Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்மாடித்தோட்டத்தில் கத்திரிக்காய் சாகுபடிக்கான வழிமுறைகள் இதோ!

    மாடித்தோட்டத்தில் கத்திரிக்காய் சாகுபடிக்கான வழிமுறைகள் இதோ!

    கத்தரிக்காய்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உண்டு. விதையோடு சதைப்பகுதியில், ஆன்தோசையனின் மற்றும் ஃப்ளேவோனாய்டட்ஸ் என்ற, இரண்டாம் நிலை வேதிக் கூறுகள் இருக்கின்றன. இத்தகைய வேதிக்கூறுகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை! கத்தரிக்காய் தோலில் பொட்டசியம் மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.

    மனித உடலில் புற்றுநோய் காரணமாக இருக்கும், ஃபிரீரேடிக்கிள் என்ற திசுக்களை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல், கத்தரிக்காயில் உள்ள, பிளோலிக் அமிலத்தில் உள்ளது! இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கத்தரிக்காய் செடியை வளர்ப்பது ரொம்பவும் சவாலான விஷயம்தான்! ஆனால் இந்த பதிவில் கூறியிருக்கும் விஷயங்களை நீங்கள் செய்தாலே போதும்! கத்தரிக்காய் செடியை நாமும் மாடித்தோட்டம், அல்லது வீட்டு தோட்டத்தில், மிகச்சுலபமாக வளர்த்து விடலாம்.

    பருவம் பார்த்து பயிர்செய்:

    மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம். டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை! இருந்தாலும் ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறது. எனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச்சிறந்தது.

    கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான். அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.

    விதை விதைத்தல்:

    விதைகளை நர்சரிகளிலிருந்தோ, கடைகளில் நல்ல முற்றின கத்தரிக்காயை வாங்கி, அதை பழுக்க வைத்து, அதிலிருந்து விதைகளை எடுத்து வெய்யிலில் வைத்து அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம். விதைகள் தயாரானதும் நேரடியாக அவற்றை வளர்க்கும் கொள்கலன்களிலேயே விதைக்கலாம். என்றாலும் இதனை முதலில் விதை தட்டில்/ நாற்று தட்டில் விதைத்து பின் நாற்றை கொள்கலன்களில் மாற்றலாம்.

    விதை தட்டை/கப்பை அதற்கான கலவைகளால் நிரப்பி மெதுவாக தட்டி மண் கலவையை சமப்படுத்தி கொள்ளுங்கள். அந்த தட்டினில் 3-4 கத்தரி விதைகளை ஒரு கப்பில் வைத்து, அதன் மேல் 1-2 அங்குலம் மண் கலவையை இட்டு அதையும் சமப்படுத்திக்கொள்ளவும். பின் மண் கலவையை தொந்தரவு செய்யாதவாறு கொஞ்சமாய் நீர் ஊற்றுங்கள். பின் அந்த தட்டினை/கப்பினை, பிளாஸ்டிக் ஷீட்டினை வைத்து மூடி அதை வெதுவெதுப்பான இடத்தில் வையுங்கள்.

    6-7 நாட்களுக்குள் விதைகள் முளைத்து, செடி வெளியே வர ஆரம்பிக்கும்.முதல் விதை முளைத்ததும் பிளாஸ்டிக் ஷீட்டினை எடுத்து விட்டு, குறைந்த பட்சம் 4-6 மணி நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் தட்டினை/கப்பினை வையுங்கள்.இந்த நிலையில் இவற்றில் வேர் எளிதாக அழுகி விடும். அழுகலை தடுக்க நாற்றுகளுக்கு அமிர்த-கரைசலை வாரம் ஒரு முறை ஊற்றலாம்.

    தொட்டிக்கு நாற்றுகளை மாற்றுவது:

    பத்திரமாக நாற்றினை இடமாற்றம் செய்ய தட்டிலிருந்து நாற்றினை எடுத்து, கொள்கலன்கலனுக்கு நடுவில் அதனை நடுங்கள்.தொட்டியில் நீர் ஊற்றி நேரடி சூரிய வெளிச்சத்தில் தொட்டி/கொள்கலனை வையுங்கள்.

