Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரை1956 இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து : 66 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும்...

    1956 இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து : 66 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும் அழியாத தழும்பு…

    1956-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நீராவி என்ஜின் உடன் இயங்கிய 13 பெட்டிகளை கொண்ட அந்த ரயில், 800 பயணிகளுடன் தூத்துக்குடி நோக்கி கிளம்பியது. மழை கொட்டென கொட்டியது. அந்த மழையிலும் கரும்புகையை வெளிப்படுத்திக்கொண்டு, ஒரு பெரிய மலைப்பாம்பு வளைந்து நெளிந்து செல்வதைப் போல, அந்த ரயில் சென்றுக்கொண்டிருந்தது. 

    நல்ல மழையில் உறங்கியபடி சிலரும், உறங்க முடியாமல் பலரும், மழைய கண்டபடி சிலரும், மழையை சபித்தபடி சிலரும், மழையை கண்டுக்கொள்ளாதபடி சிலருமென பலவகை பயணிகளும் அந்த ரயிலில் இருந்தனர். இப்போது மட்டுமல்ல, அப்போதும் பொதுப்பெட்டிகளில் ரயிலில் கூட்டம் அள்ளும். அந்த ரயிலிலும் அப்படியாகத்தான் இருந்தது. பொதுப்பெட்டிகளில் இருந்த பெரும்பாலோனோர் உறங்காமலும், முதல் பெட்டியில் இருந்த பெரும்பாலோனார் உறங்கியும் இருந்தனர்.  

    தூத்துக்குடி நோக்கி சென்றுக்கொண்டிருந்த இந்த ரயிலில், விருதாச்சலம் சென்றதும் கடைசி பெட்டியை கழற்றப்படுவது வழக்கமாக இருந்தது. காரணம், அது சேலத்திற்கு செல்லும் ரயிலுடன் இணைக்கப்படும். அன்றும், அவ்வாறே அந்த கடைசி பெட்டி, சேலம்‌ செல்லும்‌ இணைப்பு ரயிலில்‌ மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது.

    இதன் பின்பு, மீதமுள்ள 12 பெட்டிகளுடன் அந்த ரயில் தன் தூத்துக்குடி நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. மழை இப்போதும் அதிகமாகவே பெய்துக்கொண்டிருந்தது. நவம்பர் 22-ஆம் ஆண்டு அதிகாலை 5.30 மணிக்கு முன் அரியலூரைத் தாண்டி அந்த ரயில் திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அரியலூர் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலத்தை பேய் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. 

    இந்தப் பாலத்தின் வழியாகத்தான், அந்த ரயில் செல்லத் துவங்கியது. வெள்ளத்தின் வீரியமும், அதனால் பாதிக்கப்பட்ட தூண்கள் குறித்தும் போதிய வெளிச்சமின்மையால் ரயில் ஓட்டுநர் உட்பட ஊழியர்கள் யாருக்கும் புலப்படவில்லை.  ஆதலால், ரயில் அந்த பாலத்தில் சென்றது. அப்போது, 

    ரயில்‌ என்ஜின்‌ பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம்‌ ஆட்டம்‌ கண்டது. ரயிலின் பாரம் தாங்காமல் பாலம், பெருக்கெடுத்துச் சென்றுக்கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியது. 

    இதனால், ரயில் பெட்டிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. பயணிகளிடமிருந்து அபாய குரல்கள் வந்தன. எவ்வளவு கத்தியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாருமில்லை. அதற்குள், ரயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்திருந்தது. இந்த 7 பெட்டிகளில், முதல் பெட்டி பெண்களுக்கான பெட்டியாகும். இப்பெட்டியில் பயணித்த குழந்தைகள், பெண்கள் அனைவரும் வெள்ளத்தில் நீருக்கடியில் சிக்கி தங்களின் உயிர்களை இழந்தனர். 

    இச்சம்பவம் குறித்து தகவல்கள் அனுப்பப்பட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் சில நிமிடங்களில் நிகழ்ந்துவிட்டன. ஏறத்தாழ, 250 பேர் இந்த விபத்தில் மாண்டனர். பலர் காயங்களோடு தப்பினர். இரு நாட்களுக்கு மேல் மீட்பு பணிகள் நடைபெற்றும், மீட்பு பணியினரால் 170-க்கும் குறைவான சடலங்களை மட்டுமே சரிவர அவர்களால் மீட்க முடிந்தது. சில பெட்டிகள் மண்ணுக்குள் புதைந்ததால் தண்ணீர் வடிந்த பிறகு அதே இடத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சில உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. 

    இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடே அதிர்ச்சியுற்றது என்று சொன்னால் மிகையாகாது. உயிரிழந்தோர்களின் உறவினர்களின் கதறல்கள், உறவினர் அல்லாதோரையும் பாதித்தது. அழ வைத்தது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற கொடுஞ்சம்பவங்களில் ஒன்றாக இந்த ரயில் விபத்து பதிவானது. இந்த கொடூர விபத்துக்கு பொறுப்பேற்று, 

    அப்போதையை ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை தனது ராஜிநாமா செய்தார். இன்றுடன், இந்த கொடூர விபத்து நிகழ்ந்து 66 ஆண்டுகளாகிறது. தமிழகத்தின் ஆறாத வடுக்களில் முக்கியமான வடுவாக இந்த ரயில்வே விபத்து இருக்கிறது. 

    2022 மழையும்… 2015 வெள்ளமும்…? அதிர்ச்சி கலந்த பல ஒற்றுமைகள்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....