Sunday, March 24, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரை2022 மழையும்... 2015 வெள்ளமும்...? அதிர்ச்சி கலந்த பல ஒற்றுமைகள்..!

    2022 மழையும்… 2015 வெள்ளமும்…? அதிர்ச்சி கலந்த பல ஒற்றுமைகள்..!

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, சாலைகளில் நீர் தேக்கம், பேருந்துகளுக்குள் மழை, போக்குவரத்துக்கு இடையூறு என மழை வந்தால் நிகழும் சகலமும் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு மழை காலத்தின் போதும் இந்த முறை வெள்ளம் வந்து விடுமோ… எங்கு நம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு வந்து விடுமோ… என்ற அச்சம் ஒவ்வொரு சென்னை வாசிகளுக்கும் எப்போதுமே இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

    அதற்கு ஏற்றார் போலவே இந்தமுறை பருவமழை துவங்கியது முதலே நல்ல மழை பொழிவு இருந்து வருவதோடு சமீபத்திய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என மாறிமாறி மழைக்கான அலர்ட்டுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதனால் பருவமழையை ரசித்து பார்க்க வேண்டிய பொதுமக்கள் இன்னல்களாக பார்க்கும் காலம் என்பது தற்போது வந்துவிட்டது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மக்களின் பார்வை என்பது எப்போதுமே அவ்வாறாக தான் உள்ளது.

    அந்த அச்சத்திற்கு வலுவான காரணமும் இருக்கிறது. அந்த காரணத்தை அறிய, நாம் காலச்சக்கரத்தை 2015-ஆம் ஆண்டின் இறுதிக்கு சுற்ற வேண்டும். ஏனெனில் அந்த ஆண்டு வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 53% அதிகமாக பெய்து அதனால் ஏற்பட்ட பாதிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் .சொல்லப்போனால் நவம்பரின் துவக்கத்தில் சாதாரண மழையாக தான் அன்றைய வடகிழக்கு பருவமழை துவங்கியது… ஆனால் பின்பு தொடர் மழை, கனமழை, அதிகனமழை என அம்மாதம் முழுதும் பெய்த மழைக்கு நவம்பர் 25ம் தேதிக்கு முன்பாகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்தன.

    அது மட்டுமா..? நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை விடாமல் கொட்டிய மழைக்கு சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக இருந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி உடையும் நிலையை அடைய. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு, கூவம் ஆறுகளை தெறிக்கவிட்டு ஓடின. இதனால் ஆற்றங்கரையோர மக்கள் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்தனர்.

    மேலும் சென்னையில் சாலைகள் எல்லாம் மழை நீரில் மூழ்கி, போக்குவரத்து கிட்டத்தட்ட முழு பாதிப்பைச் சந்தித்து இருந்தது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து முடங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் குடியேறினர். கடலில் ஓட வேண்டிய படகுகள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சென்னை தெரு வீதிகளில் உலா வந்தன. இது மட்டுமா மின்சார துண்டிப்பு, மொட்டைமாடிகளில் தஞ்சம், உயிரை காக்க பறந்து வந்த உணவு பொட்டலங்களை ஓடி ஓடி பிடித்த காட்சிகள் என நெஞ்சை பதற வைக்கும் பல நிகழ்வுகள் அன்றைய காலகட்டத்தில் நடந்ததோடு. தெரிந்தது பாதி தெரியாதது எத்தனையோ என்பது போல எண்ணிலடங்கா பல
    உயிர்களையும் காவு வாங்கி சென்றது அன்றைய வெள்ளம்.

    சரி ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை இப்போது எதற்கு மூச்சுப்பிடிக்க நீ பேசுகிறாய் என நீங்கள் யோசிக்கலாம் . வேறு சிலரோ ”ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த கதைய தானய்யா சொல்லுவீங்க” என சலித்த படியும் பலர் கேள்விகளை கேட்கலாம். ஆனால் மற்ற மழை காலங்களுக்கும் இந்த வருடம் நாம் சந்தித்து வரும் மழை காலத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் பயணமும், இந்த ஆண்டு நாம் சந்தித்து வரும் வடகிழக்கு பருவ மழையின் நிலவரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே நடந்து வருவது தான் ஆச்சரியமான உண்மை.

    அது எவ்வாறு எனில் கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட தாமதமாக துவங்கியது. அதே போல் தான் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே துவங்கியது. மேலும் 2015-ஆம் ஆண்டும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் தான் இந்த ஆண்டும் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே அக்டோபர் 29-ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

    இது தவிர அதே மாதிரியான மழை துவக்கம், அதே நவம்பர் 9 தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலம் தமிழக கரையோரம் நெருங்கி தொடர் கன மழை… இனி வரும் காலங்களிலும் 2015-ஆம் ஆண்டில் புயல் சின்னங்கள் எதுவும் உருவாகாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாளும், மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி வாயிலாகவே தொடர்ந்து கனமழை வந்து போலவே. தற்போதும் புயல்சின்னங்கள் எதுவும் உருவாகாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாகவே தொடர்ந்து மழை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு போன்ற கணிப்புகள்… மீண்டும் மற்றொரு 2015 ஆ இந்த வருடம் ?
    என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    ஆனால் மீண்டும் ஒரு 2015 என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதே நிதர்சனமான உண்மை. தீயைத் தீண்டி காயம் பெற்றால் அந்த அனுபவம் நம்மிடத்தில் எப்போதுமே இருக்கும் மீண்டும் தீயைத் தீண்ட மனம் விரும்பாது. அதுபோலவேதான், ஒரு முறை வெள்ள வடிவில் காட்டுத்தீக்குள் பொதுமக்களாகிய நாமும், நம்மை ஆண்ட அரசும் சென்றுவிட்டது. இதனால், மீண்டும் அப்படியொரு நிலை வராமலிருக்க அரசு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இயற்கையையும், காலத்தையும் என்றுமே கணிக்க முடியாது. எனவே அது போகிற போக்கில் நாமும் பயணித்து ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதை உணர்ந்து பொதுமக்களாகிய நாமும் இனி கவனமுடன் செயல்படுவோம். கூடிய விரைவில் மழை ரசிப்பதற்கே என்ற நிலையை மீட்க முயலுவோம்.. இயற்கையோடு இயைந்து அந்த இயற்கையே நன்கு உணர்ந்து வாழ பழகுவோம்.

     

    இதையும் படிங்கபோலி கணக்குகளுக்கும் ‘ப்ளூ டிக்’ ! எலான் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டரில் குளறுபடி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....