நிகழ்வு காரணமாக அமைந்தது.

    பின்விளைவுகள்..

    இந்த நடவடிக்கைகள் நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, சரியாக அக்டோபர் மாதம் 31ம் தேதி 1984ம் வருடம் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மொத்தமாக 33 சுற்று குண்டுகள் அவர் மீது பொழிந்தன. சத்வான்ட் சிங் மற்றும் பேன்ட் சிங் என்ற அந்த இரண்டு பாதுகாவலர்களும் சீக்கிய மதத்தினை சேர்ந்தவர்கள்.

    ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையினை இந்திரா காந்தி மேற்கொண்டது தான் இந்த கொலைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.

    நாடெங்கும் நடைபெற்ற கலவரங்கள்..

    இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றன. சில நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

    டெல்லியினைச் சுற்றியுள்ள சுல்தான் புரி, மங்கோல்புரி, திரிலோக்புரி போன்ற இடங்களில் அதிக அளவு கலவரங்கள் நடைபெற்றது. கலவரக்காரர்கள் இரும்பு ஆயுதங்களையும், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களையும் உபயோகப்படுத்தினர்.

    கண்ணில் தென்பட்ட அனைத்து சீக்கியர்களை தாக்கிய கலவரக்காரர்கள், அவர்கள் குடியிருந்த வீடுகள், கடைகள் என அனைத்தினையும் தீவைத்துக் கொளுத்தினர். பேருந்துகள், தொடர்வண்டிகளை நிறுத்திய கலவரக்காரர்கள் அதனுள் இருந்த சீக்கியர்களை வெளியில் தள்ளி உயிருடன் தீவைத்துக் கொன்றனர்.

    இந்த கலவரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கு பெற்றதாக கூறப்பட்டது. கலவரக்காரர்களுக்குத் தேவையான பணமும், ஆயுதங்களும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து வந்ததாக நம்பப்பட்டது.

    மேலும், கலவரம் நடந்த இடங்களில் இருந்த காவலர்கள் எந்த விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுப்படாமல் இருந்ததாகவும், இந்த கலவரம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் கருதப்பட்டது.

    இந்த சம்பவங்களுக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் 23ம் தேதி இந்தியாவிலிருந்துது சென்ற விமானம் ஒன்று நாடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த கோர சம்பவத்தில் 329 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் கனடா நாட்டினைச் சேர்ந்தவர்கள்.

    இந்த சம்பவம் கனடா நாட்டின் வரலாற்றில் நடந்த மாபெரும் கொலைச் சம்பவமாக இடம்பெற்றது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த சம்பவம் பார்க்கப்பட்டது.

    இந்தர்ஜித் சிங் ரியாத் எனப்படும் கனடா நாட்டினைச் சேர்ந்தவர் மட்டுமே இந்த விபத்து சம்பவமாக குற்றவாளியாக்கப்பட்டார். இதற்குப் பிறகு 1980களின் பிற்பகுதியில் ஆபரேஷன் பிளாக் தண்டர் என்னும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமிர்தசரஸ் பகுதியில் மீதமிருந்த சீக்கிய நடவடிக்கைகளை துடைத்தெறிய மேற்கொள்ளப்பட்டது.

    மிகவும் சிறிய பாதிப்பினை மட்டுமே ஏற்படுத்திய இந்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்றாக முடிந்தது. இந்த நடவடிக்கைகளின் போது பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று..

    ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து இன்றுடன் 38 வருடங்கள் ஆகின்றது. எனினும் அந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் மனதிலும், இந்திய வரலாற்றிலும் ஒரு நீங்காத வடுவாய் மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதமாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? – எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....