    7-10 நாட்களுக்கு பின்னர் நாற்றுகள் புது மண்ணிற்கு பழகியதும் பலவீனமான நாற்றுகளை வெட்டி விடுங்கள்.ஒரு தொட்டிக்கு ஒரு நாற்றினை மட்டும் விட்டுவிட்டு மற்றதை நறுக்கி விடுங்கள். 15-30லி கொள்கலன் ஒன்றில் ஒரு செடி வளர்ப்பது நல்ல விளைச்சலுக்கு உதவும். உங்களிடம் பெரிய கொள்கலன் உள்ளது என்றால், இரண்டு செடிகளை கூட வைக்கலாம். ஆனால், இரண்டு செடிகளுக்கும் இடையில் 2-அடி இடைவெளி அவசியம் வேண்டும்.

    பழைய பழுத்த இலைகளையும், மண்ணை தொடும் இலைகளையும் வெட்டி விடுதல் நல்லது. இது தொற்றுகளை தவிர்க்க உதவும்.

    உரமிடுதல்:

    10-15 நாட்களுக்கு ஒரு முறை அமிர்த-கரைசலோ வேறு எதாவது அங்கக, திரவ உரங்களையோ இட்டு, மண்னை வளமாய் வைத்துக்கொள்ளுங்கள். பூ பூக்கும் போது 7 நாட்களுக்கு ஒரு முறையென உரமிடும் சுழற்சியினை அதிகரியுங்கள். நாம் கத்தரி செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதால் அவற்றிற்கு தொடர்ந்து ஊட்டசத்து அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு அமிர்த கரைசலுடன் அடிக்கடி கலப்புரம்(Compost) இடுவது உதவும். இதற்கு மண்புழு உரம் சிறந்தது. மாதம் ஒரு முறை இப்படி தொட்டியிலிருக்கும் மேல்தட்டு மண்ணை எடுத்துவிட்டு அதற்கு பதில் அங்கே உரமிட்டு வந்தால் செடி ஆரோக்கியமாக இருக்கும்.

    இப்படி உரமிடும் போது பூ பூத்து காய்க்கும் காலத்தில் அதிகம் நைட்ரஜன் நிறைந்த உரங்களை தவிர்ப்பது நல்லது. இது காயை விட்டு விட்டு, இலைகளுக்கு ஊட்டசத்து அளித்து, செடி இன்னும் அடர்த்தியாக புதர் போல வளரவே உதவும்.

    கத்திரிக்காய் செடியினை பாதிக்கும் பூச்சிகள்:

    கத்தரிச்செடியில் முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போது, தண்டு துளைப்பான், கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும். அப்பொழுது வேப்ப எண்ணெயுடன், இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும்.

    கத்தரிக்காய் செடிகளில் வரும் தண்டுப்புழு, காய்த்துளைப்பான், தண்டுதுளைப்பான், தத்துப் பூச்சிகள் இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதினால் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறியில் உள்ள பூச்சிகளை உடனுக்குடன் எடுத்து அழித்து விடுவது நல்லது.

    அசுஉனி, இலைப்பேன், மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும். இதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கரைசல் மிகவும் நல்லது. அசுஉனி பூச்சிகளுக்கு, சாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.

    விதை சேகரிப்பு :

    கத்தரிச்செடியில் ஒருமுறை விளைச்சல் எடுக்கும் போதே, கத்திரிக்காய் செடியிலிருந்து இருந்து விதைகளை சேமித்து கொள்ளலாம். அடுத்த சீசனுக்கு விதைக்க, கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்கு எந்த வகையினைச் சார்ந்த, கத்தரிக்காய் மிகவும் பிடிக்கிறதோ, அதனுடைய விதைகளை சேகரித்து வைத்து ஒவ்வொரு சீசனுக்கும், அதை வைத்து பயன்பெறலாம்.

    கத்தரிக்காய் விதைகளை சேமிக்கும் போது, கவனமாக சேமிக்க வேண்டும்., இல்லையென்றால் விதைகளை சாப்பிடும் வண்டுகள் வந்து, கத்தரிக்காய் விதைகளை சேதப்படுத்தி விடும் கத்தரிக்காய் விதைகளை சாம்பல் சேர்த்து, சேமித்து வைப்பதினால் விதைகளை சாப்பிடும் பூச்சிகளின் தொல்லையில் இருந்து, கத்தரிக்காய் விதைகளை சுலபமாக பாதுகாக்கலாம்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....