Saturday, April 27, 2024
மேலும்
    Homeஆன்மிகம்திருவாசகம்: சிவபுராணம் - பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 2

    திருவாசகம்: சிவபுராணம் – பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 2

    திருவாசகம்: சிவபுராணம் – பாடல் மற்றும் விளக்கம்

    பாடல் 3:

    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

    பொருள்:

    எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
    எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
    ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
    சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
    அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
    மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
    அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

    குறிப்பு:
    1. தேசு – ஒளி

    பாடல் 4:

    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

    பொருள்:

    அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
    சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக்கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
    முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

    குறிப்பு:

    1. “சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம் விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து, “இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.”

    பாடல் 5:

    கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

    பொருள்:

    நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம், பூமி மற்றும் மீதி உள்ள யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

    பாடல் 6:

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

    பொருள்:

    புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
    பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
    கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
    இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
    எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!

    குறிப்பு:
    1. விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.

    திருவாசகம்: சிவபுராணம் – பாடல் விளக்கம்- பாகம் 1

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....