Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு – அரசு அமைதி காக்கிறது, மக்கள் தூங்குகிறார்களா?

  வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு – அரசு அமைதி காக்கிறது, மக்கள் தூங்குகிறார்களா?

  தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால், ஒரு நடுத்தர குடும்பம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சராசரியாக மாதத்திற்கு 5000 ரூபாய் வரையில் இயல்பு நிலையில் இருந்து கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தரவுகளை விலக்கிவிட்டு பார்த்தாலும் கூட, இந்த எரிபொருள் விலை உயர்வால் இயல்பான செலவுகளோடு குறைந்தது 2000 ரூபாயை நாம் கூடுதலாக செலவழிக்கிறோம். மக்கள் இந்த செலவீனத்தை புரிந்துக்கொண்டதாகவே தெரியவில்லை. 

  ஆம்! ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்தால் கூட, கொரோனா பரவலையும் தாண்டி எரிபொருளின் விலை ஏற்றத்திற்கு மக்கள் கொதித்தெழுந்தனர். பெட்ரோல், டீசல் விலைகள் குறித்து சாலையில் இறங்கி மக்கள் போராடிய வரலாறு தமிழ் மண்ணில் உண்டு. 

  ஆனால், தற்போதோ மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வீரியத்தோடு குரல் கொடுத்ததாக தெரியவில்லை. முன்பு எப்போதையும் விட தற்போதுதான் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகிறது ஆயினும் மக்கள் விலையேற்றத்தை கடந்து போகின்றனரே தவிர, வலுவான கேள்விகளை அவர்கள்  முன்வைக்கவே இல்லை. தற்போதைய சூழலில், மக்களின் வீரியம் மிக்க சிந்தனைகளில், கேள்விக்குறி மட்டுமே மிஞ்சுகிறது.

  மக்களிடத்தில் கேள்விக்குறிகள் மிஞ்சுவதில், சிறிதளவேனும் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், அரசியல் கட்சிகளின் அமைதி நிலையை என்னவென்று குறிப்பிட? கடந்த ஆண்டு,  அரசியல்வாதிகள் கருப்பு கொடிகள் பிடித்தனர். குறிப்பாக ஆளுங்கட்சியாக இப்போது திகழக்கூடிய திராவிட முன்னேற்ற கட்சி அப்போதைய விலை ஏற்றத்துக்கு தெரிவித்த எதிர்ப்புகளின் பட்டியல் ஏராளம்.

  ஆனால், ஆளுங்கட்சியாக மாறியப்பின்பு எத்தனை முறை கருப்புக்கொடி தூக்கினார்கள் என்று எவரிடத்திலும் கணக்கு இல்லை. காரணம், கருப்புக்கொடி கணக்கு தொடங்கப்படவே இல்லை. மக்களாக முன்வந்து கேள்வி கேட்டாலும், மத்திய அரசை கைக்காட்டிவிட்டு ஆளுங்கட்சி அமர்ந்துக்கொள்கிறது. ஆளுங்கட்சிதான் இப்படியென்றால் கேள்விகள் கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் தங்கள் கேள்விகளை அறிக்கை முறையிலேயே கேட்கின்றனர். அதற்கும் ஆளுங்கட்சியிடம் இருந்து பதில்கள் ஏதும் இல்லை. 

  மத்திய அரசை சிலர் கேள்வி கேட்டாலும், மத்திய அரசானது இரஷ்யா – உக்ரைன் போரை காரணம் காட்டிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக ஏதொவொரு காரணத்தை கைகாட்டிய படியே மக்களும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் சரி விலையேற்றத்தை கண்டுக்கொள்ளாமல் கடந்தபடியே இருக்கின்றனர். 

  உண்மையை நோக்கினால், இரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல.

  இந்த அநியாயத்தை எவரும் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. மக்களாகிய நாம் முதலில் விழித்துக்கொண்டால்தான், கேள்விகள் கேட்டால்தான் அரசு கொஞ்சமேனும் செவி சாய்க்கும். நாமோ அமைதியாக இருப்பதால், ‘மக்களுக்கு இந்த விலை உயர்வால் பிரச்சினை இல்லை’ என்கிற மேலோட்ட கண்ணோட்டத்தில் அரசு இந்த விலை உயர்வை பார்த்து வருகிறது. 

  மக்கள் எதிர்த்து பேசுதல், கேள்வி கேட்டல், போராடுதல் போன்ற ஆக்கப்பூர்வமான குணநலன்களை இழந்துவருவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாதகமானது.

  மக்கள் விழித்தால்தான், தூங்கிக்கொண்டிருக்கும் ஆளும் அரசுகளும் விழிக்கும்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